செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாரக்ஷி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன்.G இயக்கியுள்ள திரைப்படம் பகாசூரன். இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். மொபைல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இந்த காலத்தில் எவ்வளவு பிரச்னைகளை உருவாக்குகின்றன, அது பெண்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை கதைகளமாக எடுத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மோகன்.G.
இந்த திரைப்படத்தின் நாயகன் செல்வராகவன் மூன்று கொலைகளை செய்கிறார். இன்னொரு புறம் கல்லூரி பெண்களும், இளம் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கான காரணங்களை தேடி மற்றொரு நாயகனாக நட்டி செல்கிறார். செல்வராகவன் ஏன் கொலை செய்கிறார்? பெண்கள் ஏன் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்? என்ற காரணங்களை இணைத்து தன்னுடைய பாணியில் திரைக்கதை எழுதி படமாக்கியுள்ளார் இயக்குனர்.
கல்லூரி பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் செயல்படுகிறது. அதற்கு புதிய தொழில்நுட்பம் காரணமாக அமைகிறது. மேலும் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளனர். இதற்கான கதையை பல உண்மை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்து எடுத்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார்
மோகன் இயக்கிய முந்தைய திரைப்படங்கள் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகவும் அந்த சமூகத்தின் இளைஞர்களை தவறானவர்களாக சித்தரிப்பதாகவும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதைகளத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் பெண்களின் சில முடிவுகள் அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடுகின்றன. பெண்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
பகாசூரன் திரைப்படத்தில் தமிழகத்தில் உள்ள பிரபல கல்லூரியின் நிறுவனரை மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கின்றனர். குறிப்பாக இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கும் ராதாரவியை அந்த கல்லூரியின் நிறுவனராக சித்தரித்து காட்சிகளை அமைத்திருக்கிறார். இயக்குனர் அந்தக் கல்லூரியில் நடைபெறும் தற்கொலைகளுக்கு பின்னணியில் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக படத்தின் காட்சிகள் இடம் பெறுகின்றன.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அதற்கு ஏற்ற வகையில் பகாசூரன் திரைப்படத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார். இதில் கல்லூரி பெண்ணுக்கு தந்தையாக 50 வயது கடந்த நபராக நடித்திருக்கிறார். அமைதியாகவும் அதேசமயம் பழிவாங்கும் உணர்வு கொண்ட நபராக தன்னுடைய பங்களிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் நட்டி, ராதாரவி உள்ளிட்ட மற்றவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சரியாக செய்து கொடுத்திருக்கின்றனர்.
பகாசூரன் திரைப்படத்தில் தான் சொல்ல வந்த கருத்தை தன்னுடைய பாணியிலேயே திரைக்கதையாக்கி இருக்கிறார் மோகன். 2 மணி நேரம் 36 நிமிடம் ஓடக்கூடிய வகையிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாவது பாதி நீண்ட நேரம் போவது போன்ற ஒரு உணர்வை கொடுக்கிறது. மேலும் அடுத்தடுத்து இதுதான் நடக்கப் போகிறது, இதனால்தான் இது நடக்கிறது என்றும் எளிதாக யூகித்து விட முடிகிறது. மேலும் ஒரு வகையான நாடகத் தன்மையுடனே படம் நகர்கிறது. அத்துடன் நாயகியின் கதாபாத்திர வடிவமைப்பில் தெளிவு இல்லை.
திரௌபதி, ருத்ரதாண்டவங்களை ஒப்பிடும் பொழுது பகாசூரன் திரைப்படத்தின் உருவாக்கம் சற்று உயர்ந்திருக்கிறது. ஆனால் ஒரு கதையை விறுவிறுப்பாக ரசிகர்கள் யூகிக்காத வகையில் படமாக்கும் முறையை இயக்குனர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பகாசூரன் ரசிகர்களை சோதிக்கும் பகைவனோ என்று தோன்ற வைக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director selvaragavan