Home /News /entertainment /

Churuli movie review: சுருளி பட விமர்சனம்!

Churuli movie review: சுருளி பட விமர்சனம்!

சுருளி

சுருளி

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் இது மகத்தான முயற்சி. கலானுபவம் கூடிய முழுமையான படம். செம்பன் வினோத்,வினய் போர்ட், இடுக்கி ஜாபர், ஜோஜு ஜார்ஜ் உள்பட படத்தில் வரும் அனைவரும் நடிப்பில் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
அங்கமாலி டைரிஸ், இ.ம.யோ., ஜல்லிக்கட்டு படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் புதிய படம் சுருளி. சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அவரது பிற படங்கள் அளவுக்கு சுருளிக்கு விமர்சனங்கள் இல்லை. பாராட்டுக்கள் இல்லை. 'என்னய்யா குழப்புறான் மனுஷன்' என்ற விரக்தியே பெரும்பாலானவர்களிடம்.

சுருளியின் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அனைவரையும் வழி தப்பி விடுகிற பெருமாடனின் கதை. ஒரு நாள்  திருமேனி பெருமாடனை பிடிப்பதற்காக தலையில் கூடையுடன் செல்கிறார். மாடனை பிடித்தால் அவனை கூடையில் போட்டு கொண்டு வரலாம். திருமேனி தலையில் கூடையுடன் காட்டுக்குள் நடக்கிறார். அழகான காடு. ஆனால், திருமேனிக்கு வழி தெரியாது. கொஞ்ச தூரம் சென்றதும் வழியில் ஒரு பந்தை பார்க்கிறார். குழந்தைகளுக்கு விளையாட தரலாம் என அதனை எடுத்து கூடையில் போடுகிறார். சிறிது தூரம் சென்றதும் கூடைக்குள் அனக்கம். திருமேனி பந்து என்று கூடையில் போட்டது ஈனாம்பேச்சி. அது, திருமேனி மெதுவா போ மெதுவா போ என்கிறது. திருமேனி மெதுவாகப் போகிறார். பிறகு இந்த வழி போ என்கிறது. திருமேனி இந்த வழியில் செல்கிறார். பிறகு அந்த வழி போ என்கிறது. திருமேனி அந்த வழியில் செல்கிறார். அப்படி திருமேனி இப்போதும் கண்ட வழியெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார். தலையில் இருப்பது மாடன் என்பது திருமேனிக்கு இப்போதும் தெரியவில்லை. ஹா...ஹா...ஹா...

கதையைத் தொடர்ந்து காட்சிகள் விரிகின்றன. சப் இன்ஸ்பெக்டர் ஆண்டனியும், கான்ஸ்டபிள் ஷஜீவனும் மயிலாடும்குந்நு ஜோய் என்ற கிரிமினலைப் பிடிக்க சுருளி என்ற இடத்துக்கு செல்கிறார்கள். அடர்ந்த வனத்தில் பழுதடைந்த பாதையில் ஜீப்பில் செல்ல வேண்டும். எதற்காக சுருளிக்கு செல்கிறார்கள் என்ற கேள்விக்கு, ரப்பர் பிளான்டேஷனுக்கு குழி தோண்டுவதற்காக என்று குத்து மதிப்பாக சொல்கிறார்கள். அப்படியென்றால், உங்களை வரவழைத்தது தங்கனாகதான் இருக்கும் என்று அவர்களுக்கு சாதகமாக ஊர்க்கரர்களே ஒரு பதிலை தருகிறார்கள். ஆனால், தங்கன் ஊரில் இல்லை. அவன் வரும்வரை காட்டின் நடுவே இருக்கும் பிலிப்பின் சாராயக்கடையில் உண்டும், குடித்தும், பணி செய்தும் கூடுகிறார்கள்.

முதல்நாள் இரவில் ஷஜீவன் இரண்டு ஏலியன்களை கண்டு கனவில் விழித்தெழுகிறான். பயத்துடன் வெளியே சென்றுப் பார்த்தால் எரி நட்சத்திரம் ஒன்று தீச்சுவாலையுடன் பறந்து வருகிறது. அடுத்தடுத்த நாள்களில் இதேபோல் அமானுஷ்யமான பலவற்றை அவன் அனுபவப்படுகிறான். ஜோயை தேடுவதைவிட குடியும், வெடி இறைச்சியும் ஆண்டனிக்குப் பிடித்துப் போகிறது. குடிக்கிறான், வேட்டைக்கு செல்கிறான். பிலிப்பின் மகளுடைய முதல் புதுநன்மை விருந்தில் இருவரும் கலந்து கொள்கிறார்கள். இறுதிவரை ஜோய் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. பிலிப் உள்பட அங்குள்ளவர்கள் அனைவருக்கும் பல பெயர்கள். இறுதியில் தங்கன் வருகிறான். அவனை விசாரிக்கையில் வீட்டிலிருக்கும் அவனது மச்சான்தான் ஜோய் என்ப தெரிகிறது. அவனும் மயிலாடும்குந்நு ஜோய் அல்ல, மயிலாடும்பாறா ஜோய்.

துப்பாக்கி முனையில் தங்கனுடன் அவனது வீட்டிற்கு வருகிறார்கள். ஜோய் கழுத்துக்கு கீழ் உணர்வற்று தளர்ந்து கிடக்கிறான். அவனை ஜீப்பில் ஏற்றி இரவில் காட்டுக்குள் பயணத்தை தொடர்கிறார்கள் ஆண்டனியும், ஷஜீவனும். அடந்த காடு, சுற்றிலும் இருள். அவர்களுக்கு வழி மாறிவிடுகிறது. ஜோய் தனக்கு வழி தெரியும் என்கிறான். கூடவே ஒரு பழைய கதையை சொல்கிறேன் என்று முதலில் சொல்லப்பட்ட திருமேனியின் கதையை சொல்கிறான். இந்தமுறை திருமேனியின் இடத்தில் இரு போலீஸ்காரர்கள். அவர்களை தானும் மற்றவர்கள வழிமாற்றி அங்கேயே தங்க வைத்ததாகச் சொல்லி சிரிக்கிறான். இப்போது அவர்கள் கானகத்தின் சுருள்வில் பாதையில் சென்று கொண்டிருப்பது தெரிகிறது. கடைசியில் ஜீப்பானது அவர்களுடன் வெண்மையான ஒளிக்கோளத்தை நோக்கி உயர்த்தப்படுவதுடன் படம் முடிகிறது.

படத்தின் முதலில் சொல்லப்படும் திருமேனியின் கதையை வைத்து படத்தில் யார் திருமேனி, அவரை வழி மாற்றிவிடுகிற மாடன் என்ற கோணத்தில் இந்தப் படம் நம்மை யோசிக்க வைக்கிறது. ஷஜீவனுக்கு தோன்றும் இரு ஏலியன்கள், அவனது நடத்தைகள், அவனை பலரும் பார்த்திருப்பதாகச் சொல்வது, ஜோய் மீது சொல்லப்படும் அனைத்து குற்றங்களையும் ஷஜீவன் செய்திருப்பது போன்றவற்றை வைத்து, இதுவொரு டைம் லூப் திரைப்படம், ஷஜீவன் ஒவ்வொரு முறையும் ஒரு போலீஸ்காரனுடன் அங்கு வருகிறான். முன்பு வந்ததன் அவனது நினைவுகள்தான் அவனுக்கு தோன்றும் காட்சிப்பிழைகள், உண்மையில் ஜோயும் அவன்தான். போலீஸ்காரர்களுடன் போலீசாகச் சேர்ந்து அவர்களை ஒவ்வொரு முறையும் வழி தப்பிவிடுகிற மாடன் அவனே என்று ஒரு விளக்கத்தை இப்படத்துக்கு தர முடியும். இறுதிக் காட்சியில் ஜீப்பில் ஷஜீவனும், ஜோயும் இடம்மாறி காட்டப்படுவதை இதற்கு ஆதாரமாக சொல்லலாம்.

ஆனால், ஷஜீவன் யார் என்ற ஒரு மெல்லிய இழையை சொல்வதற்காகவா ஒரு படத்தை பெல்லிசேரி எடுத்தார்? இந்தப் படத்துக்கு இன்னொரு விளக்கமும் உள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் திருமேனி கதையில் வரும் திருமேனி வேறு யாரும் இல்லை. படத்தைப் பார்த்த நாம்தான். படத்தில் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தலையில் கூடைபோல் மூளையை திறந்து வைத்து படம் பார்க்க ஆரம்பிக்கிறோம். அந்த கதைதான் ஈனாம்பேச்சியாகிய மாடன். அதை புத்திசாலித்தனமாக படத்தின் ஆரம்பத்திலேயே நம் தலையில் ஏற்றிவிடுகிறார்கள். பிறகு அந்த மாடன் (கதை) சொல்படி நாம் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். படத்தில் வரும் நபர்களில் யார் திருமேனி, யார் மாடன், எப்படி அவர்கள் வழிமாற்றப்படுகிறார்கள் என படம் முடிந்து பல நாளாகியும் தேடிக் கொண்டிருக்கிறோம். 'தலையில் இருப்பது மாடன் என்பது திருமேனிக்கு இப்போதும் தெரியவில்லை. ஹா...ஹா...ஹா...' என்ற கதை சொல்லியின் சிரிப்பு, படத்தில் என்னதான் சொல்லியிருக்கிறார் என தேடிக்கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து படைப்பாளிக்குள் எழும் புன்னகை. இப்படி இருக்கலாம் என்று ஒரு யூகத்தை சொல்ல முடியுமே தவிர படத்தில் ஓர் அர்த்தத்தை கண்டுபிடித்துவிட முடியாது. காரணம், அதுதான் திருமேனியாகிய நாம் நடந்து செல்கிற முடிவில்லாத, சுற்றவிடுகிற பாதை.

கதையோட்டத்தை உன்னிப்பாக கவனித்தால் இது புரியும். இரண்டு போலீஸ்காரர்கள் தொழிலாளியின் வேடத்தில் ஒருவனை தேடி வருகிறார்கள். பேச்சும் சிரிப்புமாக பயணம் ஆரம்பிக்கிறது. ஒருகட்டத்தில் அதுவரை வினயமாக பேசிக் கொண்டிருந்த டிரைவர் கெட்டவார்த்தையில் பேச ஆரம்பிக்கிறான். ஊர்க்காரர்களும் அப்படியே பேச நமக்கு திக்கென்றாகிறது. ஓ... இப்பிடித்தான் கதை போகும் போல என்று எண்ணுகிறோம். ஆனால், அந்தத் திசையில் கதை நகர்வதில்லை. பாட்டும் கும்மாளமுமாக இருக்கும் சாராயக் கடையில், வயதான ஒருவர் ஏறிவர, சட்டென்று அனைத்தும் அடங்கி அமைதியாகும். ஆகா, இந்த மனிதனிடம்தான் ஏதோ இருக்கிறது என நினைப்போம். ஆனால், அப்படியும் இல்லை. இப்படி ஏலியன், திருவிழாவில் கன்னத்தில் அறைபவன், குழி குத்துவியாடா என கோடாலியுடன் துரத்தும் பாட்டி, வைத்தியம் பார்க்கும் மலைவாழ் பெண் ஆண்டனியிடம் சொல்லும் நமக்கு தெரியாத ரகசியம் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ நடக்கப் போவதாக பாவித்து எதுவுமில்லாமல் மாய்ந்து மறைந்து கொண்டேயிருக்கும். ஏதோ ஒன்றை படம் சொல்லப்போகிறது அது என்ன என்று தேடுகிறோமே, அதுதான் ஜோய். இந்தப் படத்தில் ஜோய் என்று எதுவும் இல்லை. இல்லாத ஒன்றையே நாம் படத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். படத்தில் காட்டப்படும் ஜோய் நமது பிரதிபலிப்பு. மாடன் தலைக்கேறிய நம்மைப் போலவே ஜோயும் தலையில் மட்டும் உணர்வுடன் இருக்கிறான். உண்மையை உணருகையில் மரத்துப்போன உணர்வுகள் திரும்ப வருகின்றன. பிறகு எல்லாமோ ஏகாந்தம்.

Also read... வசூலை அள்ளிக் குவிக்கிறது துல்கர் சல்மானின் குருப் திரைப்படம்...!

ஒரு படைப்பு என்பது பெரும் வனம். அதில் ஜோய் சொல்வது போல் மானுண்டு, மயிலுண்டு, குடி உண்டு, வெடி இறைச்சி உண்டு, வெடிகளும் உண்டு. அதை அனுபவிப்பதைவிட்டு, முன் அனுமானங்களுடனும், தீர்மானங்களுடனும் படைப்புக்குள் நுழையாதீர்கள். படைப்பு தரும் அனுபவத்துக்கு மேல் அதிலிருந்து நீதியோ, அறிவுரையோ எடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். சுருளியை நாம் இப்படியும் புரிந்து கொள்ளலாம்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் இது மகத்தான முயற்சி. கலானுபவம் கூடிய முழுமையான படம். செம்பன் வினோத்,வினய் போர்ட், இடுக்கி ஜாபர், ஜோஜு ஜார்ஜ் உள்பட படத்தில் வரும் அனைவரும் நடிப்பில் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். கேமராவும் , பின்னணி இசையும் சமீபத்தில் எந்தத் திரைப்படத்திலும் இத்தனை சிறப்பாக வெளிப்பட்டதில்லை. மாடனை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் படத்தைப் பார்த்தால் அதுவொரு மோகன அனுபவம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Movie review

அடுத்த செய்தி