Home /News /entertainment /

Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!

Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!

ப்ரோ டாடி

ப்ரோ டாடி

Bro Daddy : ப்ரோ டாடி போன்ற படங்கள் நமது கலாச்சார இறுக்கத்தை தணிக்கும். வார இறுதியில் குடும்பத்துடன் சிரிக்க ப்ரோ டாடி நல்ல தேர்வு.

மோகன்லாலை வைத்து லூசிபர் பொலிடிகல் த்ரில்லரை இயக்கிய பிருத்விராஜ; இந்தமுறை பேமிலி என்டர்டெயின்மெண்டுடன் வந்திருக்கிறார். சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க பாணியில் படத்தை எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் இந்தியில் பதாய் ஹோ என்ற திரைப்படம் வெளியானது. நாயகனுக்கு திருமணம் நடக்கயிருக்கும் நேரத்தில் அவனது வயதான அம்மா கர்ப்பமாகிவிடுவார். இதனை அந்தக் குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது, நாயகனின் காதலியின் குடும்பம் எப்படி இதனை எடுத்துக் கொள்கிறது என்பதை நகைச்சுவையுடன் பதாய் ஹோ சொன்னது. அதே கதைதான் ப்ரோ டாடியும். இதில் அம்மாவுடன் சேர்ந்து மகனின் காதலியும் திருமணத்துக்கு முன் கர்ப்பமாகிவிடுகிறார்.

ஆடம்பரமான வீடு, அளவுக்கு அதிகமான பணம், பென்ஸ் கார், சிங்கிள் மால்ட் விஸ்கி என வாழ்க்கையை சுகபோகமாக அனுபவிக்கும் கிறிஸ்தவ அச்சாயன்ஸை மலையாள சினிமா அதிகளவில் காட்சிப்படுத்தியிருக்கிறது. அப்படியொரு அச்சாயன்தான் மோகன்லால். அவரது மனைவி மீனா. அவர்களின் ஒரே மகன் பிருத்விராஜ். மோகன்லாலின் நெருங்கிய நண்பர் லாலு அலெக்ஸ். அவரது மனைவி கனிகா. ஒரே மகள் கல்யாணி. இரு குடும்பத்தின் வாரிசுகளும் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்கள்.

பெற்றோர்கள் முன்னிலையில் பரஸ்பரம் அறியாதவர்கள் போல் நடித்தாலும் 4 வருடங்களாக இவர்கள் பெங்களூருவில் லிவிங் டுகெதரில் இருப்பது இருவீட்டாருக்கும் தெரியாது. இந்நிலையில் கல்யாணி கர்ப்பமாகிறார். அதேநேரம் மீனாவும் கர்ப்பம்தரிக்கிறார். பிருத்விராஜும், கல்யாணியும் எப்படி பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்கிறார்கள், அவர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்கிறது படம்.

இதையும் படிங்க.. ஒரு மாசத்துக்கு ரூ. 5 லட்சம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் சம்பளம் இதுதான்!

மோகன்லால் பல படங்களில் அனாயாசமாக ஊதித்தள்ளிய கதாபாத்திரம். காதல் மனைவி மீனாவிடம் காட்டும் ரொமான்ஸும், மனைவியின் கர்ப்பத்தை தாயிடம் மறைக்கையில் அவர் காட்டும் முகபாவங்களும் அருமையானவை. பிருத்விராஜ் கல்யாணியின் கர்ப்ப ரகசியத்தை விமான நிலையத்தில் வைத்து மோகன்லாலிடம் வெளிப்படுத்துகையில் இருவரிடமும் வெளிப்படும் ரியாக்ஷன் வாய்விட்டு சிரிக்கவைக்கும்.

மீனாவின் தோற்றமும், முகத்தில் தொக்கி நிற்கும் புன்னகையுமே அவரது கதாபாத்திரத்துக்கு போதுமானது. இவர்கள் இருவரையும்விட சிறப்பான கதாபாத்திரம் லாலு அலெக்ஸுக்கு. மீனாவை ஒருதலையாக காதலித்து, பெண் கேட்டுப் போன இடத்தில் மீனாவின் தந்தை துரத்தியடித்த பிளாஷ்பேக் நெஞ்சில் இருந்தாலும், மீனாவை பார்க்கும் போதெல்லாம் ஜெர்க் அடித்து நின்றுவிடுகிற அந்த கைகூடாத காதலும், அதனை ரகசியமாக ரசிக்கும் மோகன்லாலும் க்யூட்.

லாலு அலெக்ஸின் வயிற்றுப் பிரச்சனை, மீனாவின் மீதான காதலில் தனது மகளுக்கு மீனாவின் பெயரை (அன்னா) வைத்தது, தனது விளம்பரக் கம்பெனி மீது அவர் கொண்டிருக்கும் ஈடுபாடு என அவரைச்சுற்றி பின்னப்பட்ட அனைத்தையும் திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது திரைக்கதைக்கு கூடுதல் ரசனையை தருகிறது.

பிருத்விராஜும், கல்யாணியும் இன்றைய தலைமுறையின் பிரதிநிதிகள். மகளின் வாந்தியை வைத்து கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கனிகா, மருமகளின் முகத்தைப் பார்த்தே விஷயத்தை யூகித்தறியும் மோகன்லாலின் அம்மா மல்லிகா சுகுமாரன், திருமண ஆர்கனைசராக வரும் சௌபின் சஹிர் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஸ்கோர் செய்துள்ளார்கள்.

கெட்டவர்களோ, வில்லனோ இந்த கதையில் இல்லை என்பதே ப்ரோ டாடியின் முதல் வெற்றி. அப்பர் கிளாஸ் பேமிலி என்பதால் கல்யாணத்துக்கு முன் ஏற்படும் கர்ப்பத்தை ஜஸ்ட் லைக் தட் அவர்கள் டீல் செய்வது உறுத்தவில்லை. படத்தின் டைட்டிலில், மோகன்லால், மீனாவை திருமணம் செய்யும் போது அவர் கர்ப்பமாக இருந்தார் எனக்காட்டியுள்ளனர். "உனக்கு எப்படிடா இதுக்கெல்லாம் நேரம் இருக்கு. உன் அப்பாவும் இப்படித்தான்" என்று மோகன்லாலின் அம்மா நமட்டு சிரிப்புடன் மகனை வாரும் இடத்தில் இந்தப் பிரச்சனை ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. லாலு அலெக்ஸை வைத்து படத்தை முடித்தவிதமும் இதம்.

இதையும் படிங்க.. ரசிகர்களுக்காக மீண்டும் அவருடன் இணையும் விஜய் டிவி பிரியங்கா!

படம் பார்க்கையில் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எந்த தொழில்நுட்பமும் நம்மை இடைஞ்சல் செய்யவில்லை என்பதே அந்தந்ததுறைக்கான கிரெடிட். இயக்குனராக இரண்டாவது சிக்சர் அடித்துள்ளார் பிருத்விராஜ். பல குடும்பங்களின் வாழ்நாள் நிம்மதியை காவு வாங்கும்  ஒரு பிரச்சனையை 'அதெல்லாம் ஒண்ணுமில்லையா, போகிற போக்குல எல்லாத்தையும் அனுபவிக்கணும், கடந்து போகணும்' என்று சொல்கிற ப்ரோ டாடி போன்ற படங்கள் நமது கலாச்சார இறுக்கத்தை தணிக்கும். வார இறுதியில் குடும்பத்துடன் சிரிக்க ப்ரோ டாடி நல்ல தேர்வு.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Malayalam actor, Movie review

அடுத்த செய்தி