• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bhramam Review - பிருத்விராஜின் ப்ரம்மம் எப்படி இருக்கிறது?

Bhramam Review - பிருத்விராஜின் ப்ரம்மம் எப்படி இருக்கிறது?

ப்ரம்மம்

ப்ரம்மம்

அந்தாதுனில் ராணி என்ற பூனையை படத்தின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தி, அதை ஒரு கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கும்விதம், ஆயுஷ்மான் குரானாவுக்கு கண் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் இன்ஸ்பெக்டர் மற்றும் தபுவிடம் ஒரு ஊசலாட்டமாக தொடர்ந்து இருந்து கொண்டேயிருப்பது என பல விஷயங்கள் இதில் இல்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவி.கே.சந்திரன். சக ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக புரமோஷன் ஆவதைப் பார்த்து தமிழில் யான் என்ற படத்தை இயக்கினார். படம் ப்ளாப். தனது இரண்டாவது படமாக மலையாளத்தில் பிருத்விராஜ், ராஷி கண்ணா, மம்தா மோகன்தாஸ் நடிப்பில் ப்ரம்மம் படத்தை இயக்கியுள்ளார். நேற்று இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. 

பிருத்விராஜ் ஒரு கண் தெரியாத பியானோ கலைஞர். ஐரோப்பா சென்று செட்டில் ஆக வேண்டும் என்று நினைப்பவர். எதிர்பாராதவிதமாக கஃபே வைத்திருக்கும் ராஷி கண்ணாவுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. பிருத்விராஜுக்கு கண் தெரியும், சில காரணங்களுக்காக அவர் கண் தெரியாதவராக நடிக்கிறார் என்பது ராஷி கண்ணா உள்பட யாருக்கும் தெரியாது. இந்நிலையில், ஒரு முன்னாள் நடிகரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பேரில் செல்கையில் அங்கு நடந்த ஒரு கொலைக்கு பிருத்விராஜ் சாட்சியாகிறார். அவருக்கு கண் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் கொலையாளிகளுக்கு. அந்த சந்தேகம் பிருத்விராஜை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார், கொலையாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா என்பது கதை.

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் மலையாள ரீமேக் இந்த ப்ரம்மம். திறமையான நடிகர்கள், அதே காட்சிகள், இசையும்கூட பெரும்பாலும் ஒரிஜினலில் வருவதையே பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனை இருந்தும், அந்தாதுன் படத்தில் இருந்த 'ப்ளோ' இதில் இல்லை

Also read... 8 மொழிகளில் வெளியாகும் பிரபாஸின் 25 வது படம்...!

அந்தாதுனில் ராணி என்ற பூனையை படத்தின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தி, அதை ஒரு கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கும்விதம், ஆயுஷ்மான் குரானாவுக்கு கண் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் இன்ஸ்பெக்டர் மற்றும் தபுவிடம் ஒரு ஊசலாட்டமாக தொடர்ந்து இருந்து கொண்டேயிருப்பது என பல விஷயங்கள் இதில் இல்லை. முக்கியமாக  இந்த ஊசலாட்டம்தான், அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை நமக்குள் ஏற்படுத்தும். ப்ரம்மத்தில் அந்த சந்தேகத்தை ரவி கே.சந்திரன் முற்றிலுமாக துடைத்துவிட்டார். (அந்தாதுன்னில் இரண்டாவது கொலை நடக்கையில் நாயகனின் தனது ஸ்டிக்கை தவறவிடுவார். தபு திரும்பிப் பார்க்கையில் அவர் குனிந்து ஸ்டிக்கை எடுத்துக் கொண்டிருப்பார். நாயகன் அவரைப் பார்த்தாரா இல்லையா என்பது அவருக்கு தெரியாது. ஆனால், ப்ரம்மத்தில் பிருத்விராஜ் நேராக மம்தா மோகன்தாஸை பார்த்துக் கொண்டிருப்பார்) அதேபோல் கிளைமாக்ஸுக்கு முன்பு இன்ஸ்பெக்டரிடம் பிளாக்மெயில் செய்யும் காட்சியில் அவர்கள் செய்திருக்கும் மாற்றம் குளறுபடியிலேயே முடிந்திருக்கிறது

ஆயுஷ்மான் குரானாவுக்கும், ராதிகா ஆப்தேக்கும் இடையிலிருக்கும் இயல்பான உரையாடல் ப்ரம்மத்தில் பிருத்விராஜ், ராஷி கண்ணாவிடம் இல்லை. அதேபோல் இன்ஸ்பெக்டாராக வரும் உண்ணி முகுந்தனிடம் ஒரிஜினலில் நடித்திருப்பவரின் முரட்டுத்தனம் கலந்த இன்னசென்ஸ் மிஸ்ஸிங். முன்னாள் நடிகராக ப்ரம்மத்தில் சங்கர் சரியான தேர்வு. மம்தா மோகன்தாஸ் சிறப்பாக நடித்திருந்தாலும் தபு சின்ன பார்வையில் கொண்டு வரும் நெகடிவ் ஷேடை மம்தாவால் தர முடியவில்லை

அந்தாதுன்னைவிட ப்ரம்மத்தில் சிறப்பாக இருந்த ஒரே கதாபாத்திரம், போலி மருத்துவராக வரும் ஜெகதீஷ். தனது அனுபவத்தால் அந்தக் கதாபாத்திரத்தை அனாயாசமாக செய்துள்ளார். அனன்யாவும் நிறைவாக நடித்துள்ளார். இயக்கத்துடன் ரவி கே.சந்திரனே ஒளிப்பதிவும் செய்துள்ளார். அதே கதை, அதே காட்சிகள், ஆனால், ஸ்ரீராம் ராகவன் காட்சிகளில், உரையாடல்களில் வைத்திருந்த நுட்பத்தை தவறவிட்டதால் படம் ஒரிஜினலைவிட இரண்டு படி கீழேயே உள்ளது

அந்தாதுன் பார்க்காதவர்கள் ப்ரம்மத்தை ரசிக்கலாம். பார்த்தவர்களுக்கு ப்ரம்மத்தில் புதிதாக ஏதுமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: