முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vaathi Movie Review: தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் வாத்தி என்ன சொல்கிறது?

Vaathi Movie Review: தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் வாத்தி என்ன சொல்கிறது?

வாத்தி

வாத்தி

தனுஷ் நடித்திருக்கும் வாத்தி திரைப்படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. தமிழ் -  தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் சொல்லும் விஷயங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சிற்றம்பலம்,  நானே வருவேன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வாத்தி.  இந்த திரைப்படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்த வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வாத்தி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.  பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க தனுஷூடன், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், சாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1990களில் உருவெடுத்த கல்வி வியாபாரத்தின் பின்னணியில் வாத்தி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 1998 இல் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.  கல்வியை வியாபாரமாக பார்க்கும் பெரும்புள்ளிகளுக்கும்,  கல்வியை சேவையாக பார்க்கும் ஒரு ஆசிரியருக்கும் இடையேயான மோதலே வாத்தி.

அரசு பள்ளிகளில் உள்ள நல்ல ஆசிரியர்களை பெரும் தொகைக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றனர்.  இதனால் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு,  பள்ளிகளை மூடும் சூழல் ஏற்படுகிறது.  இதனால் அரசுக்கு சிக்கல் வருகிறது. அந்த சமயத்தில் தனியார் பள்ளி உரிமையாளர்கள் அரசு பள்ளியை தத்தெடுக்கின்றனர்.  மேலும் தங்களிடம் இருக்கும் தரம் குறைந்த ஆசிரியர்களை அந்த பள்ளிக்கு அனுப்புகின்றனர்.  ஆனால் அப்படி செல்லும் தனுஷ்,  பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சோழவரம் அரசு பள்ளியை 100% தேர்ச்சியடைய வைக்கிறார். அதன் பிறகு அவருக்கு வரும் சிக்கல்கள் என்ன? அவரை நம்பிய மாணவர்களை தேர்ச்சி அடையவைத்தாரா? என்பதே வாத்தியின் மீதி கதை.

இந்த திரைப்படத்தின் கதை ஒரு பள்ளியின் பின்னணியிலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது. 90களில் பிற்பகுதியில் கல்வியை மையமாக வைத்து நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை காட்சிகளாக மாற்றியுள்ளனர்.  நடுத்தர மக்களின் கனவான கல்வியை வியாபாரமாக்க நடைபெற்ற சம்பவங்கள் சினிமாதனத்துடன் படமாக்கியுள்ளனர்.

செயல்படாத அரசு பள்ளிகூடம்,  மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க முயற்சிக்கும் ஆசிரியர்,  அவருக்கு வரும் சிக்கல் என்ற கதைகளத்தில்  ரசிகர்கள் பல படங்களை பார்த்துள்ளனர். அந்தப் படங்களின் சாயல் கொண்ட காட்சிகள் இந்த படத்திலும் உள்ளன. அந்த காட்சிகளை தவிர்த்து ரசிகர்கள் பார்க்காத அல்லது அவர்களுக்கு தெரியாத சில விஷயங்களை சேர்த்து இருக்கலாம்.

இந்த திரைப்படத்தில் சென்டிமென்ட் விஷயங்கள் என சிலவற்றை சேர்த்துள்ளனர். அது படத்திற்கு பக்கபலமாக அமையும் எனவும் படக்குழுவினர் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அவை ரசிகர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.  இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் இடம் பெறும் வா வாத்தி பாடல் மற்றும் அவரின் பின்னணி இசை கவனிக்க வைக்கின்றன.

வாத்தியாக வரும் நடிகர் தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை வழக்கம்போல் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்.  அதேபோல் அரசு பள்ளி ஆசிரியையாகவும் தனுசை காதலிக்கும் பெண்ணாகவும் வரும்  சம்யுக்தாவுக்கு காட்சிகள் குறைவு.  ஆனால் வரும் காட்சிகளில் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார்.  அவரை தனுஷுக்கு அருகில் நிற்கும் கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் அவருக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை கொடுக்கும் வகையில் காட்சிகளை எழுதி இருக்கலாம்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டதால் ஆந்திர - தமிழக எல்லைப் பகுதியில் இருக்கும் சோழவரம் என்று ஊரை கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளனர். அதன் மூலம் இது தமிழ் படமா அல்லது தெலுங்கு படமா என்ற கேள்வி வராமல் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கின்றனர். இருந்தாலும் தமிழில் பார்க்கும் பொழுது இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வையே கொடுக்கின்றது. மேலும் தெலுங்கு திரைப்படங்களுக்கு என ஒரு தனித்துவம் உள்ளது. அதேபோல் தமிழுக்கு என்ன தனி தனித்துவம் உள்ளது.  இந்த திரைப்படம் இரண்டிலும் இணையாத வகையில் அமைந்திருக்கிறது.

வாத்தி திரைப்படத்தில் சுவாரசியமான காட்சிகள் இல்லை என்றாலும் மிக மோசமானவை என்ற காட்சிகளும் இல்லை. எனவே, இந்த வாத்தி மாணவர்களை செண்டம் வாங்க வைத்து ஜஸ்ட் பாஸ் ஆகிறார் என்றே தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Dhanush, Movie review