• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • 2020 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 பிரபலங்கள்..

2020 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 பிரபலங்கள்..

2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகளவில் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியல் இதோ..

 • Share this:
  2020 ஆம் ஆண்டு உச்சரிப்பதற்கே ரொம்ப பேன்ஸியாக இருப்பதால் அனைவரும் 2020 ஆம் ஆண்டை நோக்கி ஆவலாக காத்திருந்தோம். ஆனால் கொரோனா வைரஸும் 2020ஆம் ஆண்டை நோக்கி தான் காத்திருந்திருக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை. சரி.. துயரங்களை கடுத்து, 2020 ஆம் ஆண்டு முடியும் தருணத்தில் அந்த ஆண்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை திரும்பி பார்க்கலாம். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகளவில் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியல் இதோ.

  1. வனிதா விஜயக்குமார்  வனிதா விஜயகுமார் 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த போட்டியில் பெயரை சம்பாதித்த வனிதா தொடர்ந்து விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று மக்களை மகிழ்வித்து வந்தார்.

  ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை ஜூன் மாதம் 24 ஆம் தேதி முத்த மழையுடன் திருமணம் செய்து வீடியோ வெளியிட்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்ததன் பெயரில் வனிதா மீது பல விமர்சனங்கள் எழுந்தது. அனைத்தையும் எதிர்த்து பீட்டர் பாலிற்காக போராடினார் வனிதா.

  இருவரும் தங்களின் யூடியூப் பக்கத்தில் ஒன்றாக சாப்பிடுவது, பிக்னிக் செல்வது என வீடியோ பதிவிட்டு வந்தனர். ஆனால் எதிர்பாராத நேரத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக வனிதா அக்டோபர் மாதம் ட்வீட் செய்தார். பின்பு உருக்கமான வீடியோ ஒன்றையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார் . அதில் ”என் வாழ்நாளில் நான் ஏமாந்தது அன்பினால் தான். ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன்.. காதல், திருமணம் எனக்கு அமையவில்லை” என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்து பலரும் வனிதாவிற்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த குறுகிய கால காதல் ஜோடியான வனிதா-பீட்டர் பால் தம்பதி பற்றிய செய்தியானது 2020 ஆம் ஆண்டு ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்த்த ஒன்றாகும்.

   

  2.நடிகை ஜோதிகா  நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த 36 வயதினேலே திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் கால் பதித்தார். ’வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல’ என்ற படையப்பா படத்தின் வசனத்தை போல இன்றும் ஸ்வீட் சிக்ஸ்டின் ஆக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ஜோதிகா.

  அந்த வகையில் படப்பிடிப்பிற்காக ஜோதிகா தஞ்சாவூர் சென்றுள்ளார். அப்போது தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அது குறித்து விழாவில் பேசிய ஜோதிகா ’கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்து பராமரிக்கிறார்கள். உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை’ என்று கூறினார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்சையாக வெடித்தது.

  ஜோதிகா கோயிலுக்கு எதிராக பேசுகிறார் என விமர்சனங்கள் எழுந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ’ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போது ஜோதிகா பேசியது இப்போது சமூக ஊடங்ககளில் விவாதமாக மாறியுள்ளது. இதே கருத்தை விவேகானந்தர் போல ஆன்மிக பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள்’ என சர்ச்சை உண்டாக்குபவர்களுக்கு நெத்தியடி கொடுத்தார் சூர்யா. பின்பு ஜோதிகா கொடுத்த ரூ.25 லட்சம் நிதியின் மூலமே அரசு மருத்துவமனை சீரமைக்கப்பட்டது.

  3. சுஷாந்த் சிங் ராஜ்புட்  சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சுஷாந்தின் மரணத்தில் பல சந்தேகம் இருப்பதாக சுஷாந்த் குடும்பத்தினர் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். சுஷாந்தின் தந்தை, நடிகை ரியா சக்ரபர்த்தி மீது புகார் அளித்தார். இருவரும் காதலித்து வந்த போது சுஷாந்த் சம்பாதித்த பணத்தை ரியா எடுத்துக்கொண்டாதாக கூறினார். பின்பு சுஷாந்த் மரணம் குறித்து ரியாவிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். மும்பை போலீசார் ரியாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சுஷாந்த் வழக்கு சிபிஐ விசராணைக்கு மாற்றப்பட்டது.

  சுஷாந்துக்கு தெரியமாலேயே ரியா அவருக்கு போதைப் பொருள் கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போதைப் பொருள் வாங்கிய விவகாரம் தொடர்பாக ரியா சக்ரபர்த்தியை தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 28 நாட்கள் சிறையில் இருந்த ரியா ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே சுஷாந்தின் பணத்தை ரியா அபகரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுஷாந்தின் மரணம் இந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

  4.நடிகர் விஜய்  தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவர் படம் வெளியாகும் அன்று ரசிகர்களுக்கு தீபாவளி தான். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு தளத்திற்கே சென்று நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்பு அங்கிருந்து விஜயை அழைத்து சென்றதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிகில் பட சம்பளம் தொடர்பாக விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் பஸ் மேல் ஏறி நின்று விஜய் எடுத்த செல்ஃபி வேற லெவல் ட்ரெண்டானது. 2020 ஆம் ஆண்டில் நடிகர் விஜய்யின் செல்பி படம் தான் அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டது என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

  5.நயன்தாரா-விக்னேஷ் சிவன்  இன்றைய தமிழ் சினிமாவில் இருக்கும் கியூட்டான காதல் ஜோடி என்றால் நயன் - விக்கிதான். இயக்குனர் விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் . அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் நயன்தாரா, விஜய் சேதுபதியை வைத்து 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் வெற்றிப்பெற்றது மட்டுமில்லாமல் நயன்தாராவின் மனதையும் வென்றார் என்று தான் கூறவேண்டும். நயன் எந்த ஒரு சோஷியல் மீடியாவிலும் இல்லை என்றாலும் இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை விக்கி தவறாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அப்படி விக்கியும் நயனும் குடும்பத்துடன் கோவா சென்ற புகைப்படம் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் பிரபலமான காதல் ஜோடியாக இருவரும் வலம் வந்தனர் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

  6. மீரா மிதுன்  சிலர் என்ன சொல்லுகிறோம் என்பது தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்கள். ஆனால் சர்ச்சை செய்ய வேண்டும் என்று வீம்பாக பேசுபவர் என்ற பெயரை பெற்றவர் பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன். அவர் நடிகர் சூர்யா மற்றும் விஜய் மீது பல சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் சூர்யா மற்றும் விஜய் குடும்பத்தினரை தரைகுறைவாக பேசியதை கேட்டு ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்த வீடியோ திரைத்துறையில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் நடிகர் விஜயை மகேஷ் பாபு மரக்கன்று நடும் சேலஞ்சில் டேக் செய்திருந்தார். அந்த சேலஞ்சை ஒப்புக்கொண்டு விஜய் தனது வீட்டில் மரக்கன்று நட்டு ட்விட்டரில் பதிவிட்டார். இதனை பார்த்த மீரா மிதுன் ‘உங்கள் வீட்டில் மரக்கன்று நடுவது சமூக அக்கறை இல்லை, நடிகர் விவேக்கிடம் எப்படி நட வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் என பதிவிட்டு நடிகர் விவேக்கை டேக் செய்திருந்தார். இதை பார்த்து கோபமடைந்த விவேக், ’மகேஷ் பாபு மற்றும் விஜய் இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள். உங்களின் இந்த ட்வீட் மில்லியன் விஜய் ரசிகர்களை காயப்படுத்திருக்கலாம். இப்போது கூட மன்னிப்பு கேட்டு விஜய் ரசிகர்களின் அன்பை பெறுங்கள் ‘ என கூறியிருந்தார்.

  7.சனம் ஷெட்டி  2019 ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குப்பெற்றவர் இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன். இவரது காதலியான சனம் ஷெட்டி. தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு சில காரணங்களால் தர்ஷன் சனம் ஷெட்டியை பிரிந்துவிட்டார்.தர்ஷன் தன்னை நிச்சயம் செய்துக்கொண்டு திருமணம் செய்ய மறுப்பதாக சனம் போலீசில் புகார் கொடுத்தார்.நான் தர்ஷனுக்கு பல உதவி செய்துள்ளேன் .தற்போது பல பிரபலங்களின் அறிமுகம் கிடைத்ததால் என் காதலை உதறிவிட்டார் என பல குற்றசாட்டுகளை முன் வைத்தார்.சனம்,தர்ஷன் இருவரை பற்றியும் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.இருவரும் மாறி மாறி ஒருவரை பற்றி ஒருவர் குறை சொல்லி வந்தனர்.சனம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  இந்த சர்ச்சை மூலம் பிரபலமான சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று 50 நாட்கள் கழித்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

  8. எஸ்.பி.பாலசுப்ரமணியம்  இந்திய சினிமாவில் ஒரு முன்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவரின் குரலுக்கு அடிமையாகாமல் யாரும் இருக்கமுடியாது. இவர் 16 மொழிகளில் 40,000 க்கும் மேல் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி எஸ்.பி.பி எப்படியாவது மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்கிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். எஸ்.பி.பியின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  9. நடிகர் சிம்பு  லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் சிம்பு. இவர் மீது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரத்திற்கு வரவில்லை, கதையை அவருக்கு ஏற்றது போல் மாற்றிவிடுவார் என பல குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளது. அப்படி ஒரு பிரச்சனையில் கடந்த ஆண்டு படத்திலிருந்து சிம்புவை நீக்குவதாக மாநாடு படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு அந்த பிரச்சனையை பேசி மாநாடு படத்தில் மீண்டும் சிம்பு நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டனர். இது சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு சிம்பு தன் உடல் எடையை குறைத்து மாஸ் கம் பேக் கொடுத்துக்கிறார். அதோடு இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலமாக சிம்பு மாறியுள்ளார்.

  10. நடிகை சித்ரா  சின்னத்திரை நடிகை சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் உடன் இருந்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது, இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைதாகியுள்ளார். ஆனால் ’சித்ராவின் அம்மா என் மகளை ஹேம்நாத் தான் கொன்றுவிட்டார் ‘என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். சின்னத்திரையில் சித்ராவுடன் நடித்த சக நடிகர்களும் சித்ரா தற்கொலை செய்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என கூறி வருகின்றனர். தற்போது வரை சித்ராவின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சி அவிழவில்லை. சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட சம்பவங்களில் சித்ராவின் மரணமும் ஒன்று.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: