ஈஸ்வரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இரண்டரை கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கொடுத்தால் மட்டுமே ஈஸ்வரன் வெளியாகும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து முடித்து கொடுக்காததால் அவர் ஏழரை கோடி ரூபாய் நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது.
அதனடிப்படையில் சிலம்பரசன் நடிக்கும் மூன்று படங்களில் அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் இருந்து இரண்டரை கோடி ரூபாயை தயாரிப்பாளர் சங்கத்திற்கு செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனை ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளரும் ஒத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது அவர் அதனை கொடுக்க மறுப்பதால் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த இரண்டரை கோடி ரூபாயை கொடுக்கும் வரை படத்தை வெளியிடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என டிஜிட்டல் நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதமொன்றை எழுதியுள்ளது.
இப்படியான நடவடிக்கை கட்டப்பஞ்சாயத்து செய்யும் செயல் என சிலம்பரசனின் தந்தை டி ராஜேந்தர் காலையில் செய்தியாளர்களை சந்தித்து முறையிட்டார்.
தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிலம்பரசனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை தான் நான் திரும்பி கேட்கிறேன் என்றும் இது கட்டப்பஞ்சாயத்து ஆகாது என்றும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் தற்போது பணத்தை கொடுக்க மறுப்பதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று அதன் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஈஸ்வரன் திரைப்படம் திட்டமிட்டபடி 14ஆம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நஷ்ட ஈடு கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதி அளிக்கும் என்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருக்கிறார்கள். இதனை சட்டரீதியாக சந்திக்க டி.ராஜேந்தர் தரப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eeswaran Movie, Simbu