எம்ஜிஆர், ஜெயலலிதா, முத்துராமன், நம்பியார், வி.கே.ராமசாமி, ராஜகோகிலா, சோ ராமசாமி, பண்டரிபாய் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவாக்கி வெளியான படம்தான் 'ஒரு தாய் மக்கள்'. நல்ல கூட்டணி என்றாலும் படம் ஓடவில்லை. திரைக்கு வந்து ரசிகர்களை ஏமாற்றிய படம், திரைக்கு வருவதற்கு முன்பே மூவரை ஏமாற்றியிருந்தது.
அறுபதுகளில் எம்ஜிஆரை வைத்து கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், சந்திரோதயம், அடிமைப்பெண் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் கே.சங்கர். பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர். கலங்கரை விளக்கம் படத்தில் பாவேந்தரின் சங்கே முழங்கு பாடலையும், கே.ஆர்.விஜயா நடித்த பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாவேந்தரின் தமிழுக்கு அமுதென்றுபேர் பாடலையும் பயன்படுத்தியிருப்பார். தமிழ் மீது பற்று கொண்ட இவர் தமிழரல்ல, மலையாளி. முழுப்பெயர் கே.சங்கர மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் இயக்கியிருக்கிறார். அதிகமும் தமிழ்ப் படங்கள்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தம்பி என்.எஸ்.திரவியமும், டி.ஏ.மதுரத்தின் தம்பி டி.ஏ.துரைராஜும் இணைந்து நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்கள் தயாரிக்க முடிவு செய்து எம்ஜிஆரை அணுகினர். கலைவாணர் மீதுள்ள மரியாதையில் எம்ஜிஆரும் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தியில் வெளியான ஆயி மிலன் கி மேளா என்ற படத்தை ரீமேக் செய்வது என முடிவானது. எம்ஜிஆரே படத்தை கே.சங்கர் இயக்கட்டும் என முடிவு செய்தார். வசனம் எழுதும் பொறுப்பு ஆரூர்தாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திப் படத்தைப் பார்த்து ஆரூர்தாஸ் தமிழ்ப் படத்துக்கான முழு திரைக்கதை, வசனத்தை எழுதினார். படப்பிடிப்பும் தொடங்கியது. வசந்தம் வந்தது என பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் எம்ஜிஆருடன் சரோஜாதேவி, ஜெய்சங்கர் நடித்தனர். ஆனால், சில நாள் படப்பிடிப்புடன் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு எம்ஜிஆர் சுடப்பட்டது போன்ற நிகழ்வுகளால் வசந்தம் நிரந்தரமாக நின்று போனது.
1971 இல், டி.ஏ.துரைராஜு, வசந்தம் போனது போனதுதான், அதனை தெலுங்கில் வர வைக்கலாம் என்றுப் பார்க்கிறோம் என ஆரூர் தாஸிடமிருந்து திரைக்கதையை வாங்கிச் சென்றுள்ளார். இது நடந்த சில மாதங்கள் கழித்து ஒரு தாய் மக்கள் என்ற படம் நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் சார்பில் தொடங்கப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா, முத்துராமன் நடித்தனர். பிறகுதான் அது வசந்தம் வந்தது படத்தின் கதை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. வசந்தம் வந்தது படத்தின் இயக்குனர் கே.சங்கருக்கு பதில் நீலகண்டனும், வசனகர்த்தா ஆரூர்தாஸுக்குப் பதில் சொர்ணமும், நாயகி சரோஜாதேவிக்குப் பதில் ஜெயலலிதாவும் மாற்றப்பட்டிருந்தனர்.
1967 இல் சரோஜாதேவி திருமணம் செய்து கொண்டார். அது எம்ஜிஆருக்குப் பிடிக்கவில்லை. அதனால் சரோஜாதேவியை அவர் மாற்றியிருக்கலாம். ஆனால், இயக்குனர், வசனகர்த்தா மாற்றப்பட்டதற்கான காரணம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது. அவர்களுக்கு முன்பணம் கொடுத்ததோடு சரி. முழுத்தொகை வழங்கப்படவில்லை. ஏமாற்றப்பட்ட மூவருக்கும் ஒரே ஆறுதலாக அமைந்தது, ஒரு தாய் மக்கள் ஓடவில்லை, தோல்வியடைந்தது என்பதுதான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Movies