பெண்களுக்காக பிரத்யேகமாக தமிழில் கோடீஸ்வரி விளையாட்டு நிகழ்ச்சி "கலர்ஸ் தமிழ்" தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய மீனா கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ராதிகா - மீனா இருவரும் தங்களது திரைத்துறை நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
தனது மகள் நைனிகா தன்னைப் போலவே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானது தொடங்கி, தனது குழந்தைப் பருவத்தை மற்ற குழந்தைகளைப் போல் கழிக்காமல் தவற விட்டுவிட்டதாகவும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மீனா தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆனது பற்றியும், ரஜினிகாந்துடன் 168 படத்தில் நடிக்கும் அனுபவங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். மீனா கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் கலர்ஸ் டிவி தெரிவித்துள்ளது.