லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி திரைக்கு வந்த படம் ‘மாஸ்டர்’. ஏற்கெனவே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்திருந்த நிலையில் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக 11-ம் தேதி இரவு படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தன. படத்தின் காட்சிகள் எப்படி கசிந்தது என்று தயாரிப்பாளர் குழு விசாரணை நடத்தியதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக படத்தை டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்து இருந்தபோது அங்கு வேலை செய்யும் ஒரு ஊழியர் படத்தை கசிய விட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் டிஜிட்டல் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.80 கோடியைத் தாண்டியுள்ள 'மாஸ்டர்', விரைவில் உலக அளவிலான வசூலில் ரூ.200 கோடியையும், தமிழகத்தில் ரூ.100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் தனது 65-வது படத்தைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.