நடிகர் விஜய்யின் சமீபத்திய படமான ’மாஸ்டர்’ நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் முகத்தில் புன்னகை பூக்கச் செய்திருக்கிறது.
’மாஸ்டர்’ ரிலீஸாகி ஒரு வாரத்திற்குப் பிறகும், தமிழகத்தில் இன்னும் கூட்டம் குறையவில்லை. அதோடு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்களின் பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளை படைத்து வருகிறது.
இருப்பினும், தயாரிப்பாளர்கள் இதுவரை மொத்த வசூல் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்திய அளவில், படத்தின் முதல் வார வசூல் சுமார் 140 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கிறது. திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மாஸ்டரின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பேச மறுத்துவிட்டாலும், பொதுமக்களின் வரவேற்பு தங்களது எதிர்பார்ப்புகளை மீறிவிட்டது என்றார்.
இருப்பினும் மாஸ்டர் கொடுத்த உற்சாக வெற்றியால், இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராவதை சுட்டிக் காட்டினார்.
What pandemic?. #Master@actorvijay Creates Sensation!. Posts 1st Week Gross of over 100 Cr in Tamilnadu alone!. No other Star including Rajini has achieved this in the past. Vijay's #Sarkar & #Bigil have done similar business as well. (100% capacity in single Screens). pic.twitter.com/0TxHk948W8
'மாஸ்டர்’ முதல் ஏழு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகளை விற்றதாக ஆந்திராபாக்ஸ் ஆபிஸ்.காம் ட்வீட் செய்துள்ளது. 50 சதவிகித இருக்கையை ஈடுசெய்ய, திரைப்பட தயாரிப்பாளர்கள் கூடுதல் காட்சிகளை சேர்த்தனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
தெலுங்கு மாநிலங்களில் மாஸ்டரின் மொத்த வசூல் சுமார் 22 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விஜய்யின் மிகச் சிறந்த முதல் வார வசூல் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் விநியோக உரிமை ரூ 7.5 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் கேரளாவில் தனது வெற்றி ஓட்டத்தை தொடர்கிறது. மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு இணையாக மிகப்பெரிய ரசிகர்களை விஜய் அங்கே பெற்றிருக்கிறார். எனவே, மாஸ்டர் படம் அங்கு பெரிய வெற்றியைப் பெற்றதில் ஆச்சர்யமில்லை.
மாஸ்டர் வட இந்திய திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “மக்கள் கிறிஸ்துமஸிலிருந்து வொண்டர் வுமன் 1984 படத்துக்கு திரையரங்குகளுக்குச் செல்லத் தொடங்கினர். ஆனால் நான் பார்த்த வரையில் சிறந்த வரவேற்பு கிடைத்தது மாஸ்டருக்கு தான்” என்று மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் திரையரங்குகள் வைத்திருக்கும் அக்ஷய் ரதி கூறினார்.
தென்னிந்திய சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்தியில் மாஸ்டர் வசூல் பெரிதாக தெரியவில்லை என்றாலும், வட இந்தியாவில் விஜய்க்கு மாஸ்டர் மிகச் சிறந்த அறிமுகத்தை வழங்கியுள்ளது, என்றும் ரதி குறிப்பிட்டார்.