Home /News /entertainment /

கொரோனாவால் பரிணாம வளர்ச்சி அடையும் திரைத்துறை

கொரோனாவால் பரிணாம வளர்ச்சி அடையும் திரைத்துறை

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

திரையில் வெளியாகி 15 நாளில் ஓடிடி தளத்திற்கு வந்த முதல் படம் என்ற பெயரை மாஸ்டர் பெற்றுள்ளது.

  மாஸ்டர் திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓடிடி-யில் வெளியிடப்பட்டிருப்பது திரைத்துறையில் நிகழ்ந்த பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

  பொங்கலுக்கு திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களில் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது திரைத்துறையில் பல சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், எந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

  திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் ஒடிடியில் வெளியானால் திரையரங்கிற்கு மக்கள் வர மாட்டார்கள். இதனால் திரையரங்குகள் நஷ்டத்தை சந்திக்கும்.

  OTT யில் வெளியான மாஸ்டர் அடுத்த நிமிடமே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது

  இது தங்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினை என்று கூறி ஒவ்வொரு முறை சினிமாத்துறை வேறு பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் திரையரங்கு உரிமையாளர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள். விஸ்வரூபம் திரைப்படத்தை நேரடியாக டிடிஎச் தளத்தில் வெளியிட கமல்ஹாசன் முடிவு செய்த போது, திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதை தடுத்து நிறுத்தினார்கள்.

  அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓடிடி எனும் அடுத்தநிலை சினிமா பிரபலம் அடைந்து விட்டாலும், அந்த தளங்களுக்கு படங்கள் செல்லாமல் பார்த்துக் கொண்டதில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒடிடிக்கு கொடுத்தால் உங்களுடைய மற்ற படங்களை நாங்கள் திரையிட மாட்டோம் என்று மென்மையான மிரட்டல் போக்கையே திரையரங்கு உரிமையாளர்கள் இதுவரை கையில் எடுத்து வந்திருக்கிறார்கள்.

  OTT யில் வெளியானது மாஸ்டர் திரைப்படம்

  ஆனால் இதனை எல்லாம் மாற்றும் விதமாக சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வந்திருக்கின்றன. ஜோதிகா நடிப்பில் உருவான ’பொன்மகள் வந்தாள்’, சுதா கொங்கரா இயக்கிய ’சூரரைப் போற்று’ ஆகிய திரைப்படங்களை சூரியா தானே தயாரித்து நேரடியாக ஓடிடியில் வெளியிட்டார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் வழக்கம்போல எதிர்ப்பு தெரிவித்தும் அவர் செவிசாய்க்கவில்லை.

  இதனைத் தொடர்ந்து தான் பல முன்னணி இயக்குனர்கள் ஒடிடிக்கு என்று தனியாக படம் இயக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் கௌதம் மேனன், வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஆகியோரும் அடக்கம்.

  ஆனால் மாறாக திரையில் வெளியாகி ஒடிடி தளத்திற்கு செல்லும் படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை இட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். தனுஷின் பட்டாஸ் திரைப்படம் 40 நாளிலும், ரஜினியின் தர்பார் திரைப்படம் 50 நாளிலும் ஓடிடி-க்கு வந்தது. அப்போதும் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

  அந்த வரிசையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் மற்றொரு முக்கியமான மைல்கல்லை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய மாஸ்டர் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போடப்பட்டு பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளானார்கள்.

  அதனை தவிர்க்கும் வகையில் அதிக பணம் கொடுத்து படத்தைப் பெற்றுக் கொள்ள ஓடிடி நிறுவனம் முன்வந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை திரையில் வெளியிட வலியுறுத்தினர்.

  நடிகர் விஜய்யும் ரசிகர்களுக்காக படம் திரையில் தான் வெளியாக வேண்டும் என்று உறுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், திரையில் வெளியாகி 15 நாட்களில் ஒடிடியில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று டிஜிட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அதற்கு அதிக விலை பெறப்பட்டது.

  ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போது ஓடிடி தளத்தில் வெளியானால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இரண்டு நாட்களாக தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  மாஸ்டர் படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை

  அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மாஸ்டர் திரைப்படத்தின் 3-வது வார திரையரங்கு வசூலை திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

  இனிமேல் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் திரையில் வெளியாகி 50 நாட்களுக்கு பின்னர் தான் ஓடிடி தளத்தில் வெளியாக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய படங்களுக்கு 30 நாட்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இதனால் மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. திரையில் வெளியாகி 15 நாளில் ஓடிடி தளத்திற்கு வந்த முதல் படம் என்ற பெயரை மாஸ்டர் பெற்றுள்ளது.

  இது ஒரு மைல் கல்லாகவே திரைத் துறை வல்லுனர்கள் பார்க்கிறார்கள். பின்நாட்களில் தயாரிப்பாளர்கள் எந்த படம் எதில் வெளியாக வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வதற்கு இது ஒரு முதல்படியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Corona virus, Master

  அடுத்த செய்தி