பரியேறும் பெருமாள் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டவர்களுக்கு இந்த சுவாமி சங்கரதாஸ் விருது சமர்ப்பணம் என்று மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் செய்தி, விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்படக்கழகம், அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து நடத்தும் திரைப்பட விழா புதுவை முருகா திரையரங்கில் நடைபெற்றது. கடந்த 36 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாக்களில் முக்கியமானதாக கருதப்படும் இவ்விழாவில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கு விருது வழங்கப்படும்.
அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான சுவாமி சங்கரதாஸ் விருது பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு வழங்ப்பட்டது. விருதையும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் அமைச்சர் கந்தசாமி வழங்க, படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருது பெற்ற மாரி செல்வராஜ், தேசிய விருது கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டவர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம் என்றும், நேர்மை, நியாயத்துடன் படம் எடுக்க வல்லமை கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தமிழில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படம் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள்.
சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய வன்மத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியதில் சாதிய பேய் பிடித்து ஆட்டும் பெரும்பான்மையினரின் முகத்தில் பளீரென அறைந்தான் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல ஒரு கோடு.
சாதிப்பெருமையை தூக்கிப் பிடிக்கும் தென்மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புளியங்குளம் கிராமமே கதைக்களம்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சட்டக்கல்லூரிக்கு செல்லும் பரியன். பெண் வேடமிடும் ஒரு நாடகக் கலைஞனின் மகன். அவன் வளர்த்து வரும் கருப்பி என்ற நாயின் மீது காட்டப்படும் வன்மத்தில் இருந்தே சாதியத்திமிரின் அளவை புரிந்து கொள்ள முடியும்.
ஆணவக் கொலை, அதை இயற்கை மரணம் போன்றே நிகழ்த்தும் நுட்பம். கல்வி நிலையங்களில் காட்டப்படும் பாகுபாடு, ஊரில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அத்துமீறி நடத்தப்படும் ஆதிக்க சமூகத்தின் அடக்குமுறை, கண்மூடித்தனமான வன்முறை என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பகீர், பகீர் என சாதிக்கொடுமைகளை கண்முன் நிறுத்தும்.
இயல்பான திரைப்படத்திற்கான காதல், அதிலும் சாதிய ஏற்றத்தாழ்வால் நாயகன் சந்திக்கும் கொடூரமான சவால்கள். தோழியின் திருமணத்திற்கு செல்லும் நாயகனை அறைக்குள் தள்ளி அவன் மீது சிறுநீர் கழிப்பது, தந்தையை மானபங்கப்படுத்தி உளவியல் ரீதியான தாக்குதல், உச்சபட்சமாக கொலை செய்ய முயற்சிப்பது என அத்தனை முயற்சிகளையும் எதிர்கொள்ளும் நிலையும், எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் நிலையும் இன்று உருவாகி விட்டது என்பதை உரக்கச் சொன்னான் பரியேறும் பெருமாள்.
அரிதிலும் அரிதாய் பூத்து வணிகக் களேபரத்தில் கசங்கிப் போகிற சில கலைவடிவங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டிய பொக்கிசங்கள்.
அப்படி கூட்டத்தில் ஒன்றாய் தொலைந்து போய்விடாமல் பெருமாள் பரியேற முக்கியக் காரணம், திரையிலும், பொதுவாழ்விலும் சாதிய ஏற்றத்தாழ்வுக்கும், வன்முறைக்கும் எதிராக தொடந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித். வணிக நோக்கை தாண்டி, சமூகத்தில் அரங்கேறும் நிகழ்கால கொடுமைகளை எந்தவித சமரசமும் இன்றி கலை வடிவாக்கி அதை வெகுஜன ஊடகத்தின் வாயிலாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் பத்திரிகையாளர், இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் காலத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
சாதிய உணர்வை அடியோடு புறந்தள்ள வேண்டும் என்ற எள்ளளவு உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்தியதால் பெருமாள் பரியேறிய பெருமாளாகவே பார்க்கப்பட்டான். அந்த வகையில், மண் பயனுறும் வகையில் இன்னும் பல படைப்புகளையும் விருதுகளையும் குவிக்க வாழ்த்துவோம்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mari selvaraj, Pariyerum perumal