உயிரற்ற பொருளை திருமணம் செய்யும் பெண்... மூட நம்பிக்கைகளை பேசும் ‘மாங்கல்ய தோஷம்’!

உயிரற்ற பொருளை திருமணம் செய்யும் பெண்... மூட நம்பிக்கைகளை பேசும் ‘மாங்கல்ய தோஷம்’!

மாங்கல்ய தோஷம்

 • Share this:
  ‘மாங்கல்ய தோஷம்’ என்னும் பிரமாண்டமான புதிய தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 23-ம் தேதியில் இருந்து திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

  பல்வேறு மூட நம்பிக்கைகளும், மதச் சடங்குகளும் பண்டைய காலந்தொட்டே நம் நாட்டில் நடந்து வருகிறது. இவற்றில் சில ஆழமாக வேரூன்றி, அவை மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் மாங்கல்ய தோஷம் என்னும் செவ்வாய் தோஷம் என்பதாகும். அந்த மூடநம்பிக்கையின் படி செவ்வாய் தோஷம் உள்ள ஒருவர் செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அது பெரிய அழிவைத் தரும் என்பதாகும்.

  இந்த மூடநம்பிக்கையை மக்கள் பெரிதும் நம்பி வருகிறார்கள். அதன்படி, செவ்வாய் தோஷம் உள்ள ஒரு மணப்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அது அவரின் கணவரின் உயிருக்கு ஆபத்தாகி விடும். இதைப்போக்க அந்தப் பெண் முதலில் மரம், ஏதாவது ஒரு விலங்கு அல்லது உயிரற்ற பொருளை முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

  ஒருமுறை இதை அந்தப் பெண் செய்து விட்டால், அவருக்கு இந்த செவ்வாய் தோஷம் நீங்கிவிடும். அதனைத் தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டால் அவரது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறிவிடும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்ட புதிய தொடரான மாங்கல்ய தோஷம் என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சி மார்ச் 23, 2020 முதல் இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

  மாங்கல்ய தோஷம் என்னும் தொடரின் கதை நித்யஸ்ரீ என்னும் உறுதியான பெண்ணை பற்றிய தொடராகும். அவள் தனது காதலன் தருண் உடன் தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு காண்கிறாள். ஆனால், அவளது மாங்கல்ய தோஷத்தால் அவள் அவமானப்படுத்தப்படுகிறாள். டாக்டராக இருக்கும் தருண், மூடநம்பிக்கைகளுக்கு செவி சாய்ப்பதைவிட, தனது கல்வி அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதோடு உயிர்களை காப்பாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார். தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசும் அவன், தனது பெற்றோர் மற்றும் சகோதரியின் மத உணர்வுகளுக்கு வருத்தம் ஏற்படுத்தாத வகையில், தனது சுய நம்பிக்கைகளுக்கு ஏற்ப இருக்கிறான்.

  நித்யா ஒரு எளிமையான அழகான பக்கத்து வீட்டு பெண். அவள் அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறாள். அவள் குழந்தையாக இருந்தபோது அவளின் பாட்டி சாஸ்திரங்கள், வேதங்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக சொல்லியிருக்கிறார். இது குறித்து அவள் நன்கு அறிந்து வைத்திருக்கிறாள். அவள் அனைத்து விஷயங்களிலும் சரியாக இருந்தபோதிலும், செவ்வாய் தோஷம் என்ற காரணத்தால் அவள் திருமணத்திற்கு தகுதியற்றவராக கருதப்படுகிறாள்.

  இந்த நிலையில் செவ்வாய் தோஷம் இல்லாத தருண் அவளை திருமணம் செய்ய விரும்புகிறான். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழகி காதலித்து, அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளையும் கடந்து செல்கிறார்கள். ஆனாலும் அதையும் தாண்டி இன்னும் நிறைய இருக்கிறது. இந்த நிலையில் அவள், தனது கணவனை காப்பாற்றும் மற்றும் தனக்கு பிறக்க இருக்கும் குழந்தையைக் காப்பாற்றும் போராட்டத்தில் இக்கதை முக்கியமான கட்டத்தை அடைகிறது.

  இந்த புதிய தொடர் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனூப் சந்திரசேகரன் கூறுகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து வயது பார்வையாளர்களும் ரசிக்கும் வகையிலான பல விதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. உயிரே தொடருக்கு பின், இதயத்தை திருடாதே மற்றும் அம்மன், மாங்கல்ய தோஷம் என்ற முற்றிலும் மாறுபட்ட தொடர்களை கலர்ஸ் தமிழ் சேனல் வழங்குகிறது. இதைத் தொடர்ந்து இப்பொழுது மாங்கல்ய தோஷம் என்னும் தொடர் சிறந்த நடிகர்களுடன் சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளன. இது பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்தார்.

  இந்த தொடரில் தருண்னாக நடிக்கும் அருண் பத்மநாபன் கூறுகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மலர் தொடரில் கதிர் என்னும் எனது கதாபாத்திரம் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றாகும். மாங்கல்ய தோஷம் தொடரில் எனது கதாபாத்திரம் அதைவிடச் சிறப்பாக இருக்கலாம். இந்த தொடரில் செவ்வாய் தோஷம் என்னும் மூட நம்பிக்கையை நம்பும் மக்களிடையே நான் நன்கு படித்த நபரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் எனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது இந்த கதாபாத்திரத்தை பற்றி நான் மிகவும் பெருமைப்படுவேன் என்று எனக்குத் தெரியும். கலர்ஸ் தமிழின் இந்த தொடர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்தார்.

  இது குறித்து நித்யஸ்ரீயாக நடிக்கும் லட்சுமி பிரியா கூறுகையில், நித்யா என்ற துடிப்பான பெண் கதாபாத்திரத்தில் நான் நடிப்பதில் நம்ப முடியாத அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மூட நம்பிக்கை பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளைவிட, ஒரு மரத்தை பெண் திருமணம் செய்து கொள்வது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இந்த நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உண்மையை மாங்கல்ய தோஷம் வெளிப்படுத்தும் என்று தெரிவித்தார்.
  Published by:Sheik Hanifah
  First published: