ரீமேக் உரிமைக்கு அதிக பணம் - கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்...!

அய்யப்பனும் கோஷியும்

வைக்கம் முகமது பஷீர் இறந்த போது, மலையாள தினசரிகளின் முதல்பக்கம் முதல் கடைசிப்பக்கம்வரை அவர் பற்றிய செய்திகள், படங்கள் மட்டுமே இடம்பெற்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
மலையாளப்பட தயாரிப்பாளர்கள் புது முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள். தங்கள் படங்களின் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு அதிக பணம் கேட்பது என்பதே அந்த முடிவு. விலை படிந்தால் வாங்கலாம், இல்லையேல் வேண்டாம் என்று விட்டு விடலாம். இதில் கலங்க என்ன இருக்கிறது? ஒன்றே ஒன்றுதான், கதை. 

வித்தியாசமான கதை, சுவாரஸியமான திரைக்கதை, சிறப்பான மேக்கிங் என்று மலையாள சினிமா நவீன பாதையில் முன்னோக்கி பாய்கிறது. கதைப்பஞ்சத்தில் இருக்கும் பிறமொழி சினிமாக்கள் மலையாளப் படங்களின் உரிமையை வாங்கி, தங்கள் வறுமையை ஈடுசெய்கின்றன. மலையாளம் தவிர்த்த பிற மொழிக்கலைஞர்களை குறை சொல்லவில்லை. ஆனாலும், இதுதான் உண்மை. மலையாளத்தில் கதாசிரியர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிற மொழிகளில் இல்லை. சினிமாவை சரி செய்வதால் தீரக்கூடிய பிரச்சனை அல்ல இது. இலக்கியத்திலிருந்து தொடங்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் அளவுக்கு பால் சக்கரியாவும், பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் பிரபலம். குடித்து சாலையோரம் மரித்துப்போன மலையாள கவி அய்யப்பனின் இறுதிச்சடங்குக்கு கேரளாவின் ஆறு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். வைக்கம் முகமது பஷீர் இறந்த போது, மலையாள தினசரிகளின் முதல்பக்கம் முதல் கடைசிப்பக்கம்வரை அவர் பற்றிய செய்திகள், படங்கள் மட்டுமே இடம்பெற்றன. இங்கு அசோகமித்ரன் இறந்தபோது பல தினசரிகளில் பெட்டிச் செய்தியாகக்கூட வரவில்லை. கிட்டத்தட்ட இதே நிலைதான் தெலுங்கு, இந்தியிலும். சமூகத்தில் இருப்பதுதானே சினிமாவில் பிரதிபலிக்கும். சட்டியில் இல்லை, அகப்பையில் எடு என்றால் எங்கிருந்து வரும்? ஆகவே, மலையாள சினிமாவை தஞ்சமடைகிறார்கள்.

இந்த வருடம் மட்டும் தெலுங்கு சினிமாவில் வரவிருக்கிற மலையாள ரீமேக் படங்களை பாருங்கள். லூசிஃபர். மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படம். மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் ஐந்து திரைப்படங்களில் இந்தப் படமும் ஒன்று. படத்தின் திரைக்கதையாசிரியர் முரளி கோபி. பல படங்களுக்கு திரைக்கதை எழுதியவர். மறைந்த நடிகர் கொடியேற்றம் கோபியின் மகன். இந்தப் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ஜெயம் ராஜா இயக்குகிறார்

Also read... திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வாழ்க்கை வரலாறு?

இன்னொரு படம் அய்யப்பனும் கோஷியும். எழுதி இயக்கியவர் சச்சி. பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்த இந்தப் படம் குறித்து மலையாளத்தைவிட தமிழில்தான் அதிக விமர்சனங்கள் எழுதப்பட்டன. தமிழிலும் இதனை ரீமேக் செய்கின்றனர். தெலுங்கில் பவன் கல்யாணும், ராணாவும் நடிக்கின்றனர். அய்யப்பனும் கோஷியும் இயக்கிய சச்சி சமீபத்தில் இறந்து போனார். கதாசிரியராக ஒரு டஜன் படங்களில் பணியாற்றிவிட்டே அவர் அய்யப்பனும் கோஷியும் எடுத்தார். அதாவது கதாசிரியரின் படம் இது.

அடுத்து டிரைவிங் லைசென்ஸ். பிருத்விராஜ், சுராஜ் வெஞ்ஞாரமூடு நடித்த இப்படத்தின் திரைக்கதாசிரியர், வேறு யாருமில்லை, அதுவும் சச்சிதான். இதன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரணும், வெங்கடேஷும் நடிக்கிறார்கள்.

மூன்று படங்கள்... அதில் நடிப்பவர்கள் யார் என்று பார்த்தால் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், ராணா, வெங்கடேஷ். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் பாதி எண்ணிக்கை. இவை தவிர, ஹெலன், ஜோசப், கப்பேலா, த்ரிஷ்யம் 2 என மேலும் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகின்றன. மலையாளப்பட தயாரிப்பாளர்கள் ரீமேக் உரிமையில் அதிக பணம் கேட்பதில் என்ன தவறு? இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். சீனிவாசன் எழுதி, இயக்கி, நடித்து, தேசிய விருது வென்ற சிந்தா நிஷ்டயாய சியாமளா படத்தை தங்கர்பச்சான் தமிழில் எடுக்க விரும்பினார். தான் நேரடியாக கேட்டால் அதிக பணம் தர வேண்டும் என்று தனது உதவி இயக்குனரை அனுப்பினார். முதல் படம் பண்ணப் போறேன் என்று அந்த உதவி இயக்குனர் பேசியதில் இரங்கி, சில ஆயிரங்களுக்கு, ஆம், லட்சம்கூட இல்லை சில ஆயிரங்களுக்கு உரிமையை தந்தார் சீனிவாசன். அதுதான் தங்கர்பச்சான் நடிப்பில் வெளிவந்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.

கதாசிரியர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்படும் இடங்களிலிருந்தே நல்ல கதைகள் வரும். ஒரு திரைப்படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படுகையில், அதில் கணிசமான சதவீதம் கதாசிரியருக்கு தர வேண்டும் என்பது விதி. ஆகவே, அது கதாசிரியருக்கான ஊதியம். தெலுங்கு சினிமா யோசிக்காமல் தரலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: