கவிஞர் வைரமுத்து திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை செய்திகள் பரவியது. அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையைமருத்துவமனை வெளியிடும் என்றும் தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட இயக்குநர் சீனு ராமசாமி, “கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன்
திரும்பி வருக.மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்” என்று எழுதியிருந்தார். இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்த வைரமுத்துவின் மேலாளர் வழக்கமான பரிசோதனைக்காக வைரமுத்து காலையில் மருத்துவமனை சென்றதாகவும் 10 மணி அளவில் அவர் வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.
1980-ம் ஆண்டு பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தில் ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான வைரமுத்து 7000-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
பாடல்கள் மட்டுமின்றி தமிழ் இலக்கிய உலகில் கவிதைகள், நாவல்கள் என 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கும் வைரமுத்து 7 முறை தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் வைரமுத்து தமிழின் அடையாளமாகவும் இருந்து வருகிறார்.