விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த மாஸ்டர் படம் தொடர்ந்து வசூலில் அசத்தி வருகிறது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.40 கோடி வசூல் ஈட்டிய மாஸ்டர் படம் தற்போது உலகளவில் மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் விஜய்யின் கேரியரில் எட்டாவது 100 கோடி படம் எனும் சிறப்பையும் மாஸ்டர் அடைந்துள்ளது.
ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில் என விஜய்யின் ஏழு படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் தற்போது மாஸ்டர் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இதன்மூலம் தமிழில் அதிக ரூ.100 கோடி படங்கள் கொடுத்த நாயகன் எனும் சாதனையை ரஜினியுடன் விஜய் பகிர்ந்து கொள்கிறார். மேலும் தொடர்ச்சியாக ஆறு முறை ரூ.100 கோடி படங்கள் கொடுத்த ஒரே தமிழ் நடிகர் எனும் சிறப்பையும் விஜய் அடைந்துள்ளார்.
தமிழகத்தில் மூன்று நாட்களில் ரூ.55 கோடி வரை வசூல் செய்திருக்கும் மாஸ்டர் படம் அடுத்தபடியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தற்போதே அங்கு பல ஏரியாக்களில் லாபம் பார்த்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவில் பிகில், பேட்ட படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்திருக்கும் மாஸ்டர் படம் அரபு நாடுகளில் 10 கோடி வரை வசூல் செய்து சமீபத்தில் வெளியான டெனெட், வண்டர் உமன் போன்ற ஹாலிவுட் படங்களின் முதல் வார வசூலையும் மிஞ்சியுள்ளது.
உலகின் பல இடங்களில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே வெளியாகி இருந்தாலும் மாஸ்டர் படம் வசூலில் தொடர்ந்து மிரட்டி வருவது திரையுலகினரை மகிழ்ச்சி கொள்ள செய்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு நேரில் வந்த லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், “விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனது அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவிற்கு பார்த்துக்கொள்ள முயற்சி செய்வேன். மக்களுக்கு இந்த படம் பிடித்திருப்பதால் தான் திரையரங்குக்கு கூட்டமாக வருகின்றனர். விமர்சனம் என்பது பாசிட்டிவ் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை நெகட்டிவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இரண்டு பெரிய ஹுரோ வை காட்ட வேண்டும் என்பதாலேயே படம் நீளமாக உள்ளது.” என்று கூறினார்.