மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. புகழும், நிலைப்பும்..

மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. புகழும், நிலைப்பும்..

நடிகர் ரகுவரன்

கதையின் நாயகன், கொடூர வில்லன், சிறந்த தந்தை, நம்பிக்கைக்குரிய நண்பன் என ஒரே நேரத்தில் எல்லாவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தகுதியான ஒரு நடிகர் என்றால் அது தமிழ் சினிமாவின் இதுநாள்வரை ரகுவரன் மட்டுமே.

  • Share this:
மறைந்த நடிகர் ரகுவரனின் பிறந்த தினம் இன்று. "ரகுவரன் போன்ற ஒரு நடிகரை தமிழ் சினிமா இன்று வரை பார்த்ததில்லை இனியும் பார்க்கப்போவது இல்லை" தமிழ் சினிமாவின் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை. கதையின் நாயகன், கொடூர வில்லன், சிறந்த தந்தை, நம்பிக்கைக்குரிய நண்பன் என ஒரே நேரத்தில் எல்லாவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தகுதியான ஒரு நடிகர் என்றால் அது தமிழ் சினிமாவின் இதுநாள்வரை ரகுவரன் மட்டுமே.

அடையாறு திரைப்படக் கல்லூரியில் முறையாக நடிப்பு பயின்று தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான ரகுவரனுக்கு நாயகனாக தொடர்ந்து வெற்றி அமையவில்லை. ஒல்லியான உடல், கனத்த குரல் இவை நாயகனுக்கு தகுதி இல்லாதவை என விமர்சனங்கள் வந்தபோது பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்து தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் நிரூபித்தார் ரகுவரன். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் வரத் தொடங்கியபோது புரியாத புதிர் திரைப்படத்தில் சைக்கோ வில்லனாக ரகுவரன் வெளிப்படுத்திய நடிப்பு இதுநாள் வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது.

தொடர்ந்து வில்லனாக மட்டுமல்லாது குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கிய ரகுவரன் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டி அந்த கதாபாத்திரங்கள் திரையில் நிலைபெறச் செய்தார். பாட்ஷா திரைப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் ரகுவரனின் நடிப்பு ஹாலிவுட் திரையுலகில் வெளியான பேட்மேன் திரைப்படத்தில் வில்லனாக கொண்டாடப்பட்ட ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு நிகராக இளம் தலைமுறையினராலும் கொண்டாடப்படுகிறது. மாணிக் பாட்ஷா என்ற ரஜினியின் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட ஆண்டனி என்ற வலிமையான வில்லனை பாட்ஷா வீழ்த்தியது முக்கிய காரணம்.

பாட்ஷா திரைப்படம் ரகுவரனுக்கு மைல்கல் என்றால் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படம் ரகுவரன் நடிப்பு கிரீடத்தின் வைரக்கல். முதல்வர் கதாபாத்திரத்தில் ரகுவரன் வெளிப்படுத்திய முகபாவங்கள் இன்னும் ஒரு நடிகரால் மீண்டும் சிறையில் நிகழ்த்த முடியாத ஒரு அதிசயம்.

1996-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை தமிழின் மிக பிசியான நடிகராக வலம் வந்த ரகுவரன் இதே காலகட்டத்தில் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது வெற்றிக் கொடியை உயரமாக பறக்க விட்டார். அமர்க்களம் திரைப்படத்தில் ரகுவரன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடிக்க பேசப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சனை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் என பாராட்டப்பட்ட ரகுவரன் தென்னகத்தின் அமிதாபச்சன் என கொண்டாடப்பட்டார். 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த ரகுவரன் 2008-ஆம் ஆண்டு 49 வயதில் மண்ணுலகை விட்டு பிரிந்தார். காலத்தால் அழிக்க முடியாத பல கலை படைப்புகளை அரங்கேற்றி சென்ற ரகுவரன் இனி நடிப்பு பயிலும் இளைஞர்களுக்கு பாடமாக என்றும் நிலைத்திருப்பார்.
Published by:Gunavathy
First published: