Kasthuri Raja | ரூ.65 லட்சம் கடன் வாங்கிய விவகாரம்: கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்? கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

Youtube Video

சினிமா பைனான்சியரிடம் இயக்குநர் கஸ்துாரி ராஜா வாங்கிய 65 லட்சம் ரூபாய் கடன் விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப் போகிறீர்களா அல்லது சட்ட ரீதியாக தண்டனையை எதிர்கொள்ளப் போகிறீர்களா என கஸ்துாரிராஜாவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர் நீதிபதிகள், வழக்கின் முழு விவரம் என்ன?

  • Share this:
    நீங்கள் வாங்கிய கடனுக்கு நீங்கள்தான் பொறுப்பு. எப்போது கொடுக்கப் போகிறீர்கள்? எப்படி கொடுக்கப் போகிறீர்கள் என்பதை பேசி முடிவு செய்யுங்கள் எனக் கஸ்துாரி ராஜா தரப்பிற்கு  நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

    கஸ்துாரி ராஜா வாங்கிய ரூ.65 லட்சம் கடன் வழக்கு 8 ஆண்டுகளில் கடந்த பாதை...

    சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 2012ம் ஆண்டு கஸ்துாரி ராஜா 2 தவணைகளில் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதற்காக 2 புரோ நோட்டுகளையும் எழுதிக் கொடுத்திருந்தார். கடனைத் திருப்பித் தரும்படி முகுந்த் சந்த் போத்ரா கேட்டபோது கஸ்துாரி ராஜா இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. காசோலைகள் பணமின்றி திரும்பிய நிலையில், போத்ரா தரப்பின் நெருக்கடி அதிகமானது.

    ஒரு கட்டத்தில், தொகையை தான் தரவில்லை என்றால் சம்பந்தியான ரஜினி தருவார் எனவும், சம்பந்தி என்ற முறையில் கைவிட மாட்டார் எனவும் போத்ராவுக்கு கஸ்தூரி ராஜா, ஒரு கடிதம் கொடுத்தார். ஆனால் அதன் பிறகும் பணம் கொடுக்காததால், போத்ரா தரப்பில், 2016ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கில், கஸ்துாரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் பொறுப்பாக முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, கஸ்துாரி ராஜா வாங்கிய கடனுக்கு ரஜினி காந்த் பொறுப்பாக முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டிருந்தார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் முகுந்த்சந்த் போத்ரா இறந்து விட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

    மேலும் படிக்க... Ajith | வழிமாறிய நடிகர் அஜித்.. வழிகாட்டிய போலீஸ்! (வீடியோ)

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வியாழன் அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பணத்தை திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும் என கேள்வி எழுப்பினர்.

    பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் தீ்ர்வுகாண முடியாவிட்டால், வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    மேலும் படிக்க... திமுக - காங்கிரஸ் முதல் வெற்றியின் கதை

    இதையடுத்து போத்ரா தரப்பும் கஸ்துாரி ராஜா தரப்பும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் சுமுகமாக பேச்சுவார்த்தையை முடித்து அதன்பின் நீதிமன்றத்தை அணுக இருதரப்பும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடன் பிரச்னை சுமுகமாக முடியுமா? அல்லது வழக்கு வாய்தா என நீளுமா என்பது அடுத்த வாரத்தில் தெரியவரும்.

    வீடியோ




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: