Home /News /entertainment /

எடையைக் குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உயிரிழந்த கன்னட நடிகை- நடந்தது என்ன?

எடையைக் குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உயிரிழந்த கன்னட நடிகை- நடந்தது என்ன?

சேத்தனா ராஜ்

சேத்தனா ராஜ்

உடல் எடையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் கன்னட நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவில் உள்ள அபிகெரே பகுதியில் வசித்து வந்தவர் 21 வயதான நடிகை சேத்தனா ராஜ். சின்னத்திரை நடிகையான அவர் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். பெங்களூருவின் ராஜாஜி நகரில் இயங்கி வரும் ஷெட்டி காஸ்மெட்டிக் மையத்தில் 'Fat-Free' பிளாஸ்டிக் சர்ஜரிக்காக திங்கள் கிழமை காலை அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பின் நடிகையின் நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியதால், நடிகையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சில மணி நேரங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், சேத்தனா ராஜை பசவேஸ்வராநகரில் உள்ள இருதய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கொண்டு செல்வதற்குள் சேத்தனா ராஜ் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் ஷெட்டி காஸ்மெட்டிக் மைய மருத்துவர்கள் சிகிச்சை அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால், பசவேஸ்வரநகர் மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சேத்தனா ராஜ் இறந்த தகவலை அவரது பெற்றோருக்கும் தெரிவித்தனர்.

    அறுவை சிகிச்சை குறித்து நடிகை சேத்தனா, தனது பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. தங்களிடம் அனுமதி பெறாமல் சேத்தனா ராஜிக்கு கொழுப்பு அறுவை சிகிச்சை செய்ததாகவும், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் சேத்தனா ராஜ் உயிரிழந்து விட்டதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது சேத்தனா ராஜின் பெற்றோர் சுப்பிரமணியநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷெட்டி காஸ்மெட்டிக் மையத்தில் ஆய்வு நடத்திய மருத்துவ துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். 21 வயதான சேத்னா ராஜிடம் உடல் பருமனாக இருந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்று யாரோ கூறியுள்ளனர்.

    இதனால் அவர் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையில் ஐ.சி.யு வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. சேத்தனா ராஜின் உடல் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு சொந்த ஊரான வீரேனபாளையாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு அவரது உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் சேத்தனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சேத்தனா ராஜின் திடீர் மரணம் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி