ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விவசாயிகள் போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ரிஹானா... முட்டாள் என திட்டிய கங்கனா

விவசாயிகள் போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ரிஹானா... முட்டாள் என திட்டிய கங்கனா

கங்கனா | ரிஹானா

கங்கனா | ரிஹானா

விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி பேசி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரபல பாப் பாடகி ரிஹானாவை கடுமையாக சாடியுள்ளார் கங்கனா ரணாவத்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டெல்லியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து உலகப்புகழ் பெற்ற பாடகி ரிஹானா, கால நிலைக்கான செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள், டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் தீர்வு எட்டப்படவில்லை.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் இம்மாதம் 6-ஆம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “நாம் ஏன் இன்னும் இப்போராட்டத்தைக் குறித்து பேசவில்லை” எனவும், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றையும் பதிந்துள்ளார். இதே போல் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ரிஹானாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்திருக்கும் கங்கனா, “யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து அமெரிக்காவைப் போல சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்காரவும் முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல.” என்று கடுமையாக சாடியுள்ளார்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Delhi chalo, Farmers Protest Delhi, Greta Thunberg, Kangana Ranaut, Rihanna