‘இந்தியன் 2’ தான் என்னுடைய கடைசிப் படமாக இருக்கும் என்றும் அதற்குப் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் இந்தியன். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியன் படத்திற்குப் பிறகு 22 வருடங்களாக கமல்ஹாசனும் - சங்கரும் இணைந்து பணியாற்றவில்லை. இருந்த போதிலும் இந்தக் கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் இந்தியன் 2 படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.
2.0 ரிலீஸை அடுத்து இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்துக்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2019-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இந்தியன் 2 படமே என் நடிப்பில் வெளியாகும் கடைசிப்படம். அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். நான் நடிப்பை நிறுத்தினாலும் எனது தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும். அதனுடன் சேர்ந்து சமூகநலப் பணிகளையும் மேற்கொள்ளும்.
கேரளா எனது சொந்த வீடு போன்றது. பல நல்ல திட்டங்களை பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நல்ல திட்டங்களை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும். அதற்கு உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்படுத்தும் அதிகாரம் இல்லாமல் கனவு கண்டால், அந்த கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்து விடும். எனவே மாற்றம் வேண்டும். எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
திருமணத்திற்கு முன் திடீரென உயிரிழந்த மணமகன்..கொலையா? - வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.