சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்தே, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித் குமாரின் வலிமை, தளபதி விஜய்யின் பீஸ்ட் என, சமீபத்தில் வெளியான தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்துமே மிகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றன என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். குறிப்பாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ஒடிடி-யில் ரிலீஸ் ஆன பிறகும் கூட நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படும் நிலையிலேயே உள்ளது.
அண்ணாத்த திரைப்படம் வெளியான தருணத்திலும் இதே கதை தான். எதற்கும் துணிந்தவன் படத்தின் நிலைமை இன்னும் மோசம். மேற்கண்ட பட்டியலில் நியாயமான முறையில் மிக்ஸ்டு ரிவ்யூ-வை பெற்ற ஒரே திரைப்படம் என்றால் அது வலிமை தான். "ரொம்ப மோசமாகவும் இல்லை. அதே சமயம் ரொம்ப சூப்பர் படமும் இல்லை" என்கிற புள்ளியில் நின்று 'வலிமை' தப்பித்து கொண்டது.
மேற்கண்ட திரைப்படங்களுக்கு இடை-இடையே பான் இந்தியா திரைப்படங்களான ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் சேப்டர்-2 வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் பிரமிக்க வைத்தன. இந்த இடத்தில் தான் "நம்ம தமிழ் சினிமாவுல இதுபோல சூப்பரான படங்கள் வராதா? இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மட்டும் கொண்டாடும் அளவிலான படத்தையே எடுக்க போகிறார்களோ?" என்கிற ஏக்கம், கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்தது.
அந்த கேள்விக்கான பதிலாகவும், நம் ஏக்கத்திற்கான தீர்வாகவும் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள - விக்ரம் திரைப்படம் இருக்கும் என்பது போல் தெரிகிறது. அதற்கு சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்பட ட்ரெய்லரே சாட்சி.
Also Read : இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்… கமல் உறுதி
கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் என தன் நடிப்பால் மிரட்டும் கதாநாயகர்களின் ஒரு கூட்டமே விக்ரம் படத்தில் உள்ளது. போதாக்குறைக்கு ஒரு ட்ரெய்லரிலேயே இவ்வளவு ஆக்ஷன், த்ரில்லர், சஸ்பென்ஸ், சென்டிமென்ட்டை காட்ட முடியும் என்றால் முழு படத்திலும் எவ்வளவு காட்ட முடியும்! திரைப்படத்தின் இயக்குனரான லோகேஷ் ஒரு அதிதீவிரமான கமல் ரசிகர் என்பதால் விக்ரம் படத்தில் எக்கச்சக்கமான "ஃபேன் பாய்" சம்பவங்கள் இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். அதே சமயம் லோகேஷ் ககனராஜின் "பெர்சனல் டச்சிற்கும்" எந்த குறையும் இருக்காது என்றும் நம்பலாம்.
'விக்ரம்' திரைப்படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. அது குறித்த வீடியோ கிளிப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே சோஷியல் மீடியாக்களில் தாறுமாறாக ஷேர் செய்யப்பட்டு வரும் நிலைப்பாட்டில் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவின் முழு எடிஷனும் விஜய் டிவியில் ஒளிபரப்பட உள்ளது. இதுகுறித்து வெளியான ப்ரோமோ வீடியோக்களின் வழியாக குறிப்பிட்ட ஆடியோ வெளியீட்டு விழாவானது விஜய் டிவியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.