Home » News » Entertainment » ISAIGNANI ILAYARAJA DECIDES TO RETURN THE AWARD TO CENTRAL GOVERNMENT SCS

பிரசாத் ஸ்டூடியோ பிரச்னை - விருதை திருப்பிக் கொடுக்க இளையராஜா முடிவு

"50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். "

பிரசாத் ஸ்டூடியோ பிரச்னை - விருதை திருப்பிக் கொடுக்க இளையராஜா முடிவு
இளையராஜா
  • Share this:
பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அமைதியாக இருப்பதால் இசைஞானி இளையராஜா தனது பத்ம விபூஷன் விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாக, இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இருவருக்கும் இருக்கும் பிரச்னை தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.


இதையடுத்து டிசம்பர் 28-ம் தேதி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ வரவுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், அவர் வரவில்லை. அதோடு அவரது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டதால், சர்ச்சை எழுந்தது. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரின் இந்த முடிவுக்கு இளையராஜா ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதால் தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு செய்துள்ளதாக, இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது பேசிய தீனா, “இசைக் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜாவின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்தச் சந்திப்பு. இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதி பற்றி ஒரு மாதம் கழித்து உங்களுடன் பேசுகிறோம். பிரசாத் ஸ்டுடியோ இடத்துக்காக இளையராஜா வழக்குத் தொடர்ந்திருக்கிறார் என்கிற ஊடகங்களில் வருகிற செய்திகள் தவறானவை.கடந்த 45 ஆண்டுகளாக இளையராஜா இசையோடு வாழ்ந்த ஸ்டுடியோ பிரசாத் ஸ்டுடியோ. முதல் நாள் மாலை ரெக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றவர், மறுநாள் காலை வழக்கம்போல சென்றவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்தனர். இது எட்டு மாத காலமாக நீடித்தது. அதன் காரணமாகவே நீதிமன்ற உதவியை நாடினார்.

நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது 45 ஆண்டுகளாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், நோட்ஸ்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டுக் குப்பையாகக் குவிக்கப்பட்டிருந்தன

45 ஆண்டு காலம் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப் பணி செய்தவரைக் காலி செய்யுங்கள் என்பதை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் உரிய கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். தமிழ் சினிமாவின் உயரிய அமைப்புகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இசைக் கலைஞர்கள் சங்கம் அல்லது பெப்சி தலைமைக்குத் தகவல் கூறி இருக்கலாம். இப்படி எந்தவிதமான நாகரிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், இளையராஜாவை அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய, மாநில அரசுகள் மெளனமாக வேடிக்கை பார்த்தது.

50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்" என்று தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 18, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories