Home /News /entertainment /

இன்றைய இசையமைப்பாளர்கள், இசையமைப்பாளர்களே அல்ல – இளையராஜா அதிரடி!

இன்றைய இசையமைப்பாளர்கள், இசையமைப்பாளர்களே அல்ல – இளையராஜா அதிரடி!

இளையராஜா

இளையராஜா

இயக்குநர் ஒரு சூழலை சொன்னால் மூன்று டீயூன்கள் கொடுப்பேன். எனக்கு மட்டும்தான் புதுமையான டியூன்கள் வரும். இதை இயக்குநர்கள் வெளியே சொல்லமாட்டார்கள் என்றார் இளையராஜா.

 • News18
 • Last Updated :
  தற்போதைய இசையமைப்பாளர்கள், இசையமைப்பாளர்களே அல்ல. பல சி.டி.க்களிலிருந்து பாடல்களை எடுத்து இதுமாதிரி ட்யூன் போடுகிறேன் என்று அதையே போட்டுவிடுகின்றனர் என்று இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

  சென்னை ராணிமேரி கல்லூரியின் கலை விழா இன்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 75 வயதை பூர்த்தி செய்த இளையராஜாவிற்கு பவள விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராணிமேரி கல்லூரி நிர்வாகத்தினர் கேக் வெட்டி  கொண்டாடினர்.

  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்மோனியப்பெட்டியுடன் பேசிய இளையராஜா, “அன்னக்கிளி படப்பாடலை ராணிமேரி கல்லூரி அருகில் உள்ள கடற்கரையில் தான் உருவாக்கினேன். இயக்குநர் ஒரு சூழலை சொன்னால் 3 டீயூன்களைக் கொடுப்பேன். பாடல் உருவாகும் முன்பு அந்த பாடல் எனக்குள் எப்படி வந்தது? எனக்கு மட்டும்தான் புதுமையான டியூன்கள் வரும். இதை இயக்குநர்கள் வெளியே சொல்லமாட்டார்கள். அது அவர்கள் படம், பாடல் என்றுதான் நினைப்பார்கள். இதை நான் என் பெருமைக்காகச் சொல்லவில்லை. இயல்பைச் சொன்னேன்.

  டியூனை கெடுக்காமல் பாடல் வரிகளை எழுதுவதில் உலகத்திலேயே கண்ணதாசன் தான் சிறந்தவர். என்னுடை டியூனுக்கு எழுதுவதற்கு கண்ணதாசன் ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டார். நான் கூறும் இந்த கருத்தை ஊடகங்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. எம்.எஸ்.வி-க்கு எழுதிய பிறகு ஆரம்பத்தில் எங்களுக்குள் அந்த சிறிய இடைஞ்சல் இருந்தது அவ்வளவுதான். ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, ஒன்று மனசாட்சி’ என்ற பாடலில் கம்பன் வரியை புகுத்தியவர் கண்ணதாசன். அவருடைய கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே’ எனது இசைக்காக எழுதிய கடைசி பாடலாகும். இனி சினிமாவுக்கு எழுதமாட்டேன் என்று அமெரிக்கா சென்ற அவர், சடலமாகத்தான் திரும்பினார்.

  கம்பன் மற்றும் பாரதிக்கு பிறகு வாக்கு பலிதம் உள்ள கவிஞர் கண்ணதாசன்தான். அவர் சாபமிட்டதால் நெப்டியூன் ஸ்டூடியோவே சாம்பலானது. அப்படி நா வன்மை உள்ளவர் அவர். இன்றைய இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல பல சி.டி.க்களை வைத்து இது மாதிரி போடுறேன் என்று அதையே போடுவார்கள் என்றார் இளையராஜா.

  இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

  மாணவிகளின் கேள்விகள்

  நீங்கள் கல்லூரிக்கு செல்லவில்லை என்று வருத்தம் உள்ளதா?

  இளையராஜா: நான்தான் உங்களது கல்லூரிக்கு வந்துவிட்டேனே. நீங்கள் படிக்கும் பாடத்திற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே கிடையாது. நீங்கள் படித்ததை விட நான் அதிகம் படித்துள்ளேன், வாழ்க்கைப் பாடத்தை. அதை வழங்குகிறேன். அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  உங்களுடைய சிறந்த நண்பன் யார்?

  என்னுடைய சிறந்த நண்பன் ஆர்மோனிய பெட்டிதான். அவனிடம் இன்னும் 10 யுகங்களுக்கு தேவையான இசை உள்ளது. இதைத்தவிர என் நண்பன் ஒருவன் இருந்தான். அவனும் இறந்துவிட்டான். அவனுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.

  நீங்கள் மறக்க முடியாத தருணம் உண்டா? 

  மலேசியாவில் கலை நிகழ்ச்சியில் என் பாடல்களை பாடிய டி.எம்.சௌந்தரராஜன், ஜி.ராமநாதனை உயர்த்தியும் என்னை மட்டம் தட்டியும் பல ஆயிரம் பேர் முன்பு பேசியது வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு

  நீங்கள் ஆட்டோகிராஃப் வாங்க விரும்பிய நபர்?

  நான் பார்க்க விரும்பிய பிரமுகர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

  உங்களுடைய முதல் கம்போசிசன் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி இருந்தது?

  அன்னக்கிளி பாடல் பதிவின்போது மின்சாரம் கட் ஆனது மனதை பெரிய அளவில் பாதித்தது. இயக்குநர் பஞ்சு அருணாசலம் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய தம்பி தான் தயாரிப்பாளர். என்னை சோதித்துப் பார்க்கும் வகையில் ஒரு ரெக்கார்டிங் வைத்துப் பார்த்தனர். அப்போது பாடலை துவங்கும் முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மிகுந்த மனவேதனையை தந்தது. பின்னர் இயக்குனர் பி.மாதவன் வந்து மாரியம்மன் குங்குமத்தை தந்தார். அதன் பின்னர் மீண்டும் பாடல் பதிவை தொடங்கினோம்.

  பிடித்த இசைக் கருவி எது?

  எனக்கு பிடித்த இசைக்கருவி எனது மனதுதான். அதை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கெட்ட எண்ணங்களை வெளியேற்றி நல்ல எண்ணத்தை வைத்தால் மனது தூய்மையாக இருக்கும்.

  நீங்கள் எப்போது சென்னை வந்தீர்கள்?

  1968-ம் ஆண்டு மார்ச் மாதம் நான் சென்னை வந்தேன்

  அப்போது பணம் இருந்திருந்தால் இதை செய்திருப்பேன் என்று எதையாவது எண்ணியதுண்டா?

  அப்போதும் எனது அம்மா கொடுத்த ரூ. 400 பணம் இருந்தது.

  நீங்கள் டூயட் பாட விரும்பிய பாடகி யார்?

  ஆஷா போஸ்லே

  இவ்வாறு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த இளையராஜா பல பாடல்களையும் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

  ஒர்க்கை விட ஒர்க் அவுட் தான் ரொம்பப் பிடிக்கும்! - அருண் விஜய் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Ilayaraja 75th birthday, Music director ilayaraja

  அடுத்த செய்தி