தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி சங்கர். அருண் விஜய், பிரசன்னாவுடன் அவர் நடித்த ‘மாஃபியா சாப்டர் 1’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாண் உடன் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’, சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
இந்நிலையில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் இதை அவர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹரி - அருண் விஜய் முதன்முறையாக இணையும் இத்திரைப்படத்தின் கதை ஆக்ஷன், எமோஷன் கலந்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை, காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்க உள்ளதாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
‘அருவா’ என்ற டைட்டிலில் உருவாகும் அந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கொரோனா ஊரடங்கால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் ‘அருவா’ படத்தின் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாகவும் இயக்குநர் ஹரி அறிவித்தார்.
இதனிடையே சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்ற சூர்யாவின் அறிவிப்பு வெளியானது. இதற்கு திரைத்துறையினர் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் சூர்யா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஹரி.
ஆனால் சூர்யா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் ‘அருவா’ திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், அருண் விஜய்யை வைத்து ஹரி அத்திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரி - அருண் விஜய் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் இந்தப் படம் அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் 2021-ம் ஆண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அருண் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ‘அருவா’ படத்தின் கதைதான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.