சர்வதேச வேட்டி தினம் : எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை.. தமிழ் சினிமாக்கள் காட்டிய வேட்டியின் சிறப்பு..

சர்வதேச வேட்டி தினம் : எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை.. தமிழ் சினிமாக்கள் காட்டிய வேட்டியின் சிறப்பு..

வேட்டி தினம்

  • Share this:
பொதுவாக ஆண்களின் உடை என்பது அவர்களின் கொள்கையையும் பல நேரங்களில் அவர் சார்ந்த தொழிலையையும் வெளிப்படுத்தும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. சினிமாவிலும் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்த அந்த கதாபாத்திரம் உடுத்தும் உடை மிக முக்கியமானதாக முன்னிறுத்தப்படும்.

பெரும்பாலும் கிராமத்து கதைகள், படிக்காத கதாநாயகன் போன்ற கதாபாத்திரங்களை மேற்கோள்காட்ட அந்த கதாபாத்திரங்களுக்கு வேட்டியை அணிவிப்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. ஆனால் நாளடைவில் பி அண்ட் சி ரசிகர்கள் மனதில் மாஸ் ஹீரோ என்ற பிம்பத்தை உருவாக்க வேட்டியை முன்னணி நாயகர்கள் பலரும் ஆயுதமாக பயன்படுத்த தொடங்கினார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் வேட்டியை எவ்வாரெல்லாம் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை அலசும் ஒரு சிறப்புத் தொகுப்புதான் இது:

எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஆங்கில படங்களின் தாக்கமே இங்கு அதிகளவில் இருந்ததால் பெரும்பாலான படங்களில் இவர்கள் கோட் சூட் அணிந்து உலா வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். கதாநாயகன் சாமானியனாக இருந்தாலும் கோட் சூட் அணிவதே அன்றைய காலக்கட்டத்தில் வழக்கமாக இருந்தது. எனினும் உரிமைக்குரல் போன்ற படங்களில் விவசாயியாக நடித்த எம்.ஜி.ஆர் அதை உணர்த்தும் விதமாக வேட்டி அணிந்து நடித்திருப்பார். எனினும் அந்த படத்தில் வேட்டியை கால்களுடன் அவர் இறுக்க உடுத்தியிருந்த விதம் ஆந்திரா பாணியில் இருந்ததாகவும் தமிழர் கலாச்சாரத்தோடு அவை ஒட்டவில்லை என்றும் பின்னாளில் விமர்சிக்கப்பட்டது.எம்.ஜி.ஆரை போலவே மற்றொரு உச்ச நட்சத்திரமான சிவாஜி கணேசனும் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் மேற்கத்திய பாணியிலான ஆடைகளையே பயன்படுத்தி வந்தார். எனினும் விதிவிலக்காக பாரத விலாஸ், வியட்நாம் வீடு போன்ற படங்களின் பாடல் காட்சிகளில் அதன் சூழலுக்கேற்ப வேட்டி அணிந்து தோன்றியிருக்கிறார் நடிகர் திலகம்.

இவர்களுக்கு அடுத்து வந்தவர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டியை கச்சிதமாக பயன்படுத்தியதோடு வேட்டி கட்டிய கதாபாத்திரங்களை கொண்டு தன்னுடைய இமேஜையும் கணிசமாக உயர்த்திக் கொண்டார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வளர்ந்துவரும் நாயகனாக இருந்த ரஜினியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற படம் முரட்டுக்காளை. ரஜினிக்கு மிகப்பெரிய மாஸையும் புகழையும் பெற்றுத்தந்த படங்களில் இதுவும் ஒன்று. கிராமத்து இளைஞனாக இப்படத்தில் ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரமும் வேட்டி சட்டையுடன் அவர் தோன்றிய கெட்டப்பும் அந்நாளில் பெரும் வரவேற்பை பெற்றதோடு பி,சி ஏரியாவில் அவரை அள்ளி அரவனைத்து கொள்ளவும் காரணமாய் அமைந்தது.

கையில் எந்த பொருள் கிடைத்தாலும் அதை வைத்து ஸ்டைல் செய்வது ரஜினியின் தனிச்சிறப்பு. அந்தவகையில் தன்னுடைய படங்களில் வேட்டியையும் ஸ்டைலாக உடுத்தி அசர வைத்தார் ரஜினிகாந்த். எஜமான் படத்தில் வேட்டி சட்டை மற்றும் கழுத்தில் மாலையுடன் ரஜினி தோன்றிய புகைப்படங்கள் தற்போதுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பதே இதற்கு சாட்சி.

இதற்கெல்லாம் உச்சமாக தர்மத்தின் தலைவன் படத்தில் வேட்டி கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு காட்சியிலும் வசனம் பேசியிருப்பார் ரஜினிகாந்த். ஆங்கிலேயர்கள் அவர்களுடைய வெப்பநிலைக்கேற்ப கோட் சூட் அணிவதை கண்மூடித்தனமாக நாம் பின்பற்றக்கூடாது என்பதை தன்னுடைய பாணியிலேயே விளக்கியதுடன் வேட்டியின் மகத்துவம் குறித்தும் ரஜினி பேசியிருப்பார்.வேட்டி சட்டையுடன் ரஜினி அசத்திய இன்னொரு படம் அருணாச்சலம். கதைப்படி கிராமத்துவாசி என்பதால் வேட்டி சட்டை கையில் காப்பு, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை என ரஜினியின் தோற்றம் இந்த படத்திலும் பட்டையை கிளப்பியது. இந்த படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் ரஜினிக்கு வேட்டி சட்டை என்பது செண்டிமெண்ட்டாகவும் மாறிபோனது.

ரஜினியை போலவே கமலுக்கும் அவர் வேட்டி கட்டிய படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது. இதற்கு உதாரணமாக நாயகன் படத்தை சொல்லலாம். மும்பை பின்னணியில் வசிக்கும் தமிழர் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக இப்படத்தின் பெரும்பகுதியில் கமல் ஹாசன் வேட்டி அணிந்து நடித்திருப்பார். நடராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என்பதால் இப்படத்தின் இரண்டாம் பாதி முழுக்க அவரை போலவே வெள்ளை வேட்டி சட்டையுடன் கமல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சர்வதேச வேட்டி தினம் - இணையத்தில் வைரலாகும் வேட்டி தின மீம்ஸ்

முதல் பாதியில் பேண்ட் சட்டை, இரண்டாம் பாதியில் வேட்டி சட்டை என இதே ஃபார்முலாவில் கமல் நடித்த மற்றொரு படம் தேவர் மகன். முதல் பாதியில் மேற்கத்திய கலாச்சாரம் மீது தாக்கம் கொண்ட வாலிபனாக பேண்ட் சட்டையில் தோன்றிய கமல், இராண்டாம் பாதியில் பொறுப்பானவராக மாறிவிட்டார் என்பதை உணர்த்தும் விதம் வேட்டை சட்டையுடன் தோன்றியிருப்பார். ஒருவகையில் அவருடைய கதாபாத்திர மனநிலை மாறிவிட்டது என்பதை உணர்த்தும் குறியீட்டாகவும் இதில் வேட்டை, சட்டை பயன்படுத்தப்பட்டிருக்கும்.80-களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து உருவாகியிருந்தது. பெரும்பாலும் இவர்கள் கதையின் நாயகர்கள் அழுக்குபடிந்த வேட்டி, சட்டையுடன் கிராமத்து வீதிகளில் உலாவரும் எளிய மனிதர்களை அப்படியே திரையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

90-களில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக அதிக வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்தவர் விஜயகாந்த். ரஜினி, கமல் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ’மண்ணின் மைந்தன்’ என்ற இமேஜ் விஜயகாந்துக்கு உருவாக, ஒருவகையில் அவர் உடுத்திய வேட்டியும் ஒரு காரணமாக மாறிபோனது.இன்றும் விஜயகாந்த் என்றால் வேட்டி சட்டையுடன் அவர் தோன்றும் காட்சிகளே நம் நினைவுக்கு வேகமாக வரும். அதற்கு மிக முக்கிய காரணமாக சின்ன கவுண்டர் படத்தை சொல்லலாம். ஊர் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக இப்படம் முழுக்க கரை படியாத வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் விஜயகாந்த் வலம் வருவார். அந்தவகையில் வேட்டி சட்டைக்கு மரியாதை ஏற்படுத்திய படம் என்றுகூட இப்படத்தை சொல்லலாம்.

விஜயகாந்தை போலவே வேட்டி கட்டிய கிராமத்து கதைகளில் நடித்து முன்னணி அந்தஸ்தை அடைந்த மற்றொரு நடிகர் சரத்குமார். வேட்டி சட்டையுடன் இவர் நடித்த நாட்டாமை, சூர்யவம்சம் ஆகிய படங்கள் அந்நாளில் ரஜினி, கமல் படங்களுக்கு இணையாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தியதோடு இவருக்கென தனி ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கி கொடுத்தது.

மனிதர்களை போலவே வேட்டிக்கும் பல குணங்கள் உண்டு என்பதை தமிழ் சினிமா தொடர்ந்து காட்சிப்படுத்தி வந்துள்ளது. வேட்டியை கரை படியாமல் உடுத்தி வந்தால் ஊர் தலைவர்கள் என்று சொல்லிய தமிழ் சினிமா, அதே வேட்டியை தொடை தெரிய மடித்து கட்டுவது ரவுடிஸத்தின் அடையாளம் என்பதை ராஜ்கிரண் வாயிலாக பல படங்களில் உணர்த்தியுள்ளது. தான் நடித்த பெரும்பாலான படங்களில் வேட்டி சட்டையுடனே வலம் வந்த ராஜ்கிரண், தமிழ்நாட்டில் மறைமுகமாக வேட்டிக்கு அம்சாஸிடராகவே செயல்பட்டார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.இவர்களுக்கு அடுத்தபடியாக தற்போதைய உச்ச நட்சத்திரங்களில் வேட்டி கட்டி அதிக ஹிட் படங்களை கொடுத்தவராக அஜித்தே இருக்கிறார். அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த அஜித், தனக்கு தென் மாவட்டங்களில் அதிக ரசிகர்கள் இருப்பதை உணர்ந்து அவர்களுக்காக நடித்த படம்தான் அட்டகாசம். தமிழ் சினிமாவின் தல தூத்துக்குடி தலயாக இப்படத்தில் அதகளம் செய்திருப்பார். இன்றைய தேதியில் கூட தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சென்றால் அங்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை உடுத்திய அஜித்தின் அட்டகாசம் பட பேனர்களை அதிகம் காணலாம். அந்தளவு இந்த கெட்டப் அஜித்தை ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக்கியது.

சமகால நடிகர்களில் வேட்டியின் மகத்துவத்தை நன்கு உணர்ந்த நடிகர் அஜித் தான். எப்போதெல்லாம் தன்னுடைய கேரியரில் ஒரு தொய்வு ஏற்படுகிறதோ, அல்லது மாற்றம் தேவை என்பதை உணர்கிறாரோ அப்போதெல்லாம் வேட்டி கட்டிய ஒரு கிராமத்து கதையில் நடித்து அதை சரி செய்வது அஜித்தின் யுக்தி. அப்படித்தான் பில்லா, மங்காத்தா என தொடர்ந்து கோட் சூட் உடுத்தி ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம்வந்த அஜித், ஒரு கட்டத்தில் இவை போரடிக்க ’வீரம்’ வாயிலாக தடாலடியாக வேட்டி சட்டைக்கு தாவினார்.

அதேபோல் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட விவேகம் படம் தோல்வியடைந்த போது அஜித்துக்கு ஒரு தெளிவு கிடைத்தது. மண் சார்ந்த உணர்வுப்பூர்வமான படங்களே தற்போது மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை உணர்ந்த அஜித், அதற்காக தேர்ந்தெடுத்ததும் ’விஸ்வாசம்’ எனும் வேட்டி சட்டையுடன் கூடிய ஒரு கிராமத்து கதையைதான். இது போதாமல் இப்படத்தில் வேட்டியின் பெருமையை பேசும் ஒரு பாடலையும் இடம்பெற செய்திருப்பார். வேட்டியின் மகத்துவத்தை அஜித் எந்தளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இந்த பாடலே சான்றாக அமையும்.அஜித்தை தொடர்ந்து விஜய்யும் சமீபத்திய தன்னுடைய படங்களில் வேட்டிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக மெர்சல் படத்தில் சர்வதேச விமான நிலையத்தில் வேட்டியுடன் விஜய் செல்வது போலவும் அதனால் அவர் மீது சந்தேகம் கொள்ளும் அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து ஏளனமாக விசாரிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதன்முடிவில் ’மற்றவர்களுக்காக நாம் நம் மரபுகளை மாற்றிகொள்ள கூடாது’ என வேட்டி அரசியலை முன்னிறுத்தி வசனமும் பேசியிருப்பார் விஜய்.

இதே படத்தில் வரும் பிளாஷ் பேக் காட்சிகளிலும் வேட்டி சட்டையுடன் தளபதி எனும் கதாபாத்திரத்தில் கெத்தாக வலம் வருவார் விஜய். ஆளப்போறான் தமிழன் என வேட்டி கட்டி விஜய் ஆடியது அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது என்றால் இன்னொருபுறம் அரசியல் களத்தில் இப்பாடல் அனல் பறக்க செய்தது.

மற்ற நடிகர்கள் எல்லாம் தங்களுடைய இமேஜை உயர்த்துவதற்காக திரைப்படங்களில் வேட்டி கட்டி நடித்துக் கொண்டிருக்க, நடிகர் தனுஷோ சற்று வித்தியாசமாக பொது விழாக்களில் கூட வேட்டி கட்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதுகுறித்து ஒருமுறை பேசிய தனுஷ், வேட்டியே தமிழர்களின் பாரம்பரிய உடை எனவும் அதை உடுத்துவதே தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார்.

சமகால இளைஞர்களில் மத்தியில் வேட்டி கட்டும் ஸ்டைலை மீண்டும் பிரபலப்படுத்திய ஒரு படம் இருக்கிறது. ஆனால் அது தமிழ் படமல்ல மலையாள படம் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் கருப்பு சட்டை வெள்ளை வேட்டியுடன் நிவின் பாலி தோன்றிய காட்சிகள் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அதே கெட்டப்பில் ஏராளமான இளைஞர்கள் சுற்றித்திரியவும் காரணமாக அமைந்தது.சமீப காலமாக தமிழ் ரசிகர்களை கவர வேண்டும் என்றால் பிற மொழி நடிகர்கள் கூட வேட்டியையே ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு உதாரணமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சொல்லலாம். தன்னுடைய சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க விரும்பிய ஷாருக்கான், அதற்காக அப்படத்தில் லுங்கி டான்ஸ் எனும் பாடலையும் இடம்பெறச் செய்து லுங்கியுடன் ஆடி பாடியிருப்பார். தமிழர்களை ஷாருக்கான் ஏளனமாக சித்தரித்திருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தாலும் ஆசியாவே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டார் தமிழ் மக்களிடம் சென்று சேர, இப்படியொரு பாடலை வலுக்கட்டாயமாக தன்னுடைய படத்தில் இடம்பெற செய்திருக்கிறார் என்றால் அதுவே அதன் மகத்துவத்தை உணர்த்தும்.

என்னதான் கோட் சூட், ஜீன்ஸ் பேண்ட் என ஸ்டைலாக வலம் வந்தாலும் தமிழ் மக்கள் மனதில் நீண்ட காலம் சிம்மாசனம் போட்டு அமர வேண்டும் என்றால் வேட்டி கட்டிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற புரிதல் சமீப காலமாக எல்லா முன்னணி நடிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பாண்டிராஜ் படங்களின் வெற்றியும் கூட ஒருவகையில் காரணமாக சொல்லலாம். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என இவர் இயக்கிய படங்கள் வேட்டி கட்டிய ஹீரோக்களை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி 80, 90-களை போல மீண்டும் இதை ஒரு டிரெண்டாகவும் மாற்றத் தொடங்கியுள்ளது.

வேட்டி வெறும் உடை மட்டுமல்ல, அதுவொரு அடையாளமும் கூட என்பதை தமிழ் சினிமா தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே வருகிறது. ஊர் பெரியவர் என்றாலும் வேட்டி, விவசாயி என்றாலும் வேட்டி, நிதானம் என்றாலும் வேட்டி ரவுடிஸம் என்றாலும் வேட்டி என வேட்டியின் குணாதியசங்களை படத்துக்கு படம் மாறுபடுத்தி காட்சிப்படுத்தி வந்துள்ளது. இதற்கெல்லாம் உச்சமாக நம் ஹீரோக்களுக்கு ஒரு ஹிட் படம் தேவையென்றால் உடனடியாக ‘வேட்டி சட்டை ஒன்று பார்சல்’ என்று கேட்குமளவுக்கு தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வேட்டிக்கு எப்போதும் ஒரு தனி மரியாதையே உண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது.
Published by:Sivaranjani E
First published: