‘இந்தியன் 2' பட படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
கடந்த 19-ம் தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக் குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து தொடர்பாக விசாரிக்க இயக்குநர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து கடந்த 27-ம் தேதி இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து குறித்து விசாரித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் வரும் செவ்வாய்கிழமை வேப்பேரி குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.