INCOME TAX RIDE IN FAMOUS BOLLYWOOD DIRECTORS AND TAPSEE PANNU HOUSE TMN
நடிகை டாப்ஸி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குநர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!காரணம் இது தானா ?
நடிகை டாப்ஸி
3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, தற்போது சோதனை நடத்தப்படுகிறதா என பலதரப்பினருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
பிரபல நடிகை டாப்ஸி, இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானே, தயாரிப்பாளர்கள் விகாஸ், மது மாண்டேனா ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் பாண்டம் பிலிம்ஸ். ஆனால், தயாரிப்பாளர் விகாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டே மூடப்பட்டுவிட்டது.
இந்நிலையில், பாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரில், அந்த நிறுவனத்தில் தொடர்புடைய இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர்கள் விகாஸ், மது மாண்டேனாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ஒரு படத்தில் நடித்த டாப்ஸி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, தற்போது சோதனை நடத்தப்படுகிறதா என பலதரப்பினருக்கும் கேள்வி எழுந்துள்ள நிலையில், நடிகை டாப்ஸியும், அனுராக் காஷ்யப்பும் மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததாலேயே தற்போது சோதனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டனர். அதில் ரிஹானாவின் கருத்துக்கு நடிகை கங்கனா ரணாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, நடிகர் அக்ஷய் குமார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து ட்வீட் செய்த நடிகை டாப்ஸி, ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது என்றும் பதிவிட்டிருந்தார். இவ்வாறு மத்திய அரசுக்கு எதிராகவும், நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராகவும் கருத்து தெரிவித்ததே, தற்போதைய சோதனைக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.