• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ilayaraja | 40 ஆண்டுகளாக பயன்படுத்திய பிரசாத் ஸ்டுடியோவின் அறைகள் அனைத்தையும் காலி செய்தார் இளையராஜா..

Ilayaraja | 40 ஆண்டுகளாக பயன்படுத்திய பிரசாத் ஸ்டுடியோவின் அறைகள் அனைத்தையும் காலி செய்தார் இளையராஜா..

Youtube Video

Ilayaraja | பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து 160 பெட்டிகள் 7 பீரோக்கள் என இளையராஜாவின் மொத்த பொருட்களும் இரண்டு லாரிகளில் ஏற்றப்பட்டது.

  • Share this:
    சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 40 ஆண்டுகளாக இசைஞானி இளையராஜா இசை அமைத்து வந்த அறைகளை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் வலியுறுத்தி வந்தது. காலி செய்ய இளையராஜா மறுத்துவந்த நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றம் எடுத்துச் செல்லப்பட்டு கடந்து ஒன்றரை வருடமாக வழக்கு நடந்து வந்தது.

    இந்நிலையில், இளையராஜா தன்னுடைய தனி அறையில் ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டியும், இளையராஜாவின் பொருட்களை எடுத்துக் கொள்ளவதற்கும் இருதரப்பிற்கு இடையே நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டது. அதன்படி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணையர்கள் முன்னிலையில் பொருட்கள் சரிபார்த்து எடுத்து செல்லவும் இளையராஜா நேற்று ஒருநாள் தியானம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, இளையராஜாவிற்கு சொந்தமான பத்ம விபூஷன், கைகளால் எழுதப்பட்ட இசைக்குறிப்புகள், இசை கருவிகள் உட்பட 160 பெட்டிகள், 7 பீரோக்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரிபார்த்து இரண்டு லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டது.

    மேலும், இளையராஜாவின் தனி அறை மற்றும் தனிப்பட்ட பீரோ உடைக்கப்பட்டாதால் மனமுடைந்த இளையராஜா தியானம் செய்வதற்கு பிரசாத் ஸ்டூடியோ வரவில்லை என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா, அவற்றிற்கு சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளனவா என்பனவற்றை எல்லாம் சரிபார்க்கும் பணி நேற்று காலை முதல் நடைபெற்றது.

    சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக இந்தபணி நடைபெற்று முடிந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர்கள் லக்ஷ்மி நாராயணன் மற்றும் நவீன் மூர்த்தி, அனைத்து பொருட்களும் சரிப்பார்க்கப்பட்டு கணக்கிட பட்டுள்ளது. அனைத்தும் நீதிமன்ற ஆணை படி முறையாக நடைபெற்றது என்று கூறினர்.

    மேலும், பிரசாத் ஸ்டியோவில் இளையராஜாவின் அனைத்து பொருட்களும் 160 பெட்டிகளிலும் 7 பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் மீண்டும் எடுத்து சரிபார்த்து இளையராஜா தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கூறினர்.

    இளையராஜாவுக்கு தனி அறை இருந்ததாக கூறப்பட்ட இடத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வேறு அறையாக பயன்பாட்டில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர்கள் சலீம் மற்றும் இளம்பராதி கூறுகையில்,  “இளையராஜாவிடம் அவர் தரப்பில் வந்தவர்கள் அவருக்கு சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இளையராஜா இருந்த தனி அறை IT ரூமாக மாற்றப்பட்டது. இதனை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்” என்று கூறினர்.

    இசைஞானி இளையராஜா VS பிரசாத் ஸ்டூடியோ

    மேலும், “நேற்று மாலை 4 மணி வரை இளையராஜா வருவார் என காத்திருந்தோம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது சார்பில் வந்திருந்த சுதாகர், பரணிதரன், சண்முக வேல் ஆகியோர் தெரிவித்தனர். அதனால் நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆணையர்கள் முன்னிலையில் அனைத்தும் சரிபார்த்து கொடுக்கப்பட்டது. பத்ம விபூஷன் உட்பட அனைத்து பொருட்களும் பாதுகாப்புடன் பேக் செய்யப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. இளையராஜா சார்பில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டது. அதனால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது” என்றும் கூறினர்.

    இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் சரவணன் மற்றும் தியாகராஜன்செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “இளையராஜாவின் தனி அறையின் சாவி எங்களிடம் உள்ளது. ஆனால், அந்த அறை இப்போது இல்லை. அந்த அறையில் தனிப்பட்ட பொருட்கள், பட்டம், கையால் எழுதிய விலைமதிப்பில்லா இசைக்குறிப்புகள் என இருந்த எல்லாவற்றையும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்து குப்பை போல போடப்பட்டுள்ளன.

    தான் வாழ்ந்த கோயில் போன்ற இடம் இடிக்கப்பட்டதை அறிந்த இளையராஜா மனமுடைந்து தியானம் செய்ய வரவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அநீதி நடந்துள்ளது. இதை நீதிமன்ற ஆணையர்களிடம் எடுத்து கூறியுள்ளோம் அவர்கள் இந்த தகவல்களை பதிவு செய்துள்ளனர். அடுத்து என்ன செய்யலாம் என இளையராஜா அவர்களிடம் பேசி ஆலோசனை செய்து விட்டு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.


    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: