உலகமெங்கும் ரசிகர்களின் இதயங்களை வென்ற இளையராஜா, கடந்த 45 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பகுதி நேரத்தை பிரசாத் ஸ்டுடியோவிலேயே கழித்துள்ளார். இளையராஜா, ரசிகர்களின் மனம் உருகும் பல பாடல்களை சரமாக தொடுத்ததும் இந்த ஸ்டூடியோவில் தான். 1976 ஆம் ஆண்டு இளையராஜா முதன்முதலில் இசையமைத்த அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல் பதிவு ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது,
அந்த திரைப்படத்தில் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் "விஜயா வாகினி" ஸ்டுடியோவில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது இளையராஜா பல ஸ்டுடியோக்களிலும் மாறி மாறி இசை அமைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு கட்டத்தில் பிரசாத் ஸ்டூடியோ தன் வசதிக்கு ஏற்ப இருப்பதை உணர்ந்த இளையராஜா, இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து மேற்கொள்ள முடிவு செய்தார். இளையராஜா தங்களது ஸ்டூடியோவில் இசையமைப்பது தங்களுக்கான பெருமை என நினைத்த ஸ்டூடியோ நிர்வாகமும் இளையராஜாவின் கோரிக்கைக்கு செவிமடுத்தது. இதனைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோ என்பது இளையராஜாவின் ஸ்டூடியோ என பெயர் பெறும் நிலை உருவானது.
சென்னையில் இருக்கும் நாட்களில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் ரமண மகரிஷியின் புகைப்படத்திற்கு முன் அமர்ந்து தியானம் செய்வதை வழக்கமாக கொண்டவர் இளையராஜா. அவதாரம் திரைப்படத்தில் இடம்பிடித்த "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வன்னமோ மனசுல" என்ற பாடலை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் ஒரு சில நிமிடங்களில் எழுதி முடித்து விட்டதாக நாசர் பலமுறை பேசியுள்ளார்.
இதுபோல, தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றி பாடல்களை இளையராஜா ஒரு கவிதையை போல எழுதி முடித்தது பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அந்த அறையில்தான். இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அறையைத் தாண்டி புதிய இடத்தில் பாடலுக்கு இசை அமைக்கச் சொன்னால், அவர் அத்தனை செளகரியமாக உணர்வதில்லை என இளையராஜாவுடன் பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய அவரது நெருக்கமான சகாக்கள் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா புதிய இசைக் கருவிகள் வாங்கி அலங்கரித்து அழகு பார்த்ததும் இந்த பிரசாத் ஸ்டுடியோவில் தான். ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் இளையராஜாவிடம் இசை கற்றுக் கொண்டதும் இதே பிரசாத் ஸ்டூடியோவில் தான்.
இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்தபோது அவர் நினைத்திருந்தால் தனக்கென தனி ஸ்டுடியோக்களை அவர் எதிர்பார்க்கும் வசதிகளோடு உருவாக்கியிருக்க முடியும். ஆனால், தன் உணர்வுகளோடு கலந்துவிட்ட பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து நகர்ந்துவிடக் கூடாது என எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருந்தார் இசைஞானி இளையராஜா.
பெண்களின் ஆடையால் மனம் கெட்டுப் போகுமா?"- கமல்ஹாசன் (வீடியோ)
அதன் காரணமாகவே, இனி பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைக்க வாய்ப்பில்லை என்ற சூழல் வந்த பொழுது பிரசாத் ஸ்டூடியோ உடனான நினைவுகளை ஒரு முறை நினைவலையில் ஓட்டிப் பார்க்க ஒரு மணி நேரம் தியானம் செய்யவேண்டும் என அனுமதி கேட்டு காத்திருக்கிறார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பலருக்கும் காதல்,சோகம், பாசம் என பல உணர்வுகளை இசையால் பதிய வைத்த இசைஞானியின் 45 ஆண்டுகால பயணத்தை ஒரு மணி நேர தியானத்தில் ஓடவிட்டு பார்ப்பது சற்றே உருக்கமான ஒன்று தான்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.