• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இளையராஜாவை நிபந்தனைகளுடன் அனுமதிக்கத் தயார் - பிரசாத் ஸ்டுடியோ

இளையராஜாவை நிபந்தனைகளுடன் அனுமதிக்கத் தயார் - பிரசாத் ஸ்டுடியோ

இளையராஜா

இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய அனுமதிக்க தயார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சுமார் 40 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவுடன் நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஸ்டுடியோவுக்குள் சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக விளக்கமளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இளையராஜவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய அனுமதிக்கத் தயார் என ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை இளையராஜா வாபஸ் பெற வேண்டும் எனவும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை இளையராஜா உரிமை கோரக் கூடாது எனவும் தன்னுடன் ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர், மற்றும் வழக்கறிஞர் மட்டுமே வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஸ்டுடியோவுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த ஸ்டுடியோ தரப்பு, இளையராஜா வந்து செல்லும் நாள் குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தனது பெயரில் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் பிரமான மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பிராசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளை ஏற்று இன்று மாலை உயர்நீதிமன்றத்தில் பிரமான மனு தாக்கல் செய்வதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் நாளை தள்ளி வைக்கப்பட்டது.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: