இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்பது நியாயமில்லை என்று இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
சம்பளம் பெற்று இசையமைத்த பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோருவது சட்டவிரோதம் என திரைப்பட தயாரிப்பாளர்கள் 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார், அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும்போது இயக்குனரை தீர்மானிக்கின்றனர்.
இயக்குனரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்யப்படுகின்றனர். கடந்த 80 ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் சினிமா துறையில் நடந்து வருகின்றது.
ஊதியம் பெற்றுக்கொண்டு பணியாற்றும் இசைமைப்பாளர்கள் தங்கள் பணிக்கு எந்த உரிமையும் கோர முடியாது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர்தான். இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்களின் காப்புரிமை தனக்கே சொந்தம் என கூறி வருகிறார்.
இளையராஜாவை இசையமைப்பாளராக நியமித்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் காப்புரிமையை அவருக்கு வழங்கி, எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் அவர் இசையமைத்த பாடல்கள் மீது உரிமை கோருவது சட்டவிரோதமானது.
இதை அனுமதித்தால் படத்தின் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், இயக்குனர் ஆகியோரும் காப்புரிமை கோரக் கூடும். பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் எதுவும் கிடைக்காத நிலை உருவாகும்
எனவே தயாரிப்பாளர்களே அப்படத்தின் இடம்பெற்றிருக்கும் காட்சி, பாடல், என அனைத்திற்கு முழுமையான உரிமையானவர்கள் என அறிவிக்க வேண்டும்.
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். தங்களது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் இளையராஜா சம்பாதித்த பணம் குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “ஒரு படத்துக்கு இசையமைக்க படத்தின் தயாரிப்பாளர் பணம் கொடுக்கும்போது இளையராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை. படத்தின் இயக்குனர்தான் எந்த சூழ்நிலைக்கு பாடல் தேவை என்பதை இசையமைப்பாளரிடம் கூறுவார். அதற்கு ஏற்பவே இசையமைப்பாளர் இசையமைக்கிறார். அந்த இசைக்கான வரிகளை பாடலாசிரியர் எழுதுகிறார். அவருக்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்கிறார். இசையமைப்பாளருடன் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்கிறார். எனவே ஒரு தயாரிப்பாளர் தான் பணத்தை செலவு செய்து ஒரு பாடலை சொந்தமாக்குகிறார்”என்று கூறினார்.
சமீபத்தில் தனது பாடல்களின் காப்புரிமை குறித்து வீடியோ வெளியிட்டிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, “என்னுடைய அனுமதி பெறாமல் எனது பாடல்களை பாட விரும்புகிற இசைக்கலைஞர்களுக்கு முன் அனுமதி பெற்று பாடுவதே முறையாகும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஐபிஆர்ஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக் கொண்டிருந்த ராயல்டி தொகையை தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். இதற்கான உரிமையை அவர்களுக்கு வழங்குகிறேன்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரிழந்த பசு மாடுகள் - வீடியோ
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor vijay, Ilayaraja, Ilayaraja songs