• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 45 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பகுதி நேரத்தை இளையராஜா செலவிட்டது பிரசாத் ஸ்டுடியோவில் தான்

45 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பகுதி நேரத்தை இளையராஜா செலவிட்டது பிரசாத் ஸ்டுடியோவில் தான்

இளையராஜா

இளையராஜா

தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றிப் பாடல்களை இளையராஜா ஒரு கவிதையை போல எழுதி முடித்தது பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள அவரது அந்த அறையில் தான்.

  • Share this:
ஒரு மணி நேரம் தியானம் செய்வதற்காக இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் அனுமதி கேட்டு காத்திருக்கும் அளவிற்கு பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இளையராஜாவிற்கும் அப்படி என்ன நெருங்கிய தொடர்பு என்பதை தற்பொழுது பார்க்கலாம்.

உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்ற இளையராஜாவின் இதயத்தை வென்ற அரங்கம் பிரசாத் ஸ்டுடியோ என்றால் அது மிகையாகாது. பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குநர்களும் இளையராஜாவை பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக புறப்பட்டு வந்து இறங்கிய இடம் பிரசாத் ஸ்டுடியோ. ஏனென்றால் இளையராஜா தனது சொந்த வீட்டில் இருந்ததை விட அதிக நாட்கள் பிரசாத் ஸ்டூடியோவில் தான் இருந்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பகுதி நேரத்தை இளையராஜா செலவிட்டது பிரசாத் ஸ்டுடியோவில் தான்.

இளையராஜா ரசிகர்களின் மனம் உருகும் பல பாடல்களை சரமாக தொடுத்தது பிரசாத் ஸ்டுடியோவில் தான். இதன் காரணமாக இளையராஜாவிற்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கும் பிரிக்க முடியாத பந்தம் பின்னிப் பிணைந்து இழையோடுகிறது. 1976-ம் ஆண்டு இளையராஜா முதன்முதலில் இசையமைத்த ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் பாடல் பதிவு நடைபெற்றது ஏவிஎம் ஸ்டுடியோவில். பின்னர் அன்னக்கிளி திரைப்படத்தில் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் விஜயா வாகினி ஸ்டுடியோவில் தான் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது இளையராஜா பல ஸ்டுடியோவிலும் மாறி மாறி இசை அமைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பிரசாத் ஸ்டூடியோ தன் வசதிக்கு ஏற்ப இருப்பதை உணர்ந்த இளையராஜா எல்லா திரைப்படங்களின் இசை பணிகளையும் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து மேற்கொள்ள முடிவு செய்தார். இளையராஜா தங்கள் ஸ்டுடியோவில் இசையமைப்பது தங்களுக்கான பெருமை என நினைத்த ஸ்டுடியோ நிர்வாகமும் இளையராஜாவின் கோரிக்கைக்கு தாராளமாக செவிமடுத்தது.

இதனைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோ என்பது இளையராஜாவின் ஸ்டூடியோ என பெயர் பெரும் நிலை உருவானது. இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இளையராஜாவை காண பிரசாத் ஸ்டுடியோவின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் காலையில் கூடுவது வழக்கமாக இருந்து வந்தது. சென்னையில் இருக்கும் நாட்களில் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது அறையில் ரமண மகரிஷியின் புகைப்படத்திற்கு முன் அமர்ந்து தியானம் செய்வதை வழக்கமாக கொண்டவர் இளையராஜா.

‘அவதாரம்’ திரைப்படத்தில் இடம்பிடித்த ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வன்னமோ மனசுல’  என்ற பாடலை இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது அறையில் நாசர் முன்னிலையில் ஒரு சில நிமிடங்களில் எழுதி முடித்து விட்டதாக நாசர் பலமுறை ஊடகங்களில் பேசியுள்ளார். இது போல தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றிப் பாடல்களை இளையராஜா ஒரு கவிதையைப் போல எழுதி முடித்தது பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள அவரது அந்த அறையில் தான்.

புதிய இடங்களில் படுத்தால் உறக்கம் வராது என நம்மில் பலர் அடிக்கடி சொல்லிக் கேட்போம். அதுபோல இளையராஜாவிற்கு அவரது பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள அறையைத் தாண்டி புதிய இடத்தில் பாடலுக்கு இசை அமைக்கச் சொன்னால், அவர் அத்தனை செளகரியமாக உணர்வதில்லை என இளையராஜாவுடன் பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய அவரது நெருக்கமான சகாக்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.

இளையராஜா புதிய இசைக் கருவிகள் வாங்கி அலங்கரித்து அழகு பார்த்ததும் பிரசாத் ஸ்டுடியோவில் தான். ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் இளையராஜாவிடம் இசை கற்றுக் கொண்டதும் இதே பிரசாத் ஸ்டுடியோவில் தான். இளையராஜா கொடுக்கும் இசை துணுக்குகளை கம்ப்யூட்டரில் ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்து பல பாடல்களை உருவாக்கியது பிரசாத் ஸ்டுடியோவில் தான்.

இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்தபோது அவர் நினைத்திருந்தால் தனக்கென தனி ஸ்டுடியோக்களில் அவர் எதிர்பார்க்கும் வசதிகளோடு உருவாக்கியிருக்க முடியும் ஆனால் தன் உணர்வுகளோடு கலந்துவிட்ட பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து நகர்ந்துவிடுதல் கூடாது என எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருந்தார் இசைஞானி இளையராஜா.

அதன் காரணமாகவே இனி பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைக்க வாய்ப்பில்லை என்ற சூழல் வரும் பொழுது பிரசாத் ஸ்டுடியோவில் உடனான நினைவுகளை ஒரு முறை நினைவலையில் ஓட்டிப் பார்க்க ஒரு மணி நேரம் தியானம் செய்யவேண்டும் என அனுமதி கேட்டு காத்திருக்கிறார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பலருக்கும் காதல்,சோகம், பாசம் என பல உணர்வுகளை இசையால் பதிய வைத்த இசைஞானியின் 45 ஆண்டுகால பயணத்தை ஒரு மணி நேர தியானத்தில் ஓடவிட்டு பார்ப்பது சற்றே உருக்கமான ஒன்று தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: