ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எழுத்தாலும் பேச்சாலும் தமிழைச் செதுக்கிய கலைஞர்… இசையாலும் குரலாலும் தமிழை உயர்த்திய இளையராஜா

எழுத்தாலும் பேச்சாலும் தமிழைச் செதுக்கிய கலைஞர்… இசையாலும் குரலாலும் தமிழை உயர்த்திய இளையராஜா

Special arrangement

Special arrangement

  • News18 Tamil
  • 7 minute read
  • Last Updated :

1953-ம் ஆண்டு கல்லக்குடி போராட்டத்தின்போது தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்த அந்தக் கணம் முதல் தமிழகத்தின் தலைப்புச் செய்தியானவர் கலைஞர் கருணாநிதி. அன்று தமிழக அரசியல் களத்தில் அவர் பற்ற வைத்த கொள்கை நெருப்பு அவர் இறந்த பிறகும் இன்றளவும் அனலைக் கக்கிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 66 ஆண்டுகளாக இந்தியாவின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்த அரசியல் ஆளுமை கலைஞர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு திருமண வீடுகளில் எல்லாம் இந்தி இசைதான் ஒலிக்கும். நம் தமிழகத்திலும் இந்திப் பாடல்கள்தான் டீக்கடைகள் தொடங்கி பல இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தன. அந்த நிலையை மாற்றி இன்று தமிழிசை, தமிழ் சினிமாப் பாடல் ஒலிக்காத வீடுகளே இல்லை, நிகழ்ச்சிகளும் இல்லை. ஏன் தமிழகம் தாண்டியும் தமிழ் இசைப் பாடல்கள், தமிழ் சினிமாப் பாடல்கள் ஒலிக்கின்றன. இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம், இளையராஜா .

அவரது இசையில் உருவான அன்னக்கிளி படப் பாடல்தான் திருமண வீடுகளில் தமிழ்ப் புரட்சிக்கு வித்திட்டது. அன்னக்கிளியின் மூலம் தமிழர்களைக் கவர்ந்திழுத்த அந்த இசைப் பேரரசனின் பிடியில் இருந்து இன்று வரை தமிழகம் மீளாமல் திளைத்துக்கொண்டிருக்கிறது.

எப்படி கருணாநிதி தன் அரசியல் பயணம் தொடங்கியது முதல் மரணம் வரை தமிழர் வாழ்வில் பேசு பொருளாக இருந்தாரோ, இன்னும் இருக்கிறாரோ, அதே போல்தான் இளையராஜாவும் அன்னக்கிளியில் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் தமிழர்களை தாலாட்டி ஆற்றுப்படுத்தும் அன்னையாக இருந்தார், இருந்துகொண்டிருக்கிறார்.

கலைஞர், இளையராஜா என்ற இருபெரும் ஆளுமைகளுக்கும் இருக்கும் முக்கியமான ஒற்றுமை, அவர்களுடைய பிறந்த தேதி. ஜூன் 3. ஆனால் கலைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவருக்கு மட்டுமே உரித்தானதாக மாற்றும் வகையில் தனது பிறந்தநாளை ஜூன் 2 அன்று கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார் இளையராஜா.

இந்த இருபெரும் ஆளுமைகளுக்குள் பிறந்த தேதியைத் தாண்டி வேறுபல ஒற்றுமைகளும் இருக்கின்றன. அவற்றைத் தேடியெடுத்துத் தொகுத்து, இன்றைய தலைமுறைமுறைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியே இந்தச் சிறப்புத்தொகுப்பு.

தமிழ் சினிமாவில் ஐம்பதுகள் வரை புராண, இதிகாசப் படங்கள்தான் அதிக அளவில் வெளிவந்தன. சமூகப் படங்கள், மக்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் மிக மிக அரிதாகவே வெளிவந்தன. அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய படம், கலைஞர் வசனத்தில் வெளியான பராசக்தி. தமிழ் சினிமாவின் வரலாற்றைப் பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின் என ஒரு கோடு போட்டுப் பிரித்துவிடலாம். அந்தப் படத்தை மேலோட்டமாகப் பார்த்தால்குடும்பக் கதை போல் இருக்கும், ஆனால் அது பல்வேறு சமூகப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அரசியல் பேசியிருப்பார் கலைஞர்.

பராசக்தி படத்திற்கு முன்பே பல படங்களில் நீதிமன்றக் காட்சிகள் வந்து இருக்கின்றன. ஆனால் பராசக்தி திரைப்படத்திற்குப் பிறகுதான் கிளைமாக்ஸ் காட்சியில் பொறிபறக்கும் நீதிமன்ற வசனக் காட்சிகள் என்ற புது பாணி உருவானது. பராசக்தியில் கலைஞர் உருவாக்கிக்கொடுத்த அந்த பாணி இன்று ஆன்லைனில் வெளியான பொன்மகள் வந்தாள் வரை தொடர்கிறது. கலைஞர் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பழையமரபை உடைத்த கலைஞன் மட்டுமல்ல, புத்தம் புதிய புரட்சிகர மரபை உருவாக்கியவரும்கூட.

கலைஞர் எப்படி வசனங்களில் பழைய மரபுகளைஉடைத்தாரோ, அதேபோல்தான் இளையராஜாவும் பழைய மரபை உடைத்து, புதிய மரபைச் செதுக்கிய கலைஞர். வடக்கத்திய இசைக்கும் கர்நாடக இசைக்கும் மட்டுமே முக்கியத்துவம் என்று இருந்த காலகட்டத்தில் இளையராஜாவின் அன்னக்கிளி மாபெரும் தமிழிசைப் புரட்சியை ஏற்படுத்தியது. இளையராஜாவின் இசை வண்ணத்தில் திருமண மண்டபங்களிலும் கிராமத்து வீதிகளிலும் தமிழ்ப் பாடல்களின் மணம் வீசத் தொடங்கியது.

கிராமிய இசையை, கிராமத்து மக்களின் மண்வாசனையை இளையராஜா பயன்படுத்திய விதம் தமிழர்களின் இதயங்களைக் களவாடியது. நம் மக்களின் மொழியை நமது இசையில் பேச நம்மிலிருந்து ஒருவன் வந்துவிட்டார் என கிராமங்கள் இளையராஜாவை ஒலிப்பெருக்கிகள் மூலம் கொண்டாடி மகிழ்ந்தன. அன்று பறக்கத் தொடங்கிய இளையராஜாவின் இசைக்கொடி இன்றும் கம்பீரமாகப் பறந்துகொண்டிருக்கிறது.

கலைஞர் நடத்திய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் உணர்வலைகளைக் கிளப்பியவை. ஆனால் வடக்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக அவர் நடத்திய ஒரு போராட்டம் தமிழகத்தும் கலைஞருக்கும் சேர்த்தே ஓர் அடையாளத்தைக் கொடுத்தது. அது, டால்மியாபுரம் என்கிற பெயரை கல்லக்குடி என்ற பழைய பெயரையே மீண்டும் சூட்டவேண்டும் என்பதற்காக நடத்திய போராட்டம்தான். வடவர் அடையாளம் தமிழினத்தின் அடையாளத்தை அழிக்கிறது என்று கொதித்தெழுந்த தமிழர் நெஞ்சங்களில் நம்பிக்கையை விதைத்த தீரமிகு போராட்டம் அது.

அன்னக்கிளி மூலம் கிராமிய இசையை சினிமா இசையாக மாற்றியிருந்தார் இளையராஜா. ஆம், கட்சி இல்லை, கொடி இல்லை. ஆனாலும் ஒருவித புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருந்தார் இளையராஜா. இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பை அரசியல் மேடைகளில் செய்த கலைஞர், வடவர் எதிர்ப்பு அரசியலை தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்துப் போராடி வெளிப்படுத்தினார். ஆனால் இளையராஜாவோ தன்னுடைய இசையைக் காற்றில் பரவவிட்டு மெட்டுக்களின் வழியே தமிழர்களிடம் இசைப்புரட்சி நடத்தினார். கலைஞர், இளையராஜா என்ற இருவராலும் தமிழ் மண்ணில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டன.

தமிழக அரசியல் களத்தில் கலைஞர் நுழைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அரசியல் ஜாம்பவான்கள் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். மூதறிஞர் ராஜாஜி.. தன்னுடைய தலைவரான பெரியாரின் வயதுக்கு நிகரானவர். கலைஞரை விட பலமடங்கு அனுபவசாலி. வயதில் மூத்தவர். நேரு, அம்பேத்கர், பட்டேல் உள்ளிட்ட பெருந்தலைவர்களுடன் அரசியல் செய்தவர். அப்படிப்பட்ட ராஜாஜியை எதிர்த்தே இளைஞர் கருணாநிதி அரசியல் களம் கண்டார். ராஜாஜியை மட்டுமல்ல, காமராஜர் என்ற மக்கள் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவரையும் எதிர்த்து அரசியல் செய்தவர் கருணாநிதி.

இளையராஜாவும் அப்படித்தான். அவர் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானபோது களத்தில் இருந்தவர்கள் பலரும் இசை ஜாம்பவான்கள். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ் என்று பலரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தனர்.

குறிப்பாக, எம்எஸ்வி முடிசூடா மன்னனாக உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்தான் அன்னக்கிளியில் அறிமுகமானார் இளையராஜா. அறிமுகமான முதல் படத்திலேயே, தமிழர் நெஞ்சங்களில் பசை போல் ஒட்டிக் கொண்டார். அன்று தொடங்கிய அவருடைய வெற்றிப்பயணம் தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்தது. ஆம், போட்டியே இல்லாத இடத்தில் இளையராஜா வெற்றிபெறவில்லை. ஏற்கெனவே சாதித்து தன்னை நிரூபித்த மிகப்பெரிய இசைச் சக்கரவர்த்திகள் மத்தியில் நுழைந்து, கடும் போட்டிக்க்கு மத்தியில்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டி, வெற்றிக்கோட்டைத் தொட்டார் இளையராஜா.

தேர்தல் களத்தில் வெற்றியை மட்டுமே சுவைத்தவர் கலைஞர். ஆம், 1957 ஆம் ஆண்டு குளித்தலையில் தொடங்கி 2016ல் திருவாரூர் வரை தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். அண்ணாவே தோற்றபோதும் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். ஒட்டுமொத்த திமுகவும் 1991ல் தோல்வியடைந்தபோது அவர் மட்டும் துறைமுகத்தில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். தேர்தல் அரசியலில் கலைஞர் நிகழ்த்திய வியப்பூட்டும் வரலாறு இது.

இளையராஜாவுக்கும் அப்படியான வரலாறு இருக்கிறது. அற்புதமான இசை அமைப்பாளரான அவர் இசை அமைத்த எந்தவொரு திரைப்படமும் எளிதில் வெற்றி பெறும் என்பது எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நிகழ்த்தப்பட்ட சாதனை. சில சமயங்களில், படங்கள் எவ்வளவு சுமாராக வெளிவந்திருந்தாலும், அந்தப் படங்களில் இளையராஜாவின் இசையும் பாடல்களும் மட்டும் சோடை போகாது.

இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில பாடல்கள் நம் மனத்தில் நிறைந்திருக்கும். ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் நினைவிருக்காது. அந்தப் படத்தின் நாயகன் யார் என்பதோ, இயக்குனர் யார் என்பதோ நமக்குத் தெரியாது. ஆனால் இசை மட்டும் நம் மனத்தில் இருக்கும். அதுதான் இளையராஜா.

வணிக ரீதியாக வெற்றி பெறாத படங்களில்கூட இளையராஜாவின் இசை உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு, காதலுக்கு மரியாதை பாசில் இயக்கத்தில் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம். அதற்கு இசையமைத்தவர் இளையராஜா. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணியில் கண்ணுக்குள்-நிலவு என்று ஒரு திரைப்படம் வந்தது.

நடிகர் விஜய், ஷாலினி, பாசில், இளையராஜா கூட்டணியில் வெளிவந்த அந்தப் படம் வணிகரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்தப் படத்திலும் இளையராஜாவின் இசை ஏமாற்றம் தரவில்லை. காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் பாடல்கள் எந்த அளவிற்கு வெற்றி பெற்றதோ அந்த அளவிற்கு ரசிகர்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது கண்ணுக்குள்-நிலவு திரைப்படத்தின் பாடல்கள். அதுதான் இளையராஜா.

திரைப்படம் தோற்கலாம். திரைப்பட இயக்குனர் ரசிகர்களின் இதயங்களை வெற்றி கொள்வதில் தோல்வி அடையலாம். நாயகன் தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்தத் தவறலாம். ஆனால் இளையராஜா தனது கடமையை செவ்வனே செய்து இருப்பார். அதனால்தான் அவர், இளையராஜா. ஆம், இசைக்கு ராஜா.

கலைஞர் என்றால் திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் அசைக்கமுடியாத தூண். திராவிட இயக்க முன்னோடி. இப்படித்தான் இளைஞர்களுக்கு வரலாறு சொல்லித்தருகிறது. அது உண்மையும்கூட. ஆனால் கலைஞர் எப்போதும் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று பெருமையுடன் கூறுவார். பெரியாரைச் சந்தித்திருக்காவிட்டால் நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று மேடைகளில் சொல்லியிருக்கிறார் கலைஞர். தனது இளைய மகனுக்குஅவர் ஸ்டாலின் என்று பெயர் வைத்தது அவருக்குள் இருக்கும் கம்யூனிஸ்டின் வெளிப்பாடுதான்.

கலைஞர் கடைசியாக சந்தித்த தேர்தல் 2016 சட்டமன்ற தேர்தல். அந்தத் தேர்தலில் தனது கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டது என்பதை விட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் யாருமே இடம் பெறாத ஒரு சட்டமன்றம் அமைந்து விட்டதே! என்றுதான் கலைஞர் கலங்கினார். அந்த அளவிற்கு இடதுசாரித் தத்துவத்தின் மீது ஒரு அளப்பரிய பற்றையும், பாசத்தையும் வைத்திருந்தவர் கலைஞர். அவருடைய இறுதிப் பயணத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா கண்கள் கலங்கியவாறு போய் வாருங்கள் தோழரே என்பது போல் கையசைக்கும் காட்சியை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிடமுடியாது. அந்த மூத்த பொதுவுடைமைத் தோழரின் கலங்கிய கண்கள் சொல்லும் கலைஞரின் இடதுசாரிக் காதலை!

இளையராஜாவின் பாரம்பரியமும் இடதுசாரித் தத்துவத்துடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டதுதான். ஆம், இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தவர். எந்த அளவிற்கு என்றால் தமிழகம் மட்டுமில்லாமல், கேரளம் போன்ற பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு கட்சியின் மீது அளப்பரிய பற்று கொண்டவராக இருந்தார் பாவலர் வரதராஜன்.

அண்ணன் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பிரச்சாரம் செய்ய மேடையேறும்போது உடன் சென்றவர் இளையராஜா. 1957 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த இடைத்தேர்தலின்போது கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யச் சென்றார் பாவலர் வரதராஜர். அப்போது அவருடன் இளையராஜாவும் சென்றிருந்தார்.

சிக்கிகிட்டு முழிக்குதம்மா வெட்கம் கெட்ட காளை ரெண்டு என்ற பாடல் பிரசாரத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. காரணம், காங்கிரஸ் கட்சியின் சின்னம் இரட்டைக்காளை. அந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது. அதன் காரணமாக கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது. பின்னர் பேசிய முதலமைச்சர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் பாவலர் வரதராஜன் என்று பாராட்டினார்.

அதன்பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய மாநாடுகள், பாண்டிச்சேரி தேர்தல் என்று பல அரசியல் மேடைகளில் பாவலர் வரதராஜனுடன் இணைந்து பங்கேற்றார் இளையராஜா. அந்த மேடைகளில் பாடிய பாடல்களில் ஒன்றுதான், ஒத்த ரூபா வேண்டாம், ஒனப்பூத்தட்டும் வேண்டாம், நீங்க ஊரை அழிக்கிற கூட்டம், உங்கள ஒழிச்சுக் கட்டப்போறோம் பாடல். அந்தப் பாடலில் ஆண் குரலில் பாவலர் வரதராசன் பாட, பெண் குரலில் பாடியவர் இளையராஜா. ஆனால் அதன்பிறகு கட்சியிலிருந்து நகர்ந்து, திரைத்துறைக்கு வந்துவிட்டார்.

நாற்பதாண்டு கால நண்பர்கள் என்று கலைஞரையும் எம்ஜிஆரையும் சொல்வார்கள். எம்ஜிஆரைத் திமுகவுக்கு அழைத்துவந்ததில் கலைஞரின் பங்கு மிகப்பெரியது. அதேபோல, இருவரும் இணைந்து தமிழ் சினிமாவிலும் திமுகவிலும் கொடிகட்டிப் பறந்தார்கள். அப்படி கொடி கட்டிப் பறப்பதற்கு முன்னாள் வெற்றியைத் தேடி இருவரும் ஒன்றாகத்தான் பயணம் செய்தனர்.

தமிழ் சினிமாவில் தங்களுக்கான முத்திரையையும் முகவரியையும் தேடிக்கொண்டிருந்த தருணங்களில் கலைஞரும் எம்ஜிஆரும் ஒன்றாகத் தங்கியிருக்கிறார்கள். ஒன்றாகப் சாப்பிட்டிருக்கிறார்கள். போராட்டக் களங்களில் ஒன்றாகவே பங்கேற்றிருக்கிறார்கள். பசியையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். உணவையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் எம்ஜிஆரின் வளர்ச்சிக்கு கலைஞரும், கலைஞரின் முன்னேற்றத்துக்கு எம்ஜிஆரும் உதவி செய்திருக்கிறார்கள். பசி பட்டினியைப் பகிர்ந்துகொண்டவர்கள் வெற்றியையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். கலைஞரின் வசனத்தை எம்ஜிஆர் பேசினால் அதற்குரிய மதிப்பே தனி என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

கலைஞருக்கு ஒரு எம்ஜிஆர் அமைந்தது போல் இளையராஜாவிற்கு அமைந்தவர், பாரதிராஜா. இருவரும் ஒரே மண்ணில் இருந்து வந்தவர்கள். இருவருடைய ஆரம்பகால சிந்தனைகளும் ஒரே மாதிரியானவை. கவித்துவம் நிறைந்த இருவரது மனங்களும்தான் அவர்கள் இருவரையும் இணைத்தது.

கிராமங்களில் ஒன்றாகப் பழகியவர்கள், ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் கோடம்பாக்கத்து வீதிகளில் திரைவாய்ப்பு தேடி ஒன்றாகப் பயணித்தனர். ஒரே அறையில் ஒன்றாகத் தங்கினர். ஒன்றாகச் சாப்பிட்டனர். இணைபிரியா நண்பர்களாக இருந்த அவர்கள், ஒரே காலகட்டத்தில் வெற்றிக்கோட்டைக்குள் நுழைந்தனர். இருவரும் இணைந்து படங்களில் பணியாற்றி, அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நட்சத்திரங்களாக உருவெடுத்தார்கள்.

கலைஞரும் சரி, இளையராஜாவும் சரி தங்களுடைய இயற்பெயர்களால் அறியப்பட்டவர்கள் அல்ல. கலைஞர் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. இது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு. அதே போல் தான் நமது இளையராஜாவின் இயற்பெயர் ராசையா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராசையா என்ற பெயரை வைப்பதற்கு முன்பு அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர், ஞானதேசிகன். இயற்பெயரில் அல்லாமல், புனைப்பெயரில் கொண்டாடப்படும் ஆளுமைகள் கலைஞரும் இளையராஜாவும்.

இளையராஜாவிற்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், இசைஞானி என்ற பட்டம்தான் அவருக்கு மிகப்பொருத்தமானது. அந்தக் பட்டத்தைக் கொடுத்தவர் கலைஞர். இசைஞானி பட்டத்தை இளையராஜாவுக்கு வழங்கிய கலைஞர், "இளையராஜாவிடம் ஆன்மீகமும் இசையும் கலந்து இருக்கிறது. ஆகவே தான் அவருக்கு நான் இசைஞானி” என்ற பட்டத்தை வழங்கினேன் என்றார்.

கலைஞரின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்துபோன இளையராஜா, "இசைஞானி என்பது 63 நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தரரின் தாயார் பெயர்” என்று கலைஞரிடம் கூற, “அது எனக்குத் தெரியும். அதனால்தான் அந்தப் பட்டத்தை உங்களுக்கு வழங்கினேன்” என்று சொல்லிச் சிரித்தார்.

கோடிக்கணக்கான ஆத்திகத் தொண்டர்களைக் கொண்ட நாத்திகத் தலைவர் கலைஞர் என்றால், கோடிக்கணக்கான நாத்திக ரசிகர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஆத்திகப் பற்றாளர் இளையராஜா. உண்மையில், நாத்திகர், ஆத்திகர் என்று கலைஞரையும் இளையராஜாவையும் வர்ணிப்பது என்பது மேலோட்டமான பார்வைதான். ஆனால் அவர்கள் இருவரும் தாங்கள் எடுத்துக்கொண்ட பணியில் முழு வீச்சுடன் செயல்பட்டு, தமிழர் இதயங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிரந்தர ராஜாக்கள்!

Also see:

First published:

Tags: Ilaiyaraja