பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் வருத்தமளிக்கிறதா? - இளையராஜா பதில்

இளையராஜா

புதிய ஸ்டூடியோவில் இயக்குநர் வெற்றிமாறன் படத்துக்கான இசையமைப்பு பணிகளை தொடங்கினார் இளையராஜா.

  • Share this:
40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இசையமைத்து வந்தார். ஆனால் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்க இருப்பதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை காலி செய்யச் சொன்னது. இதனை எதிர்த்து இளையராஜா நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் இறுதிவரை இளையராஜாவை ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்காமல் அவரை காலி செய்ய வைத்தது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் எம்.எம். திரையரங்க வளாகத்தை விலைக்கு வாங்கி ஸ்டூடியோ கட்டும் பணிகளை இளையராஜா தொடங்கினார். இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டு பணிகளை தொடங்கினார் இளையராஜா. புதிய ஸ்டூடியோவில் முதலாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் படத்துக்கான இசை பணிகளை தொடங்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, “சென்னையில் தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம் மற்றும் அவ்வப்போது இந்திப் படங்கள் என நான்கு மொழி படங்கள் தயாராகி வெளியே சென்றது. இங்கிருந்த ஸ்டுடியோ வேறெங்குமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது?

ஜெமினி ,நெப்டியூன் விஜயா கார்டன் ஸ்டூடியோக்கள் என காணாமல் போகின்ற வரிசையில் பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போகவேண்டுமென்று நான் அங்கிருந்து வந்துவிட்டேன். என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் இதனை வாங்கி துவங்கியுள்ளேன். இன்றைக்குள்ள நவீனத்துவமான அனைத்தும் இங்குள்ளன.பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் வருத்தமளிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த இளையராஜா, “வாழ்கையில் எவ்வளவோ கடந்துள்ளோம். அது போல தான். எல்லாம் சவால் தான். முன்னேறுபவனை தடுக்க இடையூறுகள் வரும் நாம் அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். நாம் சென்று கொண்டிருக்கும் போது மழை வருகிறது. காகம் எச்சில் செய்கிறது. அதையெல்லாம் கடப்பது போல தான் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும்” என்றார்.

தமிழ் ரசிகர்களுக்கு இனி எந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் கிடைக்கும். என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளித்த இளையராஜா,“மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தச் சமயத்தில் எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் அவர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படிப் பாடல்கள் போடுவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது? அதை யாராலும் சொல்ல முடியாது. மழை எப்போது வரும் என்று மழையிடம் கேட்க முடியுமா?” என்று கூறினார்.
Published by:Sheik Hanifah
First published: