அறைக் கதவுகளை உடைத்து பொருள்கள் இடமாற்றம்: மனவேதனையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்த இளையராஜா

அறைக் கதவுகளை உடைத்து பொருள்கள் இடமாற்றம்: மனவேதனையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்த இளையராஜா

இளையராஜா

இளையராஜாவின் அறைக்கதவுகள் உடைக்கப்பட்டதால் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை இளையராஜா ரத்து செய்தார்.

  • Share this:
    இந்திய சினிமாவின் இசையுலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, கடந்த 40 ஆண்டு காலம் இசையமைப்பதற்காக பிரசாத் ஸ்டுடியோவிலுள்ள அறையைப் பயன்படுத்திவந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனையடுத்து, பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அவரைக் காலி செய்ய நிர்பந்தித்தது. அதனைஎதிர்த்தும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டும் இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், காவல் துறையிடம் அளித்த புகாரையும் வாபஸ் பெறுவதாக உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அவரை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கலாம் என ஸ்டூடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்திருந்த இளையராஜா தரப்பு, சிவில் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ'வுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்திருந்தனர். அதனையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையவும், இசையமைத்த அறையில் தியானம் செய்யவும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

    தியானம் மேற்கொள்ளும் போது, இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பொருட்களின் பட்டியலை சரி பார்க்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும் உத்தரவிட்டார். இந்தநிலையில், இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ சென்று அவருடைய பொருள்களை எடுத்துவிட்டு தியானம் செய்வதாக இருந்தது. இந்தநிலையில், இன்று காலையில் அவரது வக்கீல் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள் குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு கூறினார். அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா தனது வருகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். தான் பொக்கிஷமாக பாதுகாத்த சில பொருட்கள் காணாமல் போயுள்ளதாக இளையராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தெரிவித்த இளையராஜா வழக்கறிஞர் தியாகராஜன், ‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜவின் தனி அறை கதவுகள் உடைக்கப்பட்டு அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ராஜா வருத்ததில் உள்ளார்’ என்று தெரிவித்தார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: