Home /News /entertainment /

VJ Chitra: சித்ரா மீது சந்தேகப்பட்டு ஹேம்நாத் கொடுமைப்படுத்தினார்: ஹேம்நாத் நண்பர் பிரத்யேக பேட்டி

VJ Chitra: சித்ரா மீது சந்தேகப்பட்டு ஹேம்நாத் கொடுமைப்படுத்தினார்: ஹேம்நாத் நண்பர் பிரத்யேக பேட்டி

Youtube Video

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்திற்கு ஜாமின் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்துள்ள அவரது நீண்ட கால நண்பர் சையது ரோஹித், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி வழங்கியிருக்கிறார்.

  சித்ராவை ஹேம்நாத் என்னென்ன விதங்களில் கொடுமைப்படுத்தினார்? காதலை, பாசத்தை விரும்பிய சித்ராவுக்கு ஹேம்நாத் சித்ரவதைகளை பரிசாக வழங்கியது ஏன் என மனம் திறந்து வேதனையைக் கொட்டியுள்ளார். சையது ரோஹித் சொன்னதென்ன?

  சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஒரு சைக்கோ, மனநல சிகிச்சை எடுத்தவர், சித்ராவை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்பவர், கன்னித்தன்மையை பரிசோதிக்க முடியுமா எனக் கேட்டவர் என்று சரமாரியாக குற்றம்சாட்டுகிறார் அவரது பத்தாண்டுக் கால நண்பரான சையது ரோஹித். பல நல்ல குணங்கள் கொண்ட சித்ராவின் நடத்தை குறித்து மோசமான தகவல்களை ஹேம்நாத் தரப்பு கசிய விடுவதன் நோக்கத்தை அம்பலப்படுத்தவே, தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகக் கூறுகிறார் சையது ரோஹித். அவர் தரப்பு என்ன?

  டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஈவிபி பிலிம் சிட்டியில் தனது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார் நடிகை சித்ரா. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என ரசிகர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியுடன் கேள்விகளை எழுப்பினர். உடற்கூறாய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரது கன்னத்திலும் மார்பிலும் காயங்கள் இருந்ததாக செய்திகள் பரவின.

  இதையடுத்து சித்ராவின் தாய் விஜயாவும் அவரது கணவர் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனும் சித்ராவின் இறப்பிற்கு எதிர்த் தரப்புதான் காரணம் என பொதுவெளியில் பரஸ்பரம் குற்றம்சாட்டினர். இதற்கிடையே சித்ரா மரணம் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் யூடியூப் சேனல்களில் வதந்திகள் செய்திகள் என்ற போர்வையில் வெளிவரத் தொடங்கின.

  இந்த நிலையில், ஹேம்நாத் தந்தை சென்னை காவல் ஆணையரகத்தில் ஒரு புகாரளித்தார். அதில், சித்ராவுக்கு மதுவருந்தும் பழக்கம் இருந்ததாகவும், 3 இளைஞர்களுடன் காதல் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனியார் டிவியில் நடிக்கும் ஒரு இளைஞர், சித்ராவை டேட்டிங் அழைத்துச் சென்று வீடியோக்கள் எடுத்து வைத்து மிரட்டியதாக யூடியூபில் செய்தி வெளியானதாகவும் அதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

  சித்ராவின் தாயாரோ, தனது மகளின் நடத்தை பற்றி தவறாகப் பேசுவோர், தங்கள் வீட்டிலும் பெண்கள் இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கதறியபடி கூறினார். இந்த நிலையில்தான், ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்  அவரது நெருங்கிய நண்பரான சையது ரோஹித்; அதற்கான காரணத்தையும் பின்னணியையும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.

  சையது ரோஹித் கூறும் உண்மைகள்

  சித்ராவிற்கு எவ்வித கடன் பிரச்னையும் இல்லாத நிலையில், கடன் பிரச்னையால் கூட அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பேட்டி அளித்திருந்தார ஹேம்நாத்தின் தந்தை. மேலும் அரசியல்வாதிகளுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறார் சையது ரோஹித். சித்ராவிற்கு கடன் பிரச்னை எதுவும் கிடையாது என்றும், சித்ரா எங்கு சென்றாலும் கூடவே செல்லும் பழக்கம் கொண்டவர் ஹேம்நாத் என்றும் கூறியுள்ளார்.

  அடிப்படையில் ஹேம்நாத், பல பெண்களுடன் பழகி அவர்களை ஏமாற்றியவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறுகிறார் சையது ரோஹித்.

  மேலும் படிக்க...மது போதையில் விபத்து.. பெண் பொறியாளர் போலீசாரிடம் ரகளை... வைரலாகும் வீடியோ காட்சிகள்

  சித்ராவைக் காதலிக்கத் தொடங்கியதில் இருந்து அவரது நடத்தையை சந்தேகப்பட்ட ஹேம்நாத், அதன் அடிப்படையிலேயே பலமுறை சித்ராவை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.

  தனியார் டிவியில் சித்ரா நடித்து வந்த நெடுந்தொடர் தொடர்பாக ஹேம்நாத் சந்தேகப்பட்டதாகவும், அது குறித்த சண்டைகளில் சித்ராவை கொடூரமாக அடித்ததாகவும் அதனாலேயே சித்ரா மனமுடைந்து தற்கொலை முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் சையது ரோஹித். நடத்தையில் சந்தேகம் என்றால் ஹேம்நாத் எந்த அளவுக்கு சந்தேகப்படுவார் என அதிர்ச்சிகலந்த தகவலையும் சொன்னார் சையது ரோஹித்.அது சித்ராவின் கன்னிதன்மையை கண்டறிய வேண்டும் என்று கூறியதுதான்.

  மேலும் ஹேம்நாத்தின் தொடர் சித்ரவதைகளாலேயே சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் சையது ரோஹித் தனக்கு ஹேம்நாத் தரப்பால் ஆபத்து இருப்பதாகவும் அதை எதிர்கொள்ளத் தான் தயார் என்றும் கூறியுள்ளார்.

  சித்ரா தற்கொலை வழக்கில் சையது ரோஹித் இதுவரை விசாரிக்கப்படாத நிலையில், வழக்கு எந்த திசையில் செல்லும் என்பது போகப் போகத் தான் தெரியும்.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Hemnath, Vj chithra

  அடுத்த செய்தி