காற்றில் கரையாத கவிஞன் நா.முத்துக்குமாருக்கு 43வது பிறந்த நாள் வாழ்த்துகள்!

news18
Updated: July 12, 2018, 10:34 AM IST
காற்றில் கரையாத கவிஞன் நா.முத்துக்குமாருக்கு 43வது பிறந்த நாள் வாழ்த்துகள்!
கவிஞர் நா.முத்துக்குமார்
news18
Updated: July 12, 2018, 10:34 AM IST
கண்ணதாசன், வாலி, வைரமுத்து என கவி ஆளுமைகள் நிறைந்த தமிழ் திரை உலகின் அடுத்த தலைமுறை அடையாளமாக வலம் வந்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். ரசிகர்களின் மிகச்சிறப்பான வாழ்த்துகளுக்கிடையே தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இன்று நம்மிடையே அவர் இல்லை. ஆனால் அவரது பாடல் வரிகளை நம் உதடுகள் முணுமுணுத்து கொண்டுதான் இருக்கின்றன.   

அழகாய் இருப்பதை மனம் தேடுவது இயல்பு. ஆனால் மனம் லயிக்கும் எதிலும் அழகு இருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?  இப்படித்தான் சமகால திரைக்கவிஞர்களில் தனக்கான இடத்தை வித்தியாசப்படுத்தி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நா.முத்துக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார் இயற்பியல் மாணவர். ஆனால் தமிழ் மீதுள்ள காதலால் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார். யாப்பிலக்கணத்தை முறையாக பயின்றவர் என்றாலும் அவரது கவிதைகள் பாமரனுக்கும் சரியாய் பாடம் நடத்தும் அளவிற்கு  எளிமை கொண்டவை. அது தான் முத்துக்குமாரின் சிறப்பும் கூட...

நான்கு வயதிலேயே தாயை இழந்த முத்துக்குமாருக்கு அவரது தந்தையே தாயுமானார். அதனால் தான் தாய்ப்பாசத்தை மட்டும் சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் தந்தை அன்பின் முன்னால் தெய்வங்களே தோற்கும் என்று துணிந்து சொன்னார்.

காதல்பிரிவு... வலியின் உச்சம்... அந்த உணர்வை தன் கவிதை வரிகள் மூலம் பிரிவைக் கண்டிராத இதயங்களுக்கும் கடத்திக்கொடுத்தவர் முத்துக்குமார்.காதல் பிரிவு பாடல்கள்தான்  முத்துக்குமாரின் தனித்துவம் எனலாம்!

இயக்குநராகும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தவர், தன் கவிதைகளால் ரசிகர்களை மயக்குபவராக மாறிப்போனார். சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

தேசிய விருதுகள், மாநில விருதுகள் என எத்தனையோ பாராட்டுகள் கிடைத்தாலும் அகல வாய் திறந்துகூட சிரிக்காமல் அமைதிப் புன்னகை தவழும் அந்த முகம்தான் நா.முத்துக்குமாரின் அடையாளம். இறந்த பிறகும் வாழும் வரம் சிலருக்கு மட்டும்தான் கிடைத்து விடுகிறது. அப்படி நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் அவரின் இருப்பை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். காற்றில் கரையாத கவிஞன் நா.முத்துக்குமாருக்கு 43 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள்!
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...