இலக்கியத்தை சினிமாவாக எடுப்பதில் முன்னோடி: இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று..

Happy Birthday director mahendran | நவீன தமிழ் சினிமாவின் தலைமைச் சிற்பி என்று எல்லோராலும் கொண்டாடப்படும் இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று. தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மகேந்திரனின் திரை பயணம் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை தற்போது காணலாம்.

இலக்கியத்தை சினிமாவாக எடுப்பதில் முன்னோடி: இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று..
இயக்குனர் மகேந்திரன்
  • Share this:
1939-ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்த மகேந்திரன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். சிறு வயது முதலே நாடகங்களை எழுதுவதிலும் இயக்குவதிலும் ஆர்வத்தோடு செயல்பட்ட மகேந்திரனின் சினிமா ஆர்வத்தை கண்டு கொண்ட எம்.ஜி.ஆர், இவரை சினிமா உலகத்துக்கு கொண்டுவர முடிவு செய்தார்.

1966-ஆம் ஆண்டு நாம் மூவர் படத்தின் மூலம் கதாசிரியராக திரையுலகில் அடியெடுத்து வைத்த மகேந்திரன், தங்கப்பதக்கம், ஆடுபுலி ஆட்டம் என பல வெற்றிப் படங்களுக்கு கதை வசனம் எழுதி எழுத்தாளராக தன் முத்திரையைப் ஆழமாக பதித்தார்.

1977-ஆம் ஆண்டு உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்னும் புதினத்தை, சினிமாவாக இயக்கினார் மகேந்திரன். அதுவரை தமிழ் சினிமா கண்டிராத வண்ணம் நேர்த்தியான காட்சி அமைப்பு, அழகியல் சார்ந்த காட்சி மொழி என இவர் இயக்கிய முதல் படமே தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
முள்ளும் மலரும் படத்தின் மூலம் புதிய அலை சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக அடையாளம் காணப்பட்டார் மகேந்திரன். அதுவரை வசனங்களின் சினிமாவாக இருந்த தமிழ் சினிமாவை, காட்சிப் படிமங்களாலும், அசாத்திய மவுன மொழியாலும் பார்வையாளர்களை வசீகரித்தார்.

புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்னும் சிறுகதையை உதிரிப் பூக்கள் என்னும் சினிமாவாக இயக்கினார் மகேந்திரன். திரைக்கதை வடிவம் என்னும் அளவில் தமிழ் சினிமாவில் பெரும்பாய்ச்சலை உருவாக்கிய படம் உதிரிப் பூக்கள்.

ஜானி படத்தில் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்த சுஹாசினியையே நாயகியாக்கி நெஞ்சத்தை கிள்ளாதே படத்தை இயக்கினார் மகேந்திரன். 1980-ம் ஆண்டு வெளியான இப்படம் மூன்று தேசிய விருதுகளை வாரி குவித்தது மட்டுமின்றி சென்னையில் ஒரு வருட காலம் ஓடி சாதனை புரிந்தது.கடைசியாக 2006-ம் ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் சாசனம் படத்தை இயக்கிய மகேந்திரன், அதன்பின் விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நிமிர், மிஸ்டர் சந்திரமௌலி, சீதக்காதி, பேட்ட என அடுத்தடுத்து பல படங்களில் நடித்த மகேந்திரன் தான் ஈடுபட்ட எல்லாத் துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்து தன்னிகரில்லா கலைஞனாக மிளிர்ந்தார்.

இலக்கியத்தை சினிமாவாக எடுப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த மகேந்திரன், குறைவான படங்களே இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஏற்படுத்தி இருக்கும் தடம் ஆழமானது. ஒப்பில்லா கலைஞன் இயக்குநர் மகேந்திரன்.

 
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading