Home /News /entertainment /

நதியா கம்மல் முதல் பீஸ்ட் சட்டை வரை... 80-களில் ஆரம்பித்து 2K கிட்ஸ் வரை மாறாத திரைமோகம்

நதியா கம்மல் முதல் பீஸ்ட் சட்டை வரை... 80-களில் ஆரம்பித்து 2K கிட்ஸ் வரை மாறாத திரைமோகம்

நதியா - விஜய்

நதியா - விஜய்

Beast Vijay Shirt | ஆன்லைன் மூலமாக ரத்தக்கறை பீஸ்ட் சட்டையை பரபரப்பாக ஆர்டர் கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

உலகின் எந்த நாட்டிலும் சினிமாவும், மக்களின் வாழ்க்கையும் இந்த அளவுக்கு பிண்ணி பிணைந்து இருக்குமா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல இருப்பது தென்னிந்தியாவில் தான். குறிப்பாக தமிழ்சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் பெரும்பகுதி மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் படைப்புகள் தான். தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய கதாநாயகர்கள், கதை நாயகர்கள் மாநிலத்தையே ஆளும் முதலமைச்சர்களாக வரும் அளவுக்கு சினிமாவின் மீதான தீராக் காதலை கொண்டிருந்தார்கள் தமிழ் ரசிகர்கள்.

அதன் நீட்சி ஹீரோ ஒர்ஷிப் எனப்படும் தனிநபர் துதிபாடும் செயல்கள் தமிழ் சினிமாவில் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டிப்பிடிப்பது தான் இலக்கு என ஒவ்வொரு நடிகரும் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் கட் அவுட்டுக்கு பாலூற்றி மாலை போட்டுக் கொண்டிருந்தார்கள் அவரது ரசிகர்கள்.

இதில் உச்சம் என்னவென்றால் நடிகர், நடிகையர்கள் திரையில் தோன்றுவதை போலவே ஆடைகள், சிகை அலங்காரம், ஆபரணங்கள் உடல் மொழி என அனைத்தையும் சிரத்தை எடுத்து மாற்றிக் கொள்வது தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு பேஷனாகவே மாறிப்போனது. 80 களின் தொடக்கத்தில் அதிகரிக்கத் தொடங்கிய இந்த போக்கு 2K வரைக்கும் மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்தது.

ஒரு காலத்தில் நதியா கம்மல், நதியா வளையல், நதியா கொண்டை தொடங்கி சூர்யவம்சம், ஆட்டோகிராப் சேலை என நடிகர், நடிகைகளை போலவே வாங்கி அணிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்தது. ஜென்டில்மேன் திரைப்படத்தில் பிரபுதேவா அணிந்து வரும் பேண்ட், காக்க காக்க படத்தில் சூர்யா அணிந்து வரும் கை காப்பு, போக்கிரி பட விஜய் சட்டை, சச்சின் பட பேக், ரெட் பட அஜித் ஹேர் ஸ்டைல், மங்காத்தா சால்ட் அண்ட் பெப்பர் லுக், அஞ்சான் ராஜீ பாய் ஹேர் ஸ்டைல், 96 திரிஷா சல்வார், மெர்சல் டாலர், மாநாடு செயின், பொல்லாதவன் படத்திற்கு பிந்தைய பல்சர் பைக் மோகம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Also Read : பிரதமர் மோடியை பாராட்டுவதற்கு முன் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு விவகாரத்தில் 2 முறை சம்மன் - தகவல்

அந்த வரிசையில் தற்போதைய புதிய வரவான புஷ்பா சேலை வரைக்கும் சினிமாவின் தாக்கத்தை தங்களது வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் தமிழக மக்கள். சமீப ஆண்டுகளாக மீண்டும் சமுகவலைதளங்களின் ஆதிக்கத்தால் சினிமா மீதான மோகத்தின் வெளிப்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நடிகர்கள் என்ன செய்தாலும் அதனை அப்படியே காப்பி அடித்து செய்வதில் ரசிகர்களுக்கு நிகர் யாருமில்லை.

பீஸ்ட் படத்தில் இருந்து முதலில் வெளிவந்த அரபிக் குத்து பாடல் சக்கை போடு போட்ட நிலையில் அடுத்து வந்த ஜாலிலோ ஜிம்கானாவும் துள்ளல் வகை பாடல் தான். அந்த பாடலில் விஜய் அணிந்து நடனமாடும் மஞ்சள் நிற பூப்போட்ட சட்டையை ரசிகர்கள் வாங்கி அணிந்து கொண்டு படம் பார்க்க வந்தனர். படம் வெளியான பின்னர் தீவிரவாதிகளை விஜய் கத்தியால் தாக்கும் காட்சியில் ரத்தம் தெறித்திருக்கும் வெள்ளை சட்டையை அணிந்திருப்பார் விஜய். இதிலென்ன இருக்கிறது என்கிறீர்களா.. ரசிகரின் பேரார்வம் அந்த ரத்தக்கரை சட்டையை வாங்கி தாங்களும் போட்டுக் கொள்வது என்றால் என்ன சொல்ல முடியும். இப்போது சந்தையில் சக்கைபோடு போடுவது ரத்தக்கரை படிந்த பீஸ்ட் வெள்ளை சட்டை தான்.

ஆன்லைன் மூலமாக ரத்தக்கறை பீஸ்ட் சட்டையை பரபரப்பாக ஆர்டர் கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். சூடான வடை, பஜ்ஜி கணக்காக சட்டைகள் விற்று தீர்ந்து விடுவதாகவும், முன் கூட்டியே ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்தியல் ரீதியாக சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் கலைப் படைப்புகள் பெருமளவில் பேசப்படாமல் கால ஓட்டத்தில் கரைந்து போய்விடுகின்றன. ஆனால், கமர்சியல் சினிமாவின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் அர்த்தமற்ற ஆடம்பரத்தையும், விளம்பரத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தளபதி தலைவனாவது ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது என்று பேசும் ஸ்டார் ஹீரோக்கள், சரியான திசைகளில் ரசிகர்களை பயணிக்க வைப்பதே எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்பதை உணர வேண்டும்.
Published by:Vijay R
First published:

Tags: Actor Vijay, Beast, Trends

அடுத்த செய்தி