இனி டைம் போறதே தெரியாது! உங்களை குஷிப்படுத்த வரும் புத்தம் புதிய நிகழ்ச்சிகள் - பிக்பாஸ் to மாஸ்டர் செஃப்!

புதிய நிகழ்ச்சிகள்

சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் இப்படி முன்னணி தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டு கொண்டு பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப செய்ய உள்ளது.அந்த நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ..

  • Share this:
கொரோனா காலத்தில் ஸ்லோவான டி.ஆர்.பி ரேட்டிங்கை, கிடுகிடுவென உயர்த்த முன்னணி தமிழ் சேனல்கள் அனைத்தும் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகள் புத்தம் புது நிகழ்ச்சிகளை வெவ்வேறு கான்செப்டில் கொடுக்க உள்ளன. விரைவில் அறிமுகமாக உள்ள நிகழ்ச்சிகள் முதல் இந்தவாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் வரை என ஒரு லிஸ்டை பார்க்கலாம்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல், விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருக்கும் இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. 4 சீசன்களைவிட இந்த சீசன் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும், மக்களிடம் வரவேற்பு பெற்ற முகங்கள் பங்குபெறலாம் என இப்போதே பேச்சு அடிபடுகிறது.

மாஸ்டெர்செப் தமிழ் :

விஜய் டிவிக்கு போட்டியாக நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் சன்டிவி எப்போதும் கில்லி. இரண்டு தொலைக்காட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்பதற்காக புது கான்செப்டில் நிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். அந்தவகையில், பல்வேறு மொழிகளில் உலகளவில் மெஹா ஹிட்டான ’மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே புரோமோ வெளியாகியிருக்கும் நிலையில், போட்டியாளர்கள் யார்? எப்போது ஒளிபரப்பாகும்? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


அபி டெய்லர் :

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 19 ஆம் தேதி முதல் ‘அபி டெய்லர்’ ஒளிபரப்பாக உள்ளது. ஹீரோவாக மதன் பாண்டியனும், ஹீரோயினாக ரேஷ்மா முரளிதரனும் நடிக்கிறனர். கார்ப்ரேட் கம்பெனியில் பணியாற்றும் இருவருக்கும் இடையே உருவாகும் காதல் கதை என ஏற்கனவே வெளியாகியிருக்கும் புரோமோ மூலம் யூகிக்க முடிகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பூவே பூச்சூடவா தொடரில் இணைந்து நடித்திருந்தனர்.


நம்ம வீட்டு பொண்ணு :

விஜய் டிவியில் ஹிட் சீரியல்களை கொடுப்பதில் முதல் இடத்தில் இருப்பவர் இயக்குநர் பிரவீன் பென்னட். சரவணன் மீனாட்சி முதல் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா என தொடர் ஹிட்களை கொடுத்து வரும் அவர், அடுத்து இயக்க உள்ள சீரியல் ‘நம்ம வீட்டு பொண்ணு’. வி.ஜே. பப்பு, ராஜா ராணி ஷாபனா, நடிகர் வெங்கட் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். விரைவில் ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது.

கன்னித்தீவு :

கலர்ஸ் தமிழ் சேனலில் ரோபோ சங்கர், ஷகிலா நடுவர்களா பங்குபெறும் ‘கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0’ எனும் கேம் ஷோ, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. காமெடிக்கும், பொழுதுபோக்குக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்.


டான்ஸ் Vs டான்ஸ் சீசன்2 :

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சி விரைவில் தொடங்குகிறது. பிரபல நடன இயக்குநரான பிருந்தா மற்றும் நடிகர் நகுல் ஆகியோர் நடுவர்களாக இருந்த இந்த ஷோவின் முதல் சீசனில் அங்கிதா, பூஜா வெற்றி பெற்றனர். கீர்த்தி மற்றும் விஜய் தொகுத்து வழங்கினர். விரைவில் இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாக உள்ளது.

சர்வைவர் :

’ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய ஷோ சர்வைவர் (Survivor). 15 முதல் 20 போட்டியாளர்கள் மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் தங்க வேண்டும். தங்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் போட்டியாளர்களே உருவாக்கி கொள்ள வேண்டும். சவால்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியில், எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் ஒருவரே டைட்டில் வின்னர். இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங், ஆன்கர் தேர்வு விரைவில் தொடங்க உள்ளது.

சிங்கிள் பொண்ணுங்க :

விஜய் டிவியில் ஜூலை 11 ஆம் தேதி முதல் சிங்கிள் பொண்ணுங்க நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. முரட்டு சிங்கிள் நிகழ்ச்சி ஏற்கனவே வெற்றி பெற்ற நிலையில், அதே கான்செப்டில் பெண்களை வைத்து சிங்கிள் பொண்ணுங்க நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. மா.கா.பா ஆனந்த் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். போட்டியாளர்களாக 8 பேர் கலந்து கொண்டிருக்கும் இந்த ஷோவில் பல்வேறு ரவுண்டுகளின் முடிவில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தமிழும் சரஸ்வதியும் :

பிரபல தொகுப்பாளர் தீபக் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக நக்ஷத்திராவும் நடிக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடர் ஜூலை 12 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. சரஸ்வதிக்கு சுத்தமாக படிப்பு வராது. ஹீரோ தமிழ் தனக்கு படித்த பெண் வேண்டும் என விரும்புகிறார். இவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் தான் கதை. ரேகா கிருஷ்ணப்பா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: