அஜித்துக்கு இன்று பிறந்தநாள். நடிகர்களின் பிறந்தநாள் கணக்கை ஒன்றிரண்டு வருடம் குறைத்துச் சொன்னால் கண்டுகொள்ள மாட்டார்கள். அஜித்திடம், இது உங்களின் 49 வது பிறந்தநாள்தானே என்றால், இல்லை 50 என திருத்துவார். அதுதான் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும் பிரமாண்டமான ரசிகக்கூட்டத்தை அவர் கொண்டிருப்பது அதிசயம். அவரது ரசிகர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் தெரியாது. ஆனால், படம் வெளியாகும் போது குவிந்துவிடுவார்கள். அதுதான் இன்றுவரை அஜித்தை வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கிறது. அஜித்திடம் அனைவரும் விரும்பக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அதில் 5 ஐ பார்ப்போம்.
1.சுயமரியாதை
சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வருவது சிரமம். அதில் தாக்குப் பிடிப்பது அதைவிட சிரமம். அஜித் தாக்குப் பிடித்தார். அதற்கு அவர் கொடுத்த விலை அதிகம். பட்ட அவமானங்கள் அதிகம். அவமானங்கள் அவரது சுயமரியாதையை எப்போதும் சீண்டிக்கொண்டே இருந்தன. மரியாதை கிடைக்காத இடத்தில் அவர் தங்குவதில்லை.
அதிமுக வெற்றி பெறும் போது, ஜெயலலிதாவை பாராட்டி கூட்டம் நடத்துவார்கள். திமுக வெற்றி பெறும் போது கலைஞருக்கு பாராட்டுவிழா. கட்சியில் இருப்பவர்களை விட்டுவிடுவார்கள். அஜித் போன்ற கட்சி சாராதவர்களுக்கே தலைவலி. கூட்டத்துக்கு வந்து பாட்டோ, டான்ஸோ செய்யாவிட்டால் ரெட் கார்ட் என பயமுறுத்தல். அதில் கசப்புற்று, கலைஞருக்கு பாராட்டுவிழா நடந்த கூட்டத்தில் எழுந்து, "ரொம்ப கம்பெல் பண்றாங்கய்யா, மிரட்டுறாங்கய்யா" என்று தைரியமாக கூறினார். ரஜினி அதனை கைத்தட்டி வரவேற்றார். அது அஜித்தின் சுயமரியாதையின் வெளிப்பாடு. அனைவருக்கும் இந்த சுயமரியாதை இருக்கும்;. ஆனால், அஜித் தன்னளவுக்கு பிறரது சுயமரியாதையையும் மதிப்பவர். அங்குதான் அவர் வித்தியாசப்படுகிறார். ஆஞ்சனேயா படப்பிடிப்பின்போது, ஒரு தாய் தனது குழந்தையுடன் வந்து அஜித்திடம் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்கிறார். "குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமை அதன் தாய், தகப்பனுக்குதான் உண்டு. உங்களுக்குப் பிடித்த கடவுள் பெயரோ, இல்லை உங்க அப்பா, தாத்தா பெயரோ வைங்க. பெயர் வைக்கிற உங்க உரிமையை மத்தவங்ககிட்ட குடுக்காதீங்க" என்று அந்த குழந்தைக்கு கடைசிவரை பெயர் சூட்டவில்லை. எவனுக்கும் அவன்தான் ஹீரோ, அவன்தான் தலைவன். அதனால்தான் அவர் கட்அவுட் வைத்து பால் ஊற்றும் ரசிகர் மன்றம் தேவையில்லை என்று கலைத்தார். அது ரசிகர்களின் சுயமரியாதையை மதித்ததால் மேற்கொண்ட நடவடிக்கை.
2.வள்ளல் குணம்
வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்பது ஈகையின் முதல் தகுதி. அதை அறிந்தவர் அஜித். அவர் மேடை போட்டு உதவிகள் செய்வதில்லை. அவர் தனிப்பெரும் ஹீரோவாக உருவெடுப்பதற்கு முன்பு, தன்னுடன் பணியாற்றுகிறவர்கள் - லைட்மேன் முதல் சினிமா நிருபர்கள்வரை - வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பார். சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருப்பார். அடுத்தடுத்த தினங்களில் அவர்கள் வீட்டில் இல்லாத - ப்ரிட்ஜ் போன்ற விலையுயர்ந்த பொருள்கள் வந்திறங்கும். வீட்டிற்கு வந்த நேரத்தில் அவர்களின் நிலையை கவனித்திருப்பார். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையெனில் முதல் போன் அஜித்துக்கு செல்லும். மறுக்காமல் மருத்துவ உதவிக்கான பணம் அவரிடமிருந்து கிடைக்கும். வீட்டில், சினிமாவில் தன்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் ஏதாவது வகையில் உதவிகள் செய்திருப்பார். இந்தியன், குஷி, ரன், தூள், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, சிவகாசி என வெற்றிப் படங்களாக தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். அவர் நொடித்து திவாலாகி மாதச் சம்பளத்துக்கு வேலைக்கு போக வேண்டிய நிலை வந்த போது, அவரது தயாரிப்பில் நடிக்க எந்த ஹீரோவும் உதவ முன்வரவில்லை. அஜித் அவராக அழைத்து கொடுத்த வாய்ப்பு ஆரம்பம். அடுத்து உடனே என்னை அறிந்தால், பிறகு வேதாளம். மூன்று படங்கள். ரத்னத்துக்கு அஜித் இப்போது மற்றுமொரு கடவுள்.
3. பல்சுவை நடிப்பு
தமிழில் நீங்கள் ஹீரோவாக ஃபார்ம் ஆகிவிட்டால் ஒரேவித நடிப்புதான். வில்லனை அழிக்கணும், நாட்டையும், மக்களையும் காக்கணும். இதிலிருந்து இம்மி பிசக முடியாது. ரவுடியாகவே இருந்தாலும் நல்லதுதான் செய்தாக வேண்டும். அஜித்தின் வீரம், வேதாளம், என்னை அறிந்தால் எல்லாம் இந்த ரகம். ஆனால், அதையெல்லாம் உதறி மங்காத்தாவில் நடிக்கிற கெத்து அவருக்கு இருந்தது. பொதுவாக ஹீரோ வில்லனாக நடித்தால் அந்தப் படத்தில் ஹீரோவும் அவராகவே இருப்பார். எந்திரன் ரஜினி மாதிரி. ஆனால், மங்காத்தாவில் காதலியான ஹீரோயினையே ஓடுகிற காரில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுகிற கதாபாத்திரம். இன்றைய தேதியில் இந்த வேடத்தில் எந்த ஹீரோ நடிப்பார்? இன்னொன்று வரலாறு படத்தில் வரும் பெண்ணின் உடல்மொழி கொண்ட கதாபாத்திரம். மங்காத்தா போன்ற படங்களை அவர் மீண்டும் செய்ய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம்.
4.தன்னம்பிக்கை
அகராதியில் தன்னம்பிக்கைக்கு அஜித் என்று பொருள் போடலாம். சினிமாவில் முன்னேறி வருகிற நேரம் ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பியில் அடிபடுகிறது. அரை டஜனுக்கும் மேல் அறுவை சிகிச்சைகள். பொதுவாக இதுபோன்ற விபத்தை எதிர்கொண்டால் வாழ்நாள் முழுக்க வீல் சேரில் கழிக்க வேண்டி வரும். ஆனால், அஜித், நான் திரும்பி வருவேன் என்றார். சொன்னபடி வந்தார். வலிக்கு எடுத்துக் கொண்ட மருந்துகளால் உடல் பெருத்தது. ஜி படத்தில், அவரது உடம்பு கிண்டலிடிக்கப்பட்டது. நிருபர்கள் நேரடியாகவே கேட்டார்கள். அதனை ஒரு சவாலாக ஏற்று உடலை குறைத்தார். திருப்பதி, பரமசிவம் படங்களில் அந்த இளைத்த அஜித்தை நீங்கள் பார்க்கலாம். அனுபவங்கள் அதிகமாக தன்னம்பிக்கை குறித்த எண்ணமும் மாறியது. அடுத்தவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப நடப்பதல்ல, தனது விருப்பத்துக்கேற்ப வாழ்வதே தன்னம்பிக்கை என்பதை புரிந்து கொண்டார். ரசிகர் மன்றங்களை கலைத்தது, எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என முடிவெடுத்தது என அனைத்துக்குப் பின்னாலும் இழையோடுவது இந்த தன்னம்பிக்கையே.
5.இமேஜ்லெஸ் ஹீரோ
எம்ஜிஆர் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்த பிறகும் இமேஜை தக்க வைக்க வேண்டியிருந்தது. நல்லவர், வள்ளல் என்ற குணத்தை மட்டுமில்லை, தனது தோற்றத்திலும். மேக்கப் போடாமல் எம்ஜிஆர் வெளியே வந்ததில்லை. வாழ்வின் இறுதிவரை மேக்கப் அவருக்கு தேவைப்பட்டது. ரஜினி அதனை உடைத்தார். சினிமாவில் முப்பது வயது இளைஞனாக விக் வைத்து நடிப்பார். ஆனால், பொது இடங்களில் நரைத்த முடியும், வழுக்கை தலையுமாக வருவார். எம்ஜிஆரைப் போல் பொதுவெளியில் இமேஜை காப்பாற்றும் தலைவலி அவருக்கு இருக்கவில்லை. அஜித், அடுத்தக்கட்டத்துக்கு சென்றார். திரையிலும், வெளியிலும் ஒரே கெட்டப். முழுக்க நரைத்த தலையுடன் ஹீரோயினுடன் டூயட் பாடுகிறார். அதே கெட்டப்புடன் வெளியே வருகிறார். தற்போது நடித்துவரும் அண்ணாத்தே வரை ரஜினிக்கு விக்கும் மேக்கப்பும் தேவைப்பட, அஜித்தோ திரையிலும் நிஜத்திலும் எந்த மேக்கப்பும் இல்லாமல் இருக்கிறார். இதேபோன்ற ஒரு ஹீரோவை மொத்த இந்தியாவிலும் பார்ப்பது அரிது.
அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajith, Happy BirthDay, May 1