• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நட்சத்திரங்களின் நிவாரண நிதியும், பொதுமக்களின் மனநிலையும்!

நட்சத்திரங்களின் நிவாரண நிதியும், பொதுமக்களின் மனநிலையும்!

நிவாரண நிதி வழங்கும் சிவகுமார், சூர்யா, கார்த்தி

நிவாரண நிதி வழங்கும் சிவகுமார், சூர்யா, கார்த்தி

நடிகர்கள் திரையில் செய்யும் சாகசங்களை, திரைக்கு வெளியேயும் அவர்களால் நிகழ்த்த முடியும் என்ற தனிமனித வழிபாட்டு மனநிலையிலிருந்து உருவாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேரிடர் காலங்களில் திரையுலகினர் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். அது முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக இருக்கலாம். ரசிகர் மன்றங்கள் வழியாக செய்யும் உதவியாக இருக்கலாம். பொருள்களாக, மருந்துகளாக, படிப்புச் செலவுக்கான கட்டணமாக எந்த வடிவத்திலும் இருக்கலாம். கொரோனா முதல் அலையின் போது கணிசமான திரையுலகினர் நிவாரண நிதி அளித்தனர். இரண்டாம் அலையிலும் அது தொடர்கிறது. 

நடிகர் சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இணைந்து ஒரு கோடி நிவாரண நிதி அளித்தனர். ரஜினிகாந்த் 50 லட்சங்கள் அளித்துள்ளார். நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், இயக்குனர் முருகதாஸ் தலா 25 லட்சங்கள் வழங்கினர். நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன் தலா பத்து லட்சம். சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் தம்பதியினர் ஒரு கோடி அளித்தனர். பாடலாசிரியர் வைரமுத்து 5 லட்சங்கள் தந்துள்ளார். உதவிகள் தொடர்கின்றன

கொரோனா பேரிடர் காலத்தில் மட்டுமில்லை. பெருவெள்ளத்தில் சென்னை மூழ்கிய போதும், கஜா, வர்தா புயல்களின் போதும் திரையுலகினரின் உதவிக்கரம் நீண்டது. திரையுலகினர் மட்டுமா உதவினர் என்றால் இல்லை. தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமானிய எளிய மனிதர்கள் என நல்லுள்ளம் கொண்ட அனைவரும் உதவினர். ஆனால், திரையுலகினர் உதவி செய்கையில் பொதுமக்களின் மனநிலையும், பிறர் உதவி செய்கையில் கொள்ளும் மனநிலையும் வேறு வேறானது.

நிவாரண நிதி வழங்கும் சிவகுமார், சூர்யா, கார்த்தி


சல்மான் கான் 25,000 தொழிலாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் வழங்குகிறார் என்ற செய்தியின் கீழே, 'ஏண்டா, கோடிக்கணக்குல வாங்குறியே ஆளுக்கு பத்தாயிரம் தர முடியாதா?' என்று சிலர் விமர்சித்தனர். எந்த சாமானியனும், தொழிலதிபர்களும் இதேபோல் விமர்சிக்கப்படுவதில்லை. திரையுலகினரை நோக்கி வைக்கப்படும் இன்னொரு வசை, 'நீ தமிழ்நாட்லதானே சம்பாதிக்கிற. இங்க சம்பாதிச்சிட்டு, இங்க உள்ளவங்களுக்கு செலவு செய்ய உனக்கு என்ன கஷ்டம்?'



ரிக்ஷா ஓட்டுகிறவர் முதல் ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகள் சம்பாதிப்பவர்வரை அனைவரும் இங்குதான் சம்பாதிக்கிறார்கள். இங்குள்ள மக்களிடமிருந்தே சம்பாதிக்கிறார்கள். ஆனால், திரையுலகினரை மட்டும் தனியாக பிரித்து அவர்களை விமர்சிப்பது ஏன்? இதற்கு பின்னாலுள்ள மனநிலை என்ன? தமிழகத்தின் பெரும் பணக்காரர்கள் திரையுலகினரா என்றால், இல்லை. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் இருபது பேரை கழித்துவிட்டால் மற்றவர்கள், இரண்டு மாதம் படப்பிடிப்பு முடங்கினால் கடன் வாங்கும் நிலையில் இருப்பவர்கள். முன்னணி நடிகர்களைவிட அதிகம் சம்பாதிப்பவர்கள் தமிழகத்தில் மட்டும் ஆயிரம் பேராவது இருப்பார்கள். எனில், 'தமிழ்நாட்லதானே சம்பாதிக்கிற, அள்ளிக்குடு' என்ற வசை இவர்களை நோக்கி மட்டும் ஏன் பொழியப்படுகிறது?

soundarya rajinikanth donates corona relief amount to tamil nadu cm mk stalin
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செளந்தர்யா விசாகன்


இதன் இன்னொரு பக்கம் வேடிக்கையானது. அப்படியே மாறுபட்டது. நான்கு வெற்றிப் படங்கள் தந்தாலே, அந்த நடிகர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேட்க ஆரம்பிக்கிறோம். பல நூறு மாணவர்களை உருவாக்கும் ஆசிரியரைப் பார்த்தோ, பல நூறு உயிர்களை காப்பாற்றும் மருத்துவரைப் பார்த்தோ நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை. ஆசிரியரை ஆசிரியராகவும், மருத்துவர்களை மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களை வழக்கறிஞர்களாகவும் பார்க்கும் நாம், நடிகர்களை மட்டும் அரசியல்வாதியாகப் பார்க்கிறோம். 'நாங்க அப்படியில்லை, மீடியாதான் அதுபோன்ற பிம்பத்தை உருவாக்குகிறது' என்று தப்பிக்க முடியாது. பல வருடங்களாக களத்தில் நிற்கும் சில அரசியல்கட்சிகளால்கூட 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது சிரமம். ஆனால், ஒரு முன்னணி நடிகர் கட்சி தொடங்கிய அன்றே அனைத்துத் தொகுதிகளிலும் ஆள்களை நிறுத்த முடியும். இந்த அபிரிதமான ஆதரவு எங்கிருந்து வருகிறது



நடிகர்கள் திரையில் செய்யும் சாகசங்களை, திரைக்கு வெளியேயும் அவர்களால் நிகழ்த்த முடியும் என்ற தனிமனித வழிபாட்டு மனநிலையிலிருந்து உருவாகிறது. ஆசிரியரை ஆசிரியராகவும், மருத்துவரை மருத்துவராகவும் பார்க்கும் நாம், நடிகர்களை நடிகர்களாக அல்லாமல் சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும் மனநிலையிலிருந்து உருவாகிறது. அதனால்தான், பேரிடர் காலங்களில் மற்றவர்களைவிடுத்து நட்சத்திரங்களை குறி வைத்து தாக்குகிறார்கள். ஏனென்றால், அவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் முன் நின்று தீர்வு காண வேண்டிய சர்வரோக நிவாரணிகள்

Also read... திரைப்படங்களில் லாஜிக் - மிஷ்கின் படத்தை முன்வைத்து ஒரு பார்வை...!

நடிகர்களை சக ஜீவிகளாக, அனைத்து பலவீனங்களும் கொண்ட மனிதர்களாக கருதும் மனதிலிருந்து, 'ஏன் நீ கொஞ்சமா கொடுத்த? நீ தமிழ்நாட்லதானே சம்பாதிக்கிற...' என்பது போன்ற வசவுகள் வருவதில்லை. நடிகர்களை நடிகர்களாக அல்லாமல் சர்வரோக நிவாரணியாக கருதும் பழுதுபட்ட மனங்களிலிருந்தே வசவுகள் கொட்டப்படுகின்றன. இதில் நாம் யார் என்பதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்!



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: