உரம் விலை கிடுகிடு உயர்வு - பஞ்சாப் விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

கோப்புப் படம்

ஒரு மூட்டை 50 கிலோ டி.ஏ.பி உரம் 1,200-லிருந்து 1900 ரூபாயாக உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கரீப் பருவம் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் டீசல் மற்றும் உர விலைகள் 50 விழுகாடுகளுக்கும் மேல் உயர்ந்துள்ளதால் பஞ்சாப் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகள் கரீப் பருவத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். அடுத்த மாதம் இந்தப் பருவம் தொடங்க உள்ள நிலையில் டி.ஏ.பி எனப்படும் டைமோனியம் பாஸ்பேட், நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாஷ் (NPK) உரங்கள் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஒரு மூட்டை 50 கிலோ டி.ஏ.பி உரம் 1,200-லிருந்து 1900 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1000 -1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட என்.பி.கே உரம் ஒரு மூட்டை 1,500 ரூபாயில் இருந்து 1,800 ரூபாய் விரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இரண்டு உரங்கள் முறையே சராசரியாக 46 முதல் 58 விழுகாடு விலை உயர்ந்துள்ளது. நெல் சாகுபடிக்காக பயன்படுத்தப்படும் இரண்டு உரங்களும் கடுமையான விலை உயர்வை சந்தித்திருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலைகள் நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு, உயர்த்தி வருகின்றன. கூடுதலாக உர விலைகளும் உயர்ந்திருப்பது கரீப் பருவ நெல் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான முதலீடுகளை விட கூடுதலான முதலீடுகளை இந்த ஆண்டு செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், ஏற்கனவே நெல், கரும்புக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உரம் வாங்குவதற்கு கூட முடியாத நிலையில் பல விவசாயிகள் இருப்பதால், நெல் நடவுகளை விட்டு கூலித் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பஞ்சாப் விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு நெல் பயிரிடும் சதவீதமும் குறையும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் தலையில் மத்திய அரசு மற்றும் உர நிறுவனங்கள் பேரிடியை இறக்கியிருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். பஞ்சாப்பை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதால், அவர்களுக்கு ஆதரவானவர்கள் மட்டுமே உரத்தை பெற முடியும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் விற்பனையாகும் உரத்தை வாங்குவதாகவும், தற்போது இந்த விலை உயர்வால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Also read... கொரோனா, கேன்சர் நோய்களுக்கு சிகிச்சையளிக்க நவீன தொழில்நுட்பம் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

இது குறித்து அரசு அதிகாரிகள் பேசும்போது, கரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் அரசின் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளனர். விவசாயத்துறை இயக்குநர் சுக்தேவ் சிங் கொடுத்துள்ள விளக்கத்தில், கரீப் பருவத்துக்கு 2.25 லட்சம் டன் உரம் தேவை இருப்பதாகவும், அரசிடம் 1.10 லட்சம் டன் தற்போது இருப்பு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். எஞ்சிய தேவைக்கு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிய அவர், அதனை கூடுதல் விலைக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளார். ஏற்கனவே இருப்பில் உள்ள உரம் பழைய விலைக்கு கொடுக்கப்படும் என்றும், புதிய உரங்கள் சந்தை மதிப்புக்கு மட்டுமே கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உரம் விலை உயர்வை தவிர்க்க முடியாத ஒன்று என உரம் தயாரிப்பு நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் உர மானியத்தை மத்திய அரசு உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்குவதால், விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை எனவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் முடிவுகள் சாதகமாக இருப்பதாக சாடியுள்ளனர். மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கையால் உரங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவதாகவும் பஞ்சாப் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: