''நாலே வாரத்தில் ரூ.4000 கோடி வசூல்''கொரோனா ஊரடங்கிற்கு பின் இத்தனை கோடி வசூலித்த முதல் படம் இதுதான்..

F9: The Fast Saga

Fast & Furious திரைப்படத்தின் 9வது பாகம் கிட்டத்திட்ட நான்கு வாரத்தில் 4000 கோடி வசூலித்துள்ளது.

  • Share this:
    கொரோனா நோய்த்தொற்று, ஊரடங்கு என்று உலகமே முடங்கிப் போன நிலையில், சில வாரங்களாகத்தான் சகஜநிலை திரும்பியுள்ளது. அதுவும் சில நாடுகளில். அமெரிக்காவில் இன்னும் நோய்த்தொற்று பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், திரையரங்குகள் செயல்படுகின்றன. இந்த வருடத்தின் உலகளாவிய முதல் ஹிட் என்றால் அது F9: The Fast Saga திரைப்படம். Fast & Furious சீரிஸின் ஒன்பதாவது பாகம் ஆகும்.

    Fast & Furious  முதல் பாகத்திலிருந்தே உலகம் முழுவதும் அதற்கு ரசிகர்கள் உருவானார்கள். ஏழாவது பாகம் இதனை தவிர்க்க முடியாத சீரிஸாக்கியது. மே 19 சில நாடுகளில் இதன் ஒன்பதாவது பாகமான F9: The Fast Saga வெளியானது. ஜுன் 25 யுஎஸ்ஸில் வெளியிட்டார்கள். நேற்றுவரை இப்படம் யுஎஸ்ஸில் சுமார் 141 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்த வருடம் வெளியான மற்றொரு படமான தி கொயட் பிளேஸ் 2 நேற்றுவரை 150 மில்லியன் டாலர்களைத் தாண்டி வசூலித்துள்ளது. அது ஏழு வாரங்களில் இந்தத் தொகையை வசூலித்தது என்றால் F9: The Fast Saga மூன்று வாரங்களில் இதனை சாதித்துள்ளது. இது யுஎஸ் நிலவரம்.

    உலக அளவில் எடுத்துக் கொண்டால் ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென்னமெரிக்காவில் சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் எப்9 வெளியாகியுள்ளது. யுஎஸ்ஸில் வசூல் 141 மில்லியன் டாலர்கள் என்றால் யுஎஸ் தவிர்த்த பிற நாடுகளில் இந்தப் படத்தின் வசூல் ஏறக்குறைய 401 மில்லியன் டாலர்கள். இதில் பாதிக்கு மேல் (203.8 மில்லியன் டாலர்கள்) சீனாவிலிருந்து கிடைத்துள்ளது. ஆக, நேற்றுவரை இதன் உலகளாவிய வசூல் சுமார் 542 மில்லியன் டாலர்கள். நமது ரூபாயில் சுமார் நான்காயிரம் கோடிகள். இந்தியாவில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் எப்9 இன்னும் இங்கு வெளியாகாமல் உள்ளது.

    கொரோனா, ஊரடங்கு என உலகம் ஸ்தம்பித்த பிறகு ஒரு திரைப்படம் இத்தனை அதிக கோடிகளை வசூலித்தது இதுவே முதல்முறை. படத்தின் பட்ஜெட் சுமார் 225 மில்லியன் டாலர்கள். அதனை வைத்துப் பார்க்கையில் இன்னும் 250 மில்லியன் டாலர்கள் வசூலித்தால்தான் படத்தை ஹிட் லிஸ்டில் சேர்க்க முடியும். இதற்கு முன்பு வந்த பாகங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த வசூலே.

    இந்த சீரிஸில் உலக அளவில் அதிகம் வசூலித்த படம் ஏழாவது பாகமான Furious 7. இந்தப் படம் உலக அளவில் 1.515 பில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்து, ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து எட்டாவது பாகமான The Fate of the Furious 1.236 பில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்து உலக அளவில் 19 வது இடத்தில் உள்ளது. ஆறாவது பாகமான Fast & Furious 6, 782 மில்லியன் டாலர்கள் வசூலித்து உலக அளவில் 97 வது இடத்தில் உள்ளது.

    Also read: நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம்.. நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுரை

    இந்த புள்ளி விவரங்களிலிருந்து 7 வது பாகமே பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் சீரிஸுக்கு உலக அளவில் பெரும் செல்வாக்கை உருவாக்கித் தந்ததை உணர முடியும். இந்தப் படத்தை ஜேஸ் வான் இயக்கியிருந்தார். மொத்த கிரெடிட்டும் அவரையே சாரும். தற்போது வெளியாகியிருக்கும் ஒன்பதாவது பாகம் ஏழாவது பாகத்தின் வசூலை நிச்சயம் தொடாப் போவதில்லை. எட்டாவது பாகத்தையும் எட்டப் போவதில்லை. ஆறாவது பாகத்தின் வசூலைத் தாண்டினாலே இந்த கொரோனா காலத்தில் பெரிய வெற்றிதான்.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: