மதம் மாறிட்டிங்களா?-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி!

அனு சித்தாரா

பிரபல மலையாள நடிகை அனு சித்தாராவிடம் ரசிகர் ஒருவர் மதம் மாறவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான் மனிதனாக மாறிவிட்டேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

  • Share this:
மதச்சார்பின்மை நாடான இந்தியாவில் இனம், மொழி, மதம் என எவ்வித பேதங்களின்றி மக்கள் ஒன்றிணையும் இடம் திரையரங்கம் தான். எந்த பாகுபாடின்றி திறமையின் அடிப்படையிலேயே நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைக்கலைஞர்களை ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.இதனை மனதில் வைத்தே கலைஞர்களும், எல்லாவித மதம் சார்ந்த விழாக்களுக்கு ரசிகர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மூடத்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குரான் வசனம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர், நான் உங்களை விரும்பியது, நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்தததனால் தான். இது மதத்தை பரப்பும் தளம் இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்தில் வெளியேறிவிடுவேன் என்றார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெளியேறிவிடுங்கள் என்றார். இதற்கு ரசிகர் ஒருவர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை பரப்புகிறார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக யுவன், ''நான் ஒரு இந்தியன், தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. மதமும் இனமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்துங்கள்'' என்றார். யுவனின் பதிலுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.

 

AlsoRead:பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காதல் திருமணம்!

இந்த விஷயம் அடங்கும் முன் மற்றொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் முஸ்லீம் பெண் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அவரது ரசிகர்களுக்கு ரம்ஸான் வாழ்த்துகளை தெரிவித்தார். இதனையடுத்து ரசிகர் ஒருவர், மதம் மாறவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான் மனிதனாக மாறிவிட்டேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் அனு சித்தாரா, தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலம். தமிழில் 'பொது நலன் கருதி' என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளார். அவரது புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மாற்று மதத்தினர் தங்கள் பெயரை மாற்றி பொதுவான பெயரை வைத்துக்கொள்வர். மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பிருப்பிருப்பதாக கருதியதே அதற்கு காரணம். ஆனால் தற்போது வெளிப்படையாகவே மாற்று மதத்தினர் தங்களின் மத அடையாளங்களை வெளிக்காட்டிக்கொள்ளத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனையும் சிலர் பிற்போக்குத்தனமான விமர்சனங்களால் காயப்படுத்தி வருவது வேதனையளிக்கிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: