• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அடுத்தவங்களை தாழ்த்தி பேசாதீர்கள்: ஜெய்பீம் சர்ச்சை குறித்து நடிகர் சந்தானம் பேச்சு

அடுத்தவங்களை தாழ்த்தி பேசாதீர்கள்: ஜெய்பீம் சர்ச்சை குறித்து நடிகர் சந்தானம் பேச்சு

யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என ஜெய்பீம் சர்ச்சை குறித்து நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

    இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.

    எனினும், நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர், வன்னியர் சங்கங்கள் தொடர்ந்து, சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, திரைத்துறையினர் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என நடிகர் சந்தானம் ஜெய்பீம் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவ.19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய்பீம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜெய்பீம் படமென்று இல்லை, எந்த படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம் அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசக்கூடாது.

    யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேச கூடாது. இதுதான் என் கருத்து. எனென்றால், சினிமா என்பது 2 மணி நேரம் எல்லா மதத்தினரும், ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது.

    உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம். இனி வரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும்.

    2 மணிநேரம் செலவழித்து கவலைகளை மறந்து ஜாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாக தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்ள வேண்டியதை திருத்திக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: