Home /News /entertainment /

2 நாட்களில் 3 முறை பார்த்தேன்... கவிதையைப் போன்ற திரைக்காவியம் `96’: திருச்சி சிவா

2 நாட்களில் 3 முறை பார்த்தேன்... கவிதையைப் போன்ற திரைக்காவியம் `96’: திருச்சி சிவா

திருச்சி சிவா

திருச்சி சிவா

 • News18
 • 3 minute read
 • Last Updated :
  `96’ படத்தை பார்த்த திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா படத்தை வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

  இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருக்கும் படம் 96. கடந்த வார இறுதியில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

  “என்னுடைய இத்தனை வயதில் மூன்று நாட்களுக்குள் ஒரு திரைப்படத்தை இரண்டாவது முறை பார்த்திருக்கிறேன். இயக்குநர் பிரேம்குமாரின் திறமையில் வெளிவந்திருக்கும் ‘96 திரைப்படம். ஒரு படத்திற்கு எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையிலும் முத்திரை பதிக்கக்கூடிய தனித்துவம். இயக்கம், நடிப்பு, வசனம், கேமரா, இசை என எல்லாமே தனித்துவமாக இருக்கிறது.

  குறைவான வசனங்கள், நடிகர்களின் யதார்த்தமான உணர்ச்சி வெளிப்பாடுகள் (Expression) படப்பிடிப்பும், காட்சி அமைப்பும், நீண்ட தூர பேச்சில்லாத நடைகளும் கூட வசனம் இல்லாமலே நிறைய சொல்லுகின்றன. பாத்திரங்களின் உணர்ச்சிகள் எளிதாக, இயல்பாக நம்முடையதாகின்றன. காலை 5-50 க்கு சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல வேண்டுமென்று இரவு 10 மணியளவில் கதாநாயகி சொல்கிறபோது இடைவேளை. கதைக்கு மீதமுள்ள சுமார எட்டு மணி நேர நிகழ்வுகளை இடைவேளைக்குப் பின்னால் ஒண்ணேகால் மணி நேரம் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பு இயக்குநருடையதாகிறது. (Unity of time). இதில் முழுவெற்றி பெற்று காட்டுகிறார் பிரேம்குமார்.

  கதாநாயகி காரிலிருந்து இறங்கி, தங்கும் விடுதியின் வரவேற்பறை முழுதும் நடந்து, லிஃப்டில் பயணித்து, வராண்டாவை கடந்து , அறைக்குள் நுழைந்து, உட்கார்ந்து, கொஞ்ச நேரம் யோசித்து இத்தனை நேரமும் வசனமே இல்லை. திரிஷாவின் முகமும், நடிப்பும், காமராவுமே பத்து பக்க வசனங்களுக்கு சமம்.  “ரொம்ப தூரம் போயிட்டியா?” என்ற ஜானுவின் கேள்விக்கு, “ உன்னை விட்ட இடத்திலேயே நிற்கிறேன்” என்கிற பதில் காட்சிக்கு பொருத்தமானதாக மட்டும் இல்லாமல் இருபது வருடங்கள் இருவரின் மனதிற்குள் இருந்த கேள்வியாகவும், விடையாகவும் வெளிப்படுகின்றது. இயல்பான நடிப்பில், யாரும் தொடமுடியாத உயரத்தில் விஜயசேதுபதி. சாவித்திரி, வைஜயந்திமாலா, தேவிகாவைப் போல உண்டா என்று பேசுபவர்களைக் கூட ஏற்றுக்கொள்ள வைக்கும் த்ரிஷாவின் இயல்பாக பலவிதமான உணர்ச்சிகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் அற்புதமான நடிப்பு. காட்சிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உடனுக்குடன் மாறும் முகபாவம்.

  இருவரின் இளவயது பாத்திரமேற்று நடிக்கும் கௌரி, ஆதித்தன் ஆகியோர் தேர்ந்த நடிகர்களைப் போல் உணர்ச்சிகளை பேசாமலே கண்களாலும், பாவங்களாலும் வெளிப்படுத்துவது இருவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. கௌரி இன்னொரு ரேவதியாக வலம் வருவார். பின்னணி இசை இல்லாமல் ஜானகியின் பாடல்களை பாடும்போது அந்த முகபாவம் அற்புதம். இதற்குமேல் படத்தைப் பற்றி விவரிப்பது இனி பார்க்க வருபவர்களின் ஆச்சர்யங்களையும், சிலிர்ப்பையும் குறைத்து விடும்.

  உழைப்பிற்கும், அதன் விளைவாக உருவாகும் உன்னதமான படைப்பிற்கும் அங்கீகாரமும், பாராட்டும் தருவதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்ததன் விளைவே 96 படம் குறித்த இந்த என் பதிவு. ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் ஏராளமான பட்டாசு சத்தமும் இல்லாமல் வெளியாகியிருக்கும் ஒரு இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் இது.

  “நீ முதன்முதலாக புடவை கட்டி வந்தபோது எப்படி இருந்தாய் தெரியுமா” என்று விஜயசேதுபதி கூறுகிறபோது “எப்படி” என்பதை ஆச்சரியமும் , எதிர்பார்ப்பும், உற்சாகமும் கலந்த முக்க்குறிப்பால் த்ரிஷா கேட்கிற ஒரு காட்சி போதும். இந்த படம் பல தேசிய விருதுகளை பெற தகுதியானது. குறிப்பாக விஜயசேதுபதி, த்ரிஷா, கௌரி ஆகியோரின் நடிப்பு.

  இயக்குநர் தம்பி பிரேம்குமார் தஞ்சையில் பிறந்து, திருச்சியில் வளர்ந்த கலை இலக்கியம் வளர்த்த சோழமண்ணின் மைந்தன்.பள்ளி, கல்லூரி காலத்தின் மறக்க முடியாத நண்பர்களோ, நபர்களோ , பசுமையான நினைவுகளோ எல்லோர் மனதிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீரும். என்றால் இந்த படம் ஒரு தென்றலாய் அவர்களின் நெஞ்சினை நினைவினை வருடிடும். ஒருநாள் தூக்கம் தொலைந்திடும்.

  பல முன்னாள் மாணவர்கள் சங்கம்ம் நிகழ்ந்திடும். காணத்துடித்த சில உயிர்களை காணுகின்ற ஆர்வம் மீண்டும் துளிர்த்திடும்.
  வாழ்க்கை வெறும் பொருளால் ஆனதல்ல. மனிதர்களாலும் சில அற்புதமான உறவுகளாலும், உன்னதமான நினைவுகளாலும் ஆனது என்பதை உணர்த்திடும் திரைப்படம் ‘96.’’ இவ்வாறு திருச்சி சிவா பதிவிட்டுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: 96 movie, Facebook Post, Trichi siva, Trisha, Vijay sethupathi

  அடுத்த செய்தி