• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? : பாஜக காயத்ரி ரகுராம்

திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? : பாஜக காயத்ரி ரகுராம்

''உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன்'' என்று சூர்யாவை காயத்ரி ரகுராம் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

 • Share this:
  திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன் என்று பாஜகவின் கலை மற்றும் கலாசார பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். அவரது சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

  சூரியா நடித்த படங்களிலேயே அதிக வரவேற்பையும், சர்ச்சையையும், விளைவுகளையும் ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பழங்குடி மக்களின் மீது அதிகாரம் எப்படி ஒடுக்குமுறையை செலுத்துகிறது, அதை அவர்கள் சட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் ஜெய்பீம் உருவாக்கப்பட்டுள்ளது.

  உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, கதாநாயகனை விட கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தில் சூரியா வக்கீல் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டி வரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை படம் அவதூறு செய்வதாக பாமக தரப்பில் விமர்சிக்கப்பட்டது.

  இதையடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி ஒன்று ஜெய் பீம் படத்திலிருந்து நீக்கப்பட்டது. பழங்குடி மக்களின் அவதியை உலகுக்கு தெரியப்படுத்திய இந்த படத்தை தொடர்ந்து, அந்த மக்கள் மீது அரசு கவனம் செலுத்தியது.

  கடந்த 4-ம்தேதி, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா முதல்வர், எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறியிருந்தார்.

  இதன் தொடர்ச்சியாக காவல்துறை சித்ரவதையில் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறியிருக்கிறார். இவரது வாழ்க்கையும் போராட்டமும்தான் ஜெய்பீம் படத்தின் மையக்கருவாக அமைந்தது. இதுகுறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கையில், 'மறைந்த ராஜாக்கண்ணுவின் துணைவியார் பார்வதி அம்மாளுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமைக் காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதி அம்மாளின் பெயரில் பத்து லட்ச ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும், அவர் பெற்றுக்கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.' என்று கூறியிருந்தார். சூரியாவின் அடுத்தடுத்த அதிரடி பதிவுகளால் உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் சூர்யாவின் ரூ. 10 லட்சம் வழங்கும் பதிவை மேற்கோள் காட்டி பாஜக கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி... திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன். why tension? Cool..' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Abdul Musthak
  First published: